
“எவரெஸ்ட் உச்சியில் நின்றபோது, மனித வாழ்க்கை இயற்கைக்கு முன்பு ஒன்றுமே இல்லை என்ற உணர்வுதான் என்னுள் ஆழமாக பதிந்தது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் உண்மையான பலம் என்பதை அந்த மலை எனக்குக் கற்றுக்கொடுத்தது.”
மருத்துவம் என் தொழில். மனித உயிர்களைக் காப்பாற்றுவதுதான் என் அன்றாடப் பணி. ஆனால், இயற்கை என்னை வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது.
கொரோனா காலம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு காலகட்டம். மருத்துவமனையும் வீடும் தவிர வேறு உலகமே இல்லாத நாட்கள்.நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் போராட்டத்துக்கு நடுவே என் அப்பாவையும் இழந்தேன். மனதுக்குள் ஒரு வெறுமை இருந்தது. அந்த நேரத்தில்தான் இயற்கை என்னை அழைத்தது.
ஒரு தோழியுடன் சேர்ந்து சிறிய ட்ரெக்கிங் பயணத்தைத் தொடங்கினேன். பத்து நாட்கள் கூடாரத்தில் தங்கி, மலைகளுக்கு நடுவே, கைபேசி தொடர்பு இல்லாமல், கிடைத்த உணவை சாப்பிட்டு, கிடைத்த இடத்தில் உறங்கிய அந்த அனுபவம் என்னை முற்றிலும் மாற்றியது. நகர வாழ்க்கையின் சத்தத்திலிருந்து விலகி, இயற்கையின் அமைதிக்குள் நுழைந்தபோதுதான், மனம் எவ்வளவு லேசாக மாறுகிறது என்பதை உணர்ந்தேன்.
அந்த அனுபவம்தான் என்னை மீண்டும் மீண்டும் மலைகளுக்கே அழைத்துச் சென்றது. 2021-ஆம் ஆண்டு சந்தாக்பு மலையேற்றம், அதன்பிறகு கோபனரெட்டி மலை, பின்னர் ஆப்பிரிக்காவின் உயரமான சிகரமான கிலிமஞ்சாரோ… ஒவ்வொரு மலையையும் கடந்தபோதும், எவரெஸ்ட் என்ற கனவு என்னுள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டே இருந்தது.

ஆனால் எவரெஸ்ட் என்பது ஒரு கனவு மட்டுமல்ல; அதற்கான தகுதியையும் நிரூபிக்க வேண்டும். 3,000 மீட்டர் முதல் 8,000 மீட்டர் வரையிலான பல மலைகளை ஏறிய அனுபவம் அவசியம். நேபாளில் உள்ள உலகின் எட்டாவது உயரமான மனாஸ்லு மலையை வெற்றிகரமாக ஏறிய பிறகுதான், எவரெஸ்ட் ஏறுவதற்கான அனுமதி எனக்குக் கிடைத்தது.
அதற்குப் பிறகும் ஆறு மாதங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி, சகிப்புத்தன்மை பயிற்சி, மன உறுதி பயிற்சி என முழுமையாக என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். மருத்துவராக இருப்பதால் உடல் ஆரோக்கியம் குறித்த புரிதல் இருந்தாலும், மலையேற்றம் என்பது முற்றிலும் வேறுபட்ட உலகம். என்னுடைய பயிற்சியாளர் அளித்த வழிகாட்டுதல்தான் இந்தப் பயணத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது.
ஏப்ரல் 17-ஆம் தேதி எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்தோம். அங்கு ஒரு வாரம் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பிறகு கேம்ப் 1, கேம்ப் 2, கேம்ப் 3, கேம்ப் 4 என்று படிப்படியாக உயரத்தை நோக்கிப் பயணித்தோம். ஒவ்வொரு கட்டத்திலும் உடல்நிலை, ஆக்சிஜன் அளவு, சுவாசத் திறன் ஆகியவை கண்காணிக்கப்பட்ட பிறகே அடுத்த கட்டத்துக்குச் செல்ல அனுமதிப்பார்கள்.
நான்காவது கேம்பிலிருந்து உச்சியை நோக்கிய பயணம் இரவு நேரத்தில்தான் தொடங்கும். பனிக்காற்று, உறைய வைக்கும் குளிர், குறைந்து கொண்டே செல்லும் ஆக்சிஜன்… ஒவ்வொரு அடியும் ஒரு சவால்தான். சிலர் பத்து மணி நேரத்தில் உச்சியை அடைந்துவிடுவார்கள். ஆனால் எனக்கு பதின்மூன்று மணி நேரம் ஆனது.
இறுதியாக, மே 27-ஆம் தேதி காலையில் உலகின் மிக உயரமான இடத்தில் நான் நின்றிருந்தேன்.
