டாக்டர் ஜி.ராஜமோகன்
 
நாம் குழந்தையாக இருந்தபோது நம்மை அன்புடன் கவனித்துக் கொண்ட நம் பெற்றோரின் இரண்டாவது குழந்தைப் பருவத்தில் அவர்களை நாம் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளப் பயில வேண்டும்.
 
தற்போதைய நவீன  நகரங்களில், முதியோரைக் கவனித்துக் கொள்ளுதல் சுமை யாகவே கருதப்படுகிறது. கவனித்துக் கொள்ளுதல் என்பது, உறவினர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று அவர்களை கவனித்துக் கொள்வது மற்றும் உங்கள் வீடுகளில் உள்ள உங்கள் பெற்றோரை முழுநேரமும் அக்கறையுடன் கவனித்துக் கொள்வது போன்ற பல பரவலான ஈடுபாடுகளை உள்ளடக்கியது.
 
முதியோரைக் கவனித்துக் கொள்வதென்பது நமக்குக் கிடைத்த அருமையான ஒரு வாய்ப்பு. அதன் மூலம் அவர்களுடன் நாம் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. நாளடைவில் வயோதிகத்தின் பிடியில் சிக்கி, தளர்ந்து, ஒவ்வொரு
செயலுக்கும் பிறரிடம் உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அத்தகையோருடனான நம் உறவு கஷ்ட மாகவும், எரிச்சல் அளிப்பதாகவும் இருக்கும். நீங்கள் அந்த முதியோரை அக்கறையுடன் நடத்தாவிட்டால், ஏராளமான பழைய நினைவுகளும், அதனால் ஏற்படும் வலிகளும் கசப்புணர்வும் மீண்டும் தோன்றும்.
 
இந்தச் சுமையை தனியாளாக நீங்கள் உங்கள் தோளில் சுமக்க முயற்சித்தால், வெறுப்புணர்வே உங்களை வென்றுவிடக் கூடும். அதுவரையிலும் இருந்த சுமுகமான நிலை மறைந்து, கசப்பான நிகழ்வுகள் ஏற்படும். சில சமயங்களில் அந்த முதியோரை அவமதிப்பது, அவர்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற அவலமான செயல்கள் கூட நடக்கலாம். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதியோர் மீதான கொடுமைகளும், அவர்கள் புறக்கணிக்கப் படுவதும் பத்திரிகைகளில் நாள்தோறும் செய்திகளாக வெளிவந்த வண்ணமாகவே உள்ளது. தங்கள் வாரிசுகளால் அவமதிக்கப்படும் பெற்றோர் தற்கொலை முடிவுக்கும் ஆளாகின்றனர்.
 
இதுபோன்ற கசப்பான சூழ்நிலைகளைத் தவிர்த்து, முதியோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை முடிந்த அளவு வெற்றிகரமாகச் செய்ய விரும்பினால், அதுகுறித்த சிந்தனை, கல்வி மற்றும் முன்திட்டமிடல் அவசியம்.
 
இதற்கெல்லாம் முன்பாக, உங்கள் பெற்றோர் நலமுடன் இருக்கும்போதே ஒரு வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதாவது எல்லா குடும்ப உறுப்பினர்களும் கலந்து பேசவேண்டும். அப்போது உங்கள் பெற்றோரிடம் “நீங்கள் உடல் நலம் இழந்தால் உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்பதுபோல் கேளுங்கள். இந்தச் சந்திப்பில் உங்கள் சகோதர, சகோதரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். சுமுகமான முறை யில் பேசவேண்டும். எதிர்காலத்தில் வரக்கூடிய நோய் மற்றும் உடல்நலக்குறைவு குறித்து விவாதிப்பதும், அப் போது என்ன செய்யவேண்டும் எனும் முடிவை இப்போதே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவதும் கொஞ்சம் கஷ்டமானதுதான். என்றாலும் இதுதான் ஆக்கப்பூர்வமான
அணுகுமுறை, இதுபோன்ற சந்திப்புகளில் கீழே உள்ள கோணங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
 
பணிகளைப் பகிர்ந்து கொள்ளுதல்: உங்கள் பெற்றோருக்கு உதவி தேவைப்படும் காலத்தில், யார் எதைச் செய்ய வேண்டும் என்று குழப்பமில்லாத வகையில், உங்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். அந்தப் பெற்றோரின் ஒரு ‘வாரிசு’, அவர்களுக்கு அருகிலேயே வசித்தால், அவர் தன் பெற்றோரைக் கவனித்துக் கொள்ள விரும்பினால் அவருக்குப் பிறர் ஆதரவு அளிக்க வேண்டும்.
 
