-ஷைலஜா விஜயா.

ன அழுத்தம் முடி வளர்ச்சிக்கு நல்லதல்ல. ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும். மன அழுத்தத்துக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கலாம்.மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நமது எண்ணெய் சுரப்பிகள் சீபம் என்கிற எண்ணெயை அதிகமாகச் சுரக்கும்.

அதே போல மன அழுத்தமும் கோபமும் அதிகமாக இருக்கும் போது ரத்த நாளங்கள் சுருங்கி விடும்.அப்போது முடியின் வேர்களுக்குப் போகிற ரத்த ஓட்டம் தடைப்படும்.வெறும் 5, 10 நிமிடங்கள் தடைப்பட்டாலே அது முடி உதிர்வுக்குக் காரணமாகும்.முதல்நாள் அளவுக்கதிக மன அழுத்தத்தில் இருந்து விட்டு,மறுநாள் தலை வாரும் போது முடி கொட்டலாம்.

* முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் முறையான பராமரிப்பின்மை. தினசரி தலைக்குக் குளிப்பது மிக முக்கியம்.இன்று சுற்றுப்புற சூழல் மாசு எக்கச்சக்கம்.வீட்டை விட்டு வெளியே போகிற எல்லோரும் தினசரி தலைக்குக் குளித்தாக வேண்டும்.

வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளித்தால் போதுமானது. வேலைச் சுமை, டென்ஷன் காரணமாக தலையில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும். தூசும் மாசும் அத்துடன் சேர்ந்து கொள்ள இரண்டும்
கலந்து மண்டையின் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். காலையில் குளிக்க நேரமில்லாவிட்டாலும், இரவிலாவது குளிக்க வேண்டும்.

* நீளமான கூந்தல் அழகுதான்.ஆனால், அதைப் பராமரிக்க நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு அது அனாவசியமானது. பரபரப்பான லைஃப் ஸ்டைலில் இருப்பவர்கள் நீளமான கூந்தலைத் தவிர்த்து, அளவோடு வெட்டிக் கொள்வதே சிறந்தது.

நீளக் கூந்தலைப் பராமரிக்க முடியாமல் அப்படியே கட்டிக் கொண்டோ, கொண்டை போட்டுக் கொண்டோ போவார்கள்.உள்ளே சிடுக்கு அப்படியே நிற்கும். ஒரு முடியில் உள்ள ஒரு சிடுக்கானது நல்லவிதமாக இருக்கும் பத்து முடிகளை சேர்த்து இழுத்துக் கொண்டு வரும்.வீட்டில் வந்து தலையை வாரும் போது பார்த்தால் கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதைப் பார்க்கலாம்.

* எண்ணெய் பசையான மண்டைப் பகுதியைக் கொண்டவர்கள் தினசரி தலைக் குளிக்க கெமிக்கல் தவிர்த்து சீயக்காய் அல்லது முட்டை கலந்த ஷாம்பு உகந்தது.வறண்ட மண்டைப் பகுதி உடையவர்கள் மாயிச்சரைசிங் ஷாம்பு உபயோகிக்கலாம். எடுக்கவே கூடாத ஷாம்பு என்றால் கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய வால்யூமைசர் ஷாம்பு.

* தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லேவண்டர் ஆயிலும், 3 சொட்டு லெமன் கிராஸ் ஆயிலும் கலந்து தலைக்குக் குளித்தால் உங்கள் கூந்தலில் சிடுக்கு உண்டாகாது. இயற்கையான பளபளப்பு வரும்.