
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D.உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி
(தன்னாட்சி), கோயம்புத்தூர்.
நமது ஆரோக்கியம் நம்மைச் சுற்றியுள்ள சிறுசிறு மூலிகைகளின் கைகளிலேயே உள்ளது என்பதை ஒட்டியே இத்தொடரில் நாம் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு மூலிகையை குறித்து அறிந்து வருகிறோம்.
அதிக புரதச்சத்திற்கும், நார்ச்சத்திற்கும், வைட்டமின்களுக்கும் பெயர் பெற்ற பாதாம் விதைகளை நாம் நன்கு அறிவோம்.இது உடல் எடையை நன்கு பராமரிக்கவும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், தோலின் ஆரோக்கியத்திற்கும் அதிக அளவில் உட்கொள்ளப் படுகிறது. இவ்விதைகளில் உள்ள அதீத இரும்புச் சத்தின் காரணமாக பெண்களின் உடல் நிலை மேம்படுவதற்கு, அன்றாட உணவுப் பொருட்களின் ஒன்றாகவே மாறிவிட்டது.
ஆனால்,பாதாம் மரம் இதற்கு மட்டும் பெயர் பெற்றது அல்ல. அந்த மரத்திலிருந்து உருவாகும் கோந்து பொருள் பாதாம் பிசின் என அழைக்கப்படுகிறது. இது இனிப்பு பாதாம் மரத்தின் ( ரூனஸ் அமிக்டாலஸ்) பட்டையிலிருந்து கசியும் ஒரு இயற்கையான, உண்ணக்கூடிய பிசின் ஆகும். நாம் இதற்கு முன்னர் பார்த்த பெருங்காயம் போலவே இந்த பிசினும் பண்டைய காலத்தில் (ஏறத்தாழ கி.மு. 3000)மத்திய தரைக் கடல் பகுதியில் தோன்றி, அதாவது தற்கால ஈரான் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் தோன்றி, பின்னர் உலக அளவில் அதன் மருத்துவ குணத்திற்காகவும் மற்றும் பிற தன்மைகளுக்காகவும் பரவி, இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக மாற்றமடைந்துள்ளது.

3000 ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தான் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டு வரும் ஒரு பழமையான தாவர மூலமாக அறியப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தெற்காசியா மற்றும் இந்திய சமையல்களில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான நகரமான மதுரை என்ற பெயரை கேட்டாலே ஜிகர்தண்டா தான் நம் நினைவிற்கு வரும்.அந்த ஜிகர்தண்டாவின் சுவையைக் கூட்டும் முக்கிய இடுப்பொருளாக உள்ளதும் இந்த பாதாம் பிசினே.
அத்தகைய பாதாம் பிசின்,மரத்தின் பட்டைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும் போதும் அல்லது காயமடையும் போதும், தாவர தற்காப்பிற்காக சுரக்கப்படும் ஒரு பிசுபிசுப்பான திரவமாகும். இத்திரவமானது சாறு போன்று ஆனால் ஒளி ஊடுருவக்கூடிய சற்றே அடர்மான பொருளாக இருக்கும்.இவை காயும்போது பழுப்பு நிற படிகங்களாக மாறுகிறது. இதையே பாதாம் பிசின் என அழைக்கிறோம்.
மேலும் ஆச்சரியப்படக்கூடிய செய்தி என்னவென்றால் மத்திய தரைக்கடல் பகுதிகளில் தோன்றியிருந்தாலும் இந்தியாவின் மிக முக்கிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திலும் பாதாம் பிசின் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. காரணம் இதன் குளிர்ச்சியூட்டும் தன்மையாகும். உடல் சூட்டை தணித்து குளிர்விக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சீரான நீர் உறிஞ்சுதளின் காரணமாக உடைபட்டு மென்மையான பொருளாக உருமாற்றம் அடைவதால், ஐஸ்கிரீம்,பழ ஜூஸ், ஃபாலூடா மற்றும் ஜிகர்தண்டா போன்ற வற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் போது சீரான சுவையை கொடுக்கிறது.
