
டாக்டர்.பி.அருண்,பி.எஸ்.எம்.எஸ்
வெயில் காலத்துக்கு ஏற்ற மாதிரியான பழங்களை பானங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது .கோடை வருவதற்கு முன்பே தர்பூசணி விற்பனைக்கு வந்துவிடுகிறது. குறைவான விலையில் கிடைக்கும் தர்பூசணியை சாப்பிட்டால் உடம்புக்குக் குளிர்ச்சி கிடைப்பதோடு தாகமும் தணியும். அதேபோல எல்லாக் காலத்திலும் தாராளமாகக் கிடைக்கக்கூடிய இளநீரைக் குடிக்கலாம். இதுவும் சூட்டைத் தணிக்கும். எப்போதும் நிறைய தண்ணீராக உள்ள இளநீராக பார்த்து வாங்கிக் குடியுங்கள்.
வெயில் காலத்தில் வீட்டுக்கு வீடு மண் பானையில் தண்ணீர் ஊற்றிவைத்து குடிப்போம். நல்லதுதான். வெறும் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை மண் பானையில் ஊற்றிவைத்துக் குடிக்கலாம். தண்ணீர் கொதிக்கும்போது கொஞ்சம் சீரகத்தை அள்ளிப்போட்டால், அது உடம்புக்குக் குளிர்ச்சி தருவதோடு உள் உறுப்புகள் பலப்படும். மண் பானையில் வெட்டிவேரை ஊறவிட்டு குடித்தாலும் உடம்புக்குக் குளிர்ச்சி கிடைக்கும். இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஜன்னல் ஓரங்களில் வெட்டி வேரில் செய்த தட்டியைப் பயன்படுத்தினால் குளிர்ச்சியான காற்று கிடைப்பதோடு நல்ல மணமாக இருக்கும். வெட்டி வேர் போலவே நன்னாரி வேரும் நல்ல குளிர்ச்சி தரக் கூடியது. இதை இடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் சீனி (சர்க்கரை) சேர்த்து குடித்தால் சிறுநீர் கழிக்கும்போது வரக்கூடிய எரிச்சல் சரியாகும். இது எந்தவித கலப்பும் இல்லாத நல்ல சர்பத்.
கோடைக் காலத்தில் சில பேருக்கு எரிச்சல், கோபம், படபடப்பு, குழப்பம் வரும். சிலபேருக்கு தலைசுற்றலும், மயக்கமும் வரும். இந்த மாதிரி பிரச்னை வந்தால் செம்பருத்திப்பூ சர்பத் குடியுங்கள் நல்லது. கல்யாண பூசணிக்காயில் ஓர் ஓட்டைப் போட்டு 50 அல்லது 100 செம்பருத்திப் பூவை உள்ளே போட்டு மூடிவைக்க வேண்டும். மறுநாள் அதை உடைத்து சதைப் பகுதியை எடுத்து சாறு பிழிந்து சம அளவு சீனி (சர்க்கரை) சேர்த்து தேன் பதத்தில் காய்ச்சி ஆறவைத்தால் செம்பருத்திப் பூ சர்பத் ரெடி. இதில் 4 ஸ்பூன் சர்பத், 4 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து குடித்தால் படபடப்பு தொடங்கி ஆயாசம், கண் எரிச்சல்னு எல்லாம் ஓடிப்போய் விடும். அதுமட்டுமின்றி வெயில் காலத்தில் கிடைக்கக் கூடிய நுங்கு (பனை நுங்கு, எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுவதால் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
எலுமிச்சை ஜூஸை தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து குடியுங்கள். அதிகமாக புளிப்பு இருந்தால் அமிலம் இருக்கிறது என்று அர்த்தம். அது உடம்புக்கு அவ்வளவு ஏற்றது இல்லை. மற்றபடி வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிப்பழம், பானகம் குடிக்கலாம். பானகம் எப்படி செய்வது என்றால், புளியைத் தண்ணீரில் ஊறவைத்து ஊறிய தண்ணீருடன் கொஞ்சம் கருப்பட்டி (பனை வெல்லம்) சேர்த்து, கரைத்தால் பானகம் தயார்.
இதைக் குடிப்பதால் வயிற்றுக் கடுப்பு, சொட்டு மூத்திரம் மற்றும் அது தொடர்பான எல்லா கோளாறுகளும் சரியாகிவிடும். சூடும் தணியும். உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை குளிரக் குளிர நல்லெண்ணெய் தேய் விட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
முளைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, வல்லாரை, வெந்தயக் கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, கானாம்வாழை போன்ற கீரைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் சூடு தணிவதோடு வேறு கோளாறு களும் சரியாகும்.
கற்றாழை ஜூஸ், வெண்டைக்காய் பொரியல், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகளை தினமும் சமையலில் சேர்த்துக்கொண்டால் வெயில் நெருங்காது.

