காயகல்பம் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் கிளுகிளுப்பாக வாழலாம் என்று பலரும் நம்புகின்றனர். காயகல்பம் என்பது ‘அந்த’ விஷயத்தில் தடாலடி செய்யும் மருந்து அல்ல;அது முதுமையில் ஏற்படும் வயோதிக மாற்றங்களை,உடலின் நோயாக மாறாமல் காப்பவை. அதேபோல் அவை ஏழு மலைகள் தாண்டி ஏழு கடல்கள் தாண்டினால் மட்டுமே கிடைக்கும் விலை உயர்ந்த அமிர்தமும் அல்ல.சின்னச் சின்னக் கல்பங்களை வீட்டிலேயே செய்ய முடியும்.

*சின்னச் சின்ன இஞ்சித் துண்டுகளை தேனில் ஊறவைத்து, தினம் காலை உணவுக்கு முன்னர் சாப்பிடலாம்.

*நெல்லியை லேசாக ஆவியில் வேகவைத்து, பின்னர் குண்டூசியால் சிறு சிறு துளைகள் இட்டு,தேனில்
ஊறவைக்கலாம். அதை தினமும் காலை உணவுக்கு முன்னர் சாப்பிடலாம்.

*கரிசாலை கீரையை நிழலில் உலர்த்தி, பொடி செய்து,½டீஸ்பூன் அளவு தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

*கடுக்காய் விதையை நீக்கி, பொடி செய்து இரவில் 1 தேக்கரண்டி சாப்பிடுவது. முதுமையில் பல நோய்கள் வராது காக்க உதவும்.

*ஓர் இதழ் தாமரை – சித்த மருத்துவரிடம் அடையாளம் காட்டிப் பெற்று,அதன் உலர்ந்த பொடியை, ½ டீஸ்பூன் அளவு காலை உணவுக்கு முன்னர் பாலில் கலந்து சாப்பிடலாம்.

*வாரம் ஒரு நாள் கீழாநெல்லியை மோரில் அரைத்து ½ டீஸ்பூன் அளவு உணவுக்கு முன் சாப்பிடலாம்.

இவை எல்லாமே எனக்குக் கிடைக்குமே!என அனைத்தையும் ஒரு கலக்குக் கலக்கிச் சாப்பிடுவது அதிகப் பிரசங்கித்தனம் மட்டும் அல்ல… ஆபத்தும்கூட. ஏதேனும் நோய்க்கான சிகிச்சையில் இருப்பின்,சித்த மருத்துவர் ஆலோசனைக்குப் பின்னரே கல்பம் சாப்பிடுவது நல்லது.

காயகல்பம் உடலை உறுதியாக்கும்.முதுமையை தள்ளிப்போடும்.இளமை ஊஞ்சல் ஆடும்.