
மனமே! உன்னுடன் சில நிமிடங்கள்… (உடல் நலத்திற்கான வழிகாட்டி)
ஆசிரியர்:முனைவர் கு.நித்யானந்தன்.
வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்,
எண்.17,பாய்க்காரத் தெரு,உறையூர், திருச்சி – 620 003.
94432 84823
பக்கங்கள்:192
விலை ரூ.250.00
பொதுவாக நாம் உடல் நலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிய அளவு கூட மனநலத்திற்கு தருவதில்லை.உடல் நலம் பற்றி அறிய சோதனைக் கூடங்கள் உள்ளன. என்ன பிரச்சனை… எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது? என்பதை ஓரளவுக்கு துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். மனதைப் பற்றி அறிந்து கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல.மனம் என்றால் என்ன?அது எங்கே இருக்கிறது? எப்படி இயங்குகிறது? அதைப் பார்க்க முடியுமா?மனதில் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? அவற்றுக்கான தீர்வுகள் என்ன? மருத்துவ அறிவியல் அடிப்படையில் தெளிவான விளக்கம் தந்திருக்கிறார் முனைவர் கு. நித்தியானந்தன்.
மன உளைச்சல்,மன அழுத்தம், மனப்பதற்றம், விரக்தி போன்றவை எப்படி மனித வாழ்க்கையை பாதிக்கிறது… அதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை அக்கறையோடு விளக்கி இருக்கிறது இந்த நூல்.மன நோய்களில் மிகவும் சிக்கலானது மனச் சிதைவு பாதிப்பு. இதிலிருந்து விடுபடுவதற்கான பயனுள்ள யோசனைகள் இந்த நூலில் உள்ளன.
தம்பதியர் நலம், குழந்தை வளர்ப்பு, ஆட்டிச குழந்தைகளை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு அவர்களை மீட்பதற்கான வழிகள் உட்பட பல்வேறு மனநல விழிப்புணர்வு கருத்துக்கள் மனதை கவரும் விதத்தில் தரப்பட்டுள்ளன.
சாதிய பாகுபாட்டால் எப்படிப்பட்ட மனநல பாதிப்புகள் வரும் என்பதை துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார். பொதுவாக மனநலம்,உளவியல் நிபுணர்கள் சாதியால் வரக்கூடிய மனநல பாதிப்புகளை எவரும் தொட்டுப் பேசுவதில்லை.
இந்த நூலின் ஆசிரியர் நித்தியானந்தன் ஈழத்தைச் சேர்ந்தவர். இவரது படைப்புகள் மனிதநேயமிக்கதாகவும் சமூக அக்கறை கொண்டதாகவும் உள்ளது பாராட்டுத்தக்கது.
-டாக்டர்.ஜி.ரா.