அதன் சக்திவாய்ந்த குளிர்ச்சி மற்றும் நீரேற்றும் பண்புகளுக்காகப் பரவலாகப் போற்றப்படும் இது, தண்ணீரில் ஊறவைக்கும்போது ஜெல்லி போன்ற பதத்திற்கு உப்பும் என்பதால், பாரம்பரியமாகப் புத்துணர்ச்சியூட்டும் கோடைகாலப் பானங்கள் மற்றும் இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உடல் வெப்பநிலையை சீராக்கி, நீர்ச்சத்து வறட்சியை தடுத்து, வெப்ப தாக்கத்திலிருந்து உடலை காக்கிறது. இதன் இதமான ஜெல்லி போன்ற தன்மை வயிற்றின் உட்புறச் சுவரில் ஒரு படலமாக படர்வதால் அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், பாதாம் பிசின் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை உட்கொள்ளும் போது, வயிறு நிறைந்த உணர்வைத் தூண்டி, உணவு மீதான அதீத ஆசையைக் கட்டுப்படுத்தவும், உணவு அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது.
இதனாலேயே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பாதாம் பிசின் ஒரு அருமருந்தாகும்.
மேலும், இது ஒரு இயற்கையான டானிக் என்றும் சொல்லலாம்.
உணவு மற்றும் மருந்தை மென்மையாக்கி, வலிமையை அதிகரிக்கும் பொருளாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 92 சதவிகிதம் கரைபடு நார்ச்சத்தை உள்ளடக்கி இருப்பதால் ‘ஃபங்ஷனல் ஃபுட்’ எனவும் அழைக்கப்படுகிறது. நுன்னூட்ட சத்துகளில் மிக முக்கியமாக கால்சியம், பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதாக அறியப்படுகிறது.
கார அமிலத்தன்மைகளில் இது நடுநிலையாக 6.5 முதல் 7.2 வரை இருப்பதால் வயிற்றுக்கு இதமானதாகவும், 80 டிகிரி செல்சியஸ் வரை சூடால் ஏற்படும் நிலை தன்மையில் மாறுபாடற்றதாகவும், அதிக நீரை உறிஞ்சும் தன்மைக்காகவும், சரியான விகிதத்தில் ஊற வைக்கப்பட்டால் 10 முதல் 15 மடங்கு அளவில் அதிகரிக்கும் என்பதாலுமே பாதாம் பிசின் உணவு மற்றும் மருந்து தொழிற்சாலைகளின் மிக முக்கிய உள்ளீட்டு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இது பெண்கள் நலம் காக்கவும் உதவுகிறது. குறிப்பாக பிரசவத்திற்குப் பிந்தைய ஆரோக்கிய மீட்பு காலத்தில் தாய்மார்கள் உடல் வலிமையை மீண்டும் பெறவும், மாதவிடாய் ஆரோக்கியத்திற்கு உதவவும் பாரம்பரிய வைத்திய முறைகளில் பாதாம் பிசின் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக தாவர அடிப்படையிலான கொலாஜன் என்று அழைக்கப்படும் இது, சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்கி, தெளிவான மற்றும் பொலிவான சரும நிறத்தை மேம்படுத்தப் பயன்படுகிறது.
மெலிந்த அல்லது எடை குறைந்தவர்களுக்கு ஆற்றல், சகிப்புத்தன்மை ஆகியவற்றை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு உதவவும்,பால் மற்றும் சர்க்கரையுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை துணை உணவாக, ஆரோக்கியமான எடை அதிகரிப்பு பொருளாக இது பாரம்பரியமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
ப்ரீபயாட்டிக்காக விளங்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய பாதாம் பிசின் பொதுவாக கடினமான,படிகம் போன்ற,பாறைத் துண்டுகளாகக் காணப்படுகிறது. வீடுகளில் மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகளில், இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கப்பட்டு மென்மையான ஜெல்லி போன்ற அமைப்பிலேயே பயன்படுத்தப்படுகிறது. நீரில் ஊரும் போது சமச்சீராக நீரை உறிஞ்சுவதால் ஊறிய பாதாம் பிசினானது ஒளி ஊடுருவக் கூடிய மென்மையான ஜெல்லி போன்று மாற்றம் அடைகிறது. இது காய்ந்த பாதாம் பிசினை விட மூன்று முதல் நான்கு மடங்கு வரை அளவில் அதிகரிக்கிறது.