அந்த நொடியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
முதலில், இவ்வளவு தூரம் என்னைப் பாதுகாப்பாக அழைத்து வந்த இயற்கைக்கு மனதார நன்றி சொன்னேன். இந்த மலைகளை மிதித்து நடந்ததற்கும், அறியாமல் செய்த தவறுகளுக்கும் என்னை மன்னிக்க வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தித்தேன்.
அதன்பிறகு என் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று என் வாழ்க்கையில் இடம்பிடித்த ஒவ்வொருவரையும் நினைத்துக்கொண்டேன். அந்தக் காட்சியை என் கண்களால் மட்டுமல்ல, என் மனதாலும் புகைப்படம் எடுத்தது போல நிரந்தரமாக பதித்துக்கொண்டேன்.
பின்னர் எங்கள் ஜிஜி மருத்துவமனையின் கொடியை உச்சியில் நாட்டினேன். அந்தக் கொடி, ஒரு மருத்துவமனையின் அடையாளம் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையின் அடையாளம்.
எவரெஸ்ட் எனக்குக் கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் பணிவு. நகர வாழ்க்கையில் நாம் பெரிதாக நினைக்கும் கோபம், போட்டி, ஆசை, எதிர்பார்ப்பு, பதவி, புகழ்… இவை அனைத்தும் அந்தப் பனிமலை முன் மிகவும் சிறியதாகத் தோன்றுகின்றன. இயற்கை நமக்கு தினமும் சொல்லிக்கொண்டிருக்கும் உண்மை என்னவென்றால், மனிதன் எப்போதும் இயற்கையின் ஒரு பகுதிதான்; அதைவிட பெரியவன் அல்ல.
எவரெஸ்ட் பயணத்தில் இன்னொரு உண்மை என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. அங்கு உயிரிழந்தவர்களின் உடலை கீழே கொண்டு வருவது மிகவும் கடினம். அதற்கான செலவும் மிக அதிகம். அதனால் பலரின் உடல்கள் அங்கேயே நிலைத்துவிடுகின்றன.
இந்தப் பயணத்திற்கு முன், எனக்கும் அப்படியான நிலை ஏற்பட்டால், மருத்துவமனையின் பொறுப்புகளை யார் தொடர வேண்டும் என்பதை முடிவு செய்து வைத்திருந்தேன். என் உடலை கீழே கொண்டு வர வேண்டாம் என்றும் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டேன். அந்த மனப்பக்குவத்தை எனக்கு அளித்தது மலையேற்றம்தான்.
இந்தப் பயணத்தின் போது குடும்பத்தினருடன் தொடர்ந்து பேச முடியவில்லை. இரண்டாவது கேம்ப் வரை மட்டுமே தொடர்பு இருந்தது. அதன் பிறகு பல நாட்கள் எந்தத் தொடர்பும் இல்லை. மூன்றாவது கேம்பை அடைந்தபோது, “விரைவில் உச்சியை அடையப் போகிறேன்” என்ற ஒரு தகவலை மட்டும் அனுப்பினேன். அந்த ஐந்து நாட்களும் என் குடும்பத்தினரின் பிரார்த்தனைகள்தான் என்னை பாதுகாப்பாக மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தது என்று நான் நம்புகிறேன்.
ஒரு வேடிக்கையான உண்மையையும் சொல்ல வேண்டும். உலகின் மிக உயரமான சிகரத்தில் நின்றபோது எனக்கு மிகவும் நினைவுக்கு வந்தது நம் ஊர் இட்லி, சாம்பார்தான்! இந்தியா திரும்பியவுடன் நான் முதலில் சாப்பிட்ட உணவும் அதுதான்.
இன்று பலரும் என்னிடம், “மீண்டும் எவரெஸ்ட் போவீர்களா?” என்று கேட்கிறார்கள்.
இப்போதைக்கு அதற்கான திட்டம் இல்லை. குடும்பத்தினரும் நண்பர்களும் இனி இதுபோன்ற ஆபத்தான பயணங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அன்புடன் வலியுறுத்துகிறார்கள்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி.
எவரெஸ்ட்டை நான் வென்றுவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். மாறாக, அந்த மலை என்னை மாற்றிவிட்டது என்பதே உண்மை.
இன்று வாழ்க்கையைப் பார்க்கும் என் பார்வை மாறியிருக்கிறது. மனிதர்களையும், உறவுகளையும், இயற்கையையும், வாழ்க்கையையும் இன்னும் ஆழமாக நேசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
எவரெஸ்ட் சிகரத்தில் நான் கண்ட மிகப்பெரிய வெற்றி, அந்த உயரத்தை அடைந்தது அல்ல…
வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்ததுதான்.

