
நினைத்தாலே உமிழ் நீரை சுரக்க செய்யும் சுவை ஒரு உணவு பண்டத்துக்கு உண்டா? நிச்சயம் உண்டு. அது ஊறுகாய்.
குளிர்சாதனப் பெட்டி எல்லாம் வராத காலத்தில் உணவை எதிர்கால தேவைக்கு பதப்படுத்தி வைக்க கண்டுபிடிக்கப்பட்ட வழிமுறைகள் அல்லது பதனப்படுத்தி வைத்தல் என்பது பழைய வாழ்வியல் முறை.
கோடையில் கடும் வெப்பம் நிலவும். அந்தக் காலங்களில் உணவு உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கும். குளிர்காலத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் உணவைப் பதப்படுத்தி வைத்தால்,அது கோடையில் உதவும் தானே! அதற்காகத்தான் பதப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்தார்கள். எலுமிச்சை, நெல்லி,மாங்காய்…
என ஏதோ ஒரு காய். அதை நன்றாக நறுக்கி,நிறைய உப்புச் சேர்த்து, தாளிதப் பொருள்களைக் கலந்து,எண்ணெய் ஊற்றி சில நாள்கள் வைத்திருந்தால் ஊறுகாய் ரெடி. இதைத் தனியே ஒரு ஜாடியில் வைத்திருந்தால் போதுமானது.எந்த தட்பவெப்ப நிலையிலும் இருக்கும். கைபடாமல் வைத்திருந்தால் வெகு நாள்களுக்குக் கெட்டுப் போகாது. தொலைதூரப் பயணங்களில் கை கொடுக்கும்.
ஊறுகாய் என்பது சாப்பிடும் போது தொட்டுக்கொள்ள உதவும்.நிறைய சாப்பிடலாம்.இதில் சில முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள்,ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. கல்லீரலைப் பாதுகாக்கும்; செரிமானத்தைச் சீராக்கும்.எலுமிச்சை, நார்த்தை,மாங்காய், நெல்லிக்காய்… என ஊறுகாயில் சேர்க்கப்படும் காய்களுக்கு ஏற்ப பலன்களும் மாறுபடும்.இதற்கு வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமும் உண்டு. அசைவத்திலும் இது தயாரிக்கப்படுகிறது. மீன், இறால் ஆகியவற்றில் எல்லாம் தயாரிக்கிறார்கள்.15 கிராம் மாங்காய் ஊறுகாயில் 38 கலோரிகள், கார்போஹைட்ரேட் 10 மி.கிராம்,சோடியம் 1மி.கிராம்,சர்க்கரை 9 கிராம் உள்ளன. இவை தவிர வைட்டமின் சி, வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.
சமைக்காமல் பதப்படுத்தி வைத்திருப்பதால், இயல்பாகவே இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம்.இவை, நம் உடலை பாதிக்கும் மோசமான ஃப்ரீராடிக்கல்ஸிடம் (Free radicals) இருந்து பாதுகாக்கும்.
அதே நேரத்தில் தொடர்ந்து அல்லது அதிக அளவில் இதை உட்கொள்வதும் உடலுக்கு நல்லதல்ல. அளவுக்கு அதிகமாக இதைச் சாப்பிடுவது செரிமானத்தைப் பாதிக்கும். வயிற்றுக்கோளாறுகள்,வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் ஊறுகாயைச் சாப்பிடக் கூடாது. இதில் சோடியத்தின் அளவு அதிகம் என்பதால்,அதிக அளவில் சாப்பிடும்போது சிறுநீர் வெளியேறாமல் தேங்கிவிடும் அபாயமும் உண்டு. வயிற்று உப்புசம் சிலருக்கு உண்டாகலாம்.இதில் உப்பு அதிகம் சேர்ப்பார்கள்.
எனவே,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயைச் சாப்பிடக் கூடாது. அதேபோல் இது சிறுநீரகங்களுக்கு அதிகம் வேலை வைக்கும் ஓர் உணவு. அதாவது அதிகப்படியான உப்பை சிறுநீரகம் வெளியேற்றவேண்டிய நிலை ஏற்படும். எனவே,ஊறுகாய் என்பது தொட்டுக்கொள்ள மட்டும்தான் என்கிற எண்ணத்தோடு அளவாகச் சாப்பிடுவது நல்லது. அதிலும்,கடைகளில் விற்பதை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவதே நல்லது.அவை கெடாமல் இருக்கக் கலக்கப்படும் சேர்மானங்கள் நமக்கு ஆரோக்கியமானதல்ல.வீட்டில் தயாரித்த சுத்தமான ஊறுகாயை, அளவாக சேர்த்துக்கொண்டால் என்றுமே ஆபத்தில்லை.
-டாக்டர்.பி.அருண், சித்த மருத்துவர்.