இந்த ஜெல்லியை குளிர் பானங்களுடன் அல்லது பால் மற்றும் தேனுடன் சேர்த்தும் உண்ணலாம். பாதாம் பிசினுக்கு என தனியான சுவை எதுவும் கிடையாது. இதன் சுவையற்ற தன்மையே ஐஸ்கிரீம் ஜெல்லி புட்டிங் போன்ற நவீன உணவு வகைகளிலும் ஜிலேட்டினருக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஜிலாட்டின், கரோஜினன், கைடஸின் போன்ற வேதிப்பொருள் அல்லது விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்களே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதற்கான ஒரு சரியான மாற்று பொருளாக தாவரங்களிலிருந்து பெறப்படும் பாதாம் பிசின் அமைகிறது.
எல்லா மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்களைப் போலவே பாதாம் பிசினிலும் பல சமயங்களில் கலப்படம் காணப்படுகிறது. தவறான பாதாம் பிசினாக இருப்பின் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்தாலும் மத்திய பகுதி கடினமாகவே இருக்கும். சுவையற்ற மற்றும் நறுமணமற்ற பாதாம் பிசினே உண்மையானது. சுவையூட்டப்பட்ட சர்க்கரை கலக்கப்பட்ட தரம் குறைந்த பாதாம் பிசின்களும் சில சமயங்களில் விற்கப்படுகிறது. பாதாம் பிசின் வாங்கும்போது லேசாக சுவைத்து பார்த்து வாங்குவது நல்லது.
சரியான பாதாம் பிசினானது இயற்கையான சர்க்கரைகளான அரபினோஸ் மற்றும் கேலக்ஸி உள்ளடக்கி இருப்பதால் உடனடி சுவையைத் தராது. ஆனால், நிறைந்த தாதுக்களை கொண்டிருப்பதால் உடலுக்கு நலம் தரும்.
நவீன ஆராய்ச்சிகளின் மூலமாக பாதாம் பிசின், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மேல் பூச்சாக பூசப்பட்டால் அதன் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்துவதாக அறியப்படுகிறது. மேலும், பழங்கள் பழுப்பதை தாமதப்படுத்துகிறது. இத்தகைய பல்வேறு சிறப்புகளையும் பயன்களையும் உள்ளடக்கிய பாதாம் பிசினை நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய அளவு மிக முக்கியம்.
0.2% முதல் 0.5% வரை ஐஸ் கிரீம் போன்ற பொருட்களிலும், 0.5% முதல் 1.5% வரை அடுமனை பொருட்களில் மாவின் நெகிழ் தன்மையை அதிகரிக்கவும்,0.1% முதல் 0.3% வரை குளிர்பானங்களில் புளிப்புத் தன்மையை கட்டுப்படுத்தவும் மற்றும் 1.0% முதல் 2.0% வரை காய்கறி பழங்களை நனைத்து மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம். இந்த அளவுகளில் ஏதேனும் அதீதமாக பயன்படுத்தும்போது ஒவ்வாம்மையை உண்டாக்கலாம். குறிப்பாக தாவர விதைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் பிசினை மிகவும் குறைந்த அளவுடனே பயன்படுத்த வேண்டும்.
சரியான பாதாம் பிசினை கண்டறிந்து, சரியான முறையில் பயன்படுத்தி, அளவாக உட்கொண்டு, அருமையான உடல் நலனைப் பெற வாழ்த்துகள்.

