
டாக்டர் கே.அமிழ்தன், MS,
லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். மேத்தா மருத்துவமனை.
வயிற்றில் உண்டாகும் நோய் பாதிப்புகளில் வெளியே தெரியும் நோய்கள் சில உள்ளன.அவற்றுள் குடல் இறக்கம் முக்கியமானது. சிலருக்கு குடலில் ஒரு பகுதி வயிற்றுக்கு முன்புறமுள்ள தசைச்சுவரின் வலு குறைந்த பகுதி வழியாக வெளியே பிதுங்கி தெரியும். அதை குடல் இறக்கம் (ஹெர்னியா)என்று அழைக்கிறோம்.
யார் யாருக்கு வரலாம்?
எந்த வயதிலும் வரலாம்.பிறந்த குழந்தைக்கு கூட வருவதற்கு வாய்ப்பு உண்டு.பச்சிளம் குழந்தைகளுக்கு குடல் இறக்கம் இருந்தால் உடனே சிகிச்சை செய்வதில்லை. சராசரியாக மூன்று, நான்கு வயது வரை காத்திருப்பார்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு தானாக சரியாகிவிடும். வெகு சிலருக்கு ஆப்பரேஷன் தேவைப்படலாம்.
பொதுவாக இளைஞர்களுக்கு,பெரியவர்களுக்கு, பெண்களுக்கும் குடல் இறக்கம் வரலாம். முதுமையில் வயிற்றுப் பகுதியில் தசைகள் பலவீனம் அடைவதால் இந்த பாதிப்பு வருகிறது. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு, நுரையீரல் பாதிக்கப்பட்டு… தீவிரமாக இருமல் அதிகமாகி,அதனால் குடல் இறக்கம் ஏற்படலாம்.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வரலாம்.ஜிம் பயிற்சியில் திடீரென்று அளவுக்கு அதிகமாக எடையை தூக்கும்போது, வரலாம்.
மலச்சிக்கல் இருந்து, சிரமப்பட்டு முக்கி மலம் கழித்தாலும் வரலாம். முதுமையில் ப்ராஸ்டேட் பிரச்சனை உள்ளவர்கள், முக்கி முக்கி சிறுநீர் கழிப்பதாக இருந்தாலும்…இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு சிசேரியன் செய்த வயிற்றுப் பகுதியில்,வெகு சிலருக்கு குடல் இறக்கம் வரலாம்.
வயிற்றுக்குள் அழுத்தம் அதிகமானால் தொந்தரவு ஏற்படலாம். அளவுக்கு மீறிய உடல் பருமன் இதற்கு நல்ல உதாரணம். தொப்பை உள்ளவர்களுக்கு வயிற்றுத் தசைகளில் கொழுப்பு சேருவதால் அங்கு அழுத்தம் அதிகரித்து தசைகள் வலுவிழக்கின்றன. அதனால் குடல் இறக்கம் வரலாம்.
சிகிச்சை என்ன?
குடல் இறக்கத்திற்கு மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லை. அறுவை சிகிச்சை ஒன்றுதான் முழுமையான தீர்வு. வயிற்றைத் திறந்து, குடல் இறக்கம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து, குடல் பகுதியில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நடுத்தர வயதினருக்கு தசை மற்றும் தசை நார்கள் பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் மருத்துவ வலையை வைத்து தைத்து விடுவோம். அதனால் குடல் இறக்கம் கட்டுப்படுத்தப்படும்.
சமீபகாலமாக நுண்துளை அறுவை சிகிச்சை (லேப்ராஸ்கோபி) முறையில் வயிற்றில் சில துளைகள் போட்டு குடல் இறக்கம் சரி செய்யப்படும். இதில் நோயாளிக்கு வலி குறைவு.ரத்த இழப்பு அதிகம் இருக்காது. அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
மீண்டும் வருமா?
குடல் இறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பெரும்பாலும் மறுபடியும் வருவதில்லை. மீண்டும் வராமல் இருப்பதற்கு,எப்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பயிற்சி தந்து உதவுவார்கள்.
ஒரு சிலருக்கு மீண்டும் வருவது உண்டு. இடைவிடாத இருமல்,காசநோய், அதிக பருமன், தவறான முறையில் அதிக எடையை தூக்குதல்…போன்ற காரணங்களால் மீண்டும் வரலாம்.
நோயின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரிடம் காண்பித்து திட்டமிட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டால்,குடல் இறக்கம் மீண்டும் வந்து தொந்தரவு தராது.
தினசரி உடற்பயிற்சி செய்து வர வேண்டும்.உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவரவர் உயரத்திற்கேற்ற உடல் எடையை பராமரித்து வந்தால் என்றும் இளமையுடன், மகிழ்ச்சியாக வாழலாம்.
தகவல் தொடர்புக்கு:
மேத்தா மருத்துவமனை, சேத்துப்பட்டு, சென்னை.
044 44422 71000.

