
*பாம்பு கடித்து பிழைத்தவனும் உண்டு… செருப்பு கடித்து இறந்தவனும் உண்டு! என்ற பழமொழி சர்க்கரை நோயாளிகளுக்கு சரியாக பொருந்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு காலிலேயே கண்டம்… செருப்பு தான் கவசம்.
*செருப்பு பல் இல்லாமலேயே கிடைக்கும்! சீப்பு பல் இருந்தும் கிடைக்காது.
*காலுக்கு செருப்பு இல்லையென்று அழுது கொண்டிருந்தேன்… காலே இல்லாதவனை பார்க்கும் வரை… என்றார் ஒரு கவிஞர்!
*சர்க்கரை பாதிப்பு, தொழுநோய்,புற நரம்பு மண்டல நோய் உள்ளவர்களுக்கு வலி தெரியாததால், காலில் சிறிய காயம் வந்தால் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.எனவே காலில் காயம் ஏற்படாமல் இருக்க சிறப்பு காலணிகளை அணிய வேண்டும்.
*பெண்கள் விரும்பும் ஹை ஹீல்ஸ் எனப்படும் குதிகால் உயர்ந்த செருப்புகளால் நடக்க சிரமப்படுவார்கள். பழக்கம் இல்லாமல் நடந்தால் கீழே விழவும் வாய்ப்பு உண்டு.நீண்ட நாட்கள் பயன்படுத்தி வந்தால் இடுப்பு மற்றும் முதுகு வலியும் வரலாம்.
*தொடர்ச்சியாக செருப்பு அணிந்து வந்தால்… கால் வெடிப்பு,காயம், சேற்றுப்புண்,ஆணி, வயிற்றில் கீரிப்பூச்சி, பூசண நோய்கள் போன்ற 40 வகையான நோய்களை தவிர்க்கலாம்.
*அக்குபிரஷர் சிகிச்சை முறையிலான செருப்பு அணிந்தால் காலில் உள்ள வலியை குணப்படுத்த முடியும். உடலில் பல நோய்களை தீர்க்கவும் உதவும்.
*ஸ்லீப்பர் காலணிகள் பாதங்கள் எளிதில் உள்ளே நுழைய வடிவமைக்கப்பட்டவை. விலையும் மலிவு.
*மருத்துவ காரணங்களுக்காக அணியப்படும் செருப்புகளில் மென்மையான எம்.சி.ஆர், எம்.சி.பி,பாலிலயுறுத்தீன் போம் போன்ற பொருட்களால் உறுத்தல் இல்லாத மென்மையான பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
*நடனம் ஆடுவதற்காக பாயின்டி,பாலட் ஷு, கில்லி ஜாஸ்,டாஸ்கோ, பால் ரூம் என பலவகையான ஷூக்கள் விற்பனையாகின்றன.
*சரியான ஷூ என்பது காலுக்கு இதமாகவும், மிக இறுக்கமாகவோ தளர்வாகவோ இல்லாமல் நடக்கும் போது வசதியாகவும் உறுத்தாமலும் அழகாகவும் விலை நியாயமாகவும் நீண்ட நாள் உழைப்பதாகவும்… காலை கடிக்காமலும் கையை கடிக்காமலும் இருக்க வேண்டும்.
*உடலில் எந்த ஒரு தனி உறுப்பையும் விட அதிகமான,சின்ன சின்ன எலும்புகள் உடலின் எடையை தாங்கும் விதத்தில் பாதத்தில் இருப்பதால்,பாத பாதுகாப்பு மிக முக்கியம். இதில் அலட்சியமோ தாமதமோ கூடாது.
*காலணி தேய்ந்து விட்டாலோ,தொந்தரவாக இருந்தாலோ உடனே புது காலணியை வாங்க வேண்டும்.வேண்டாத, வீணான செலவாக நினைக்கக் கூடாது.
*கிராமப்புறங்களில் இன்றும் கூட காலணி அணிவதை தவிர்க்கிறார்கள்சோறு போடும் பூமியை தெய்வமாக வணங்கி மரியாதை செலுத்துகிறார்கள்… காலணி பூமி மாதாவுக்கு அவமரியாதை என்ற எண்ணம் உள்ளது.
*பூமித் தாயை மதிப்பது என்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது தான். அதே நேரத்தில் உடல் நலம் முக்கியம்.காலணி அணிவதால் பூமித்தாய்க்கு அவமானம், அசிங்கம் என்று கருத வேண்டியதில்லை.
*முன்னோர்கள் காலணி அணியாமல் நடந்தார்கள்… அதுதான் பூமித் தாய்க்கு நாம் செய்யும் மரியாதை என்று வாழ்ந்தால் தொற்று நோய்கள் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
*தட்டையான பாதங்கள் உருவாகாமல் தடுக்க குழந்தைகளை வெறும் காலில் மணலில் தாராளமாக விளையாட அனுமதியுங்கள்.
*குளிர்காலத்தில் பாதத்தை முழுக்க மூடியும், வெயில் காலங்களில் காற்றோட்டத்துடனும், மழைக்காலங்களில் ஈரத்தை தாங்கும்படியான காலணிகள் அணிவது முக்கியம்.
*காலுறைகளை(சாக்ஸ்) வெயில் காலங்களில் இரண்டு முறை மாற்ற வேண்டும்.
*மனிதனின் இரண்டு கால் பாதங்களும் ஒரே அளவில் இருப்பதில்லை. வலது கால்,இடது காலை விட சற்று பெரிதாக பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.
*மற்றவர்களின் காலணிகளை பயன்படுத்த வேண்டாம்.