கீழ்க்கண்ட கேள்விகளுக்கான பதில்களையும் யோசித்து வைத்துக் கொள்ளவேண்டும். பெற்றோரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வேன் என்று உறுதி அளித்துள்ள வாரிசுக்கு ஓய்வு அல்லது இடைவெளி தேவைப்படும்போது, அவருக்குப் பதிலாக யார் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது, யார் பணம் கொடுப்பது, அவருக்குப் பணிச்சுமை அதிகரிக்கும் போது, அவர் கேட்கும் உதவிகளை யார் செய்வது போன்றவற்றை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
 
பணம்: வருங்காலத்துக்கு இதைத் திட்டமிட முதலில் கவனிக்க வேண்டியது, உங்கள் பெற்றோரின் பண வசதி. இதைத் தீர்மானிப்பதன் மூலம், தேவையற்ற சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்காலத்தில் சமாளிக்க முடியும். நீங்கள்தான் உங்கள் பெற்றோரை முழுமையாகக் கவனித்துக் கொள்ளப் போகிறீர்கள் என்றால், உங்கள் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களிடம் இருந்து பண உதவி தேவைப்படுமா என்பதை முதலில் முடிவு செய்து கொள் ளுங்கள். இது படிப்பதற்கு வேண்டுமானால் வர்த்தக ரீதியாகத் தெரியலாம். ஆனால் பிற்காலத்தில் உதவிகரமாக இருக்கும்.
 
காப்பீடு: மருத்துவச் செலவுகளுக்காக உங்கள் பெற்றோர் போதுமான அளவு மருத்துவக்காப்பீடு செய்துள்ளார்களா என்பதை உறுதி செய்துகொள்ளூங்கள்.
 
கேளிக்கை: வழக்கமானவற்றை ஒதுக்கித்தள்ளி, நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பெற்றோரையும் அமர வைத்து மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது திரைப் படம் பார்ப்பதோ அந்த முதியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிரிப்பும் மகிழ்ச்சியும் மனதை லேசாக்கும்.
 
சுறுசுறுப்பு: சுறுசுறுப்பாக இருக்கப் பெற்றோரை ஊக்கப் படுத்துங்கள். சமுதாயப்பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் முழுமையாக உங்களை மட்டும் சார்ந்திராமல் பிறருடன் ஒன்றிணைந்து பழக வாய்ப்பு. வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
 
பராமரிப்பைப் பகிர்ந்து கொள்ளுதல்: உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்கள் பெற்றோரைக் கவனித்துக் கொள்ளவோ. சிறிது நேரம் பராமரித்துக் கொள்ளவோ முன்வந்தால், அவர்களை முழுமனதுடன் அனுமதியுங்கள்.
 
தேவை இடைவெளி: இடைவெளியே இல்லாமல் உங்கள் பெற்றோரைக் கவனிப்பதில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் இருந்தால், அது உங்கள் உடல்நலத்தையும் பாதிக்கக்கூடும். எனவே, உங்களுக்கு எவ்வளவு நாள் ஓய்வு தேவையோ அத்தனை நாள்களுக்கு வேறு ஒருவரை அமர்த்தி, பெற் றோரைப் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
 
பெருந்தன்மை: நீங்கள் குழந்தையாக இருக்கும்போது, உங்கள் பெற்றோருக்கு எந்த அளவு தொந்தரவு, துன்பத்தைக் கொடுத்தீர்களோ, அந்த அளவு தற்போது அவர்கள் தங்களின் முதிய காலத்தில் தொந்தரவு செய்வர். அவர்களில் பேச்சு. செயல்களைத் தவறாக எடுத்துக் கொண்டு வருத்தப்படத் தேவையில்லை.
 
இவ்வாறு பெற்றோரைக் கவனித்துக் கொள்வதன் மூலம், நீங்கள் உங்கள் குழந்தைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள். நீங்கள் வயோதிகம் அடையும் போது, உங்கள் குழந்தைகள் உங்களைச் சரியான முறையில் பராமரிக்க அவர்களுக்கு ஒரு அமையும்.