டாக்டர் டி.காமராஜ்,எம்.டி.
பாலியல் நிபுணர்
 
உடல்பருமன் காரணமாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலின் பருமன் ஏன் அதிகரிக்கிறது? இந்த இடத்தில் கொழுப்பு பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.
 
நமது உடம்பு ஆரோக்கியமாகச் செயல்பட கொலஸ்ட்ரால்
என்ற கொழுப்புச் சத்து மிகவும் அவசியம். ஈரல்தான்
கொழுப்பை தயாரித்துக்கொடுக்கிறது. உடலுக்குத்தேவையான சத்தில் சுமார் நாற்பது சதவீதம் அளவு கொழுப்பு வடிவில் இருக்கும். லிபோபுரோட்டீன்கள்
வடிவில் கொழுப்புகள் ரத்த நாளத்தில் மிதந்து செல்லும். 
 
தேவையிருக்கும் பட்சத்தில், அவை சக்தியாக மாற்றப்பட்டு செலவழிக்கப்படும். கண்டபடி சாப்பிட்டு உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால், அதிகப்படியான கொழுப்பு கிளைகோ ஜென்னாக மாற்றப்பட்டு உடலில் ஆங்காங்கே சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.
 
உடல் எடை கூடினால் இதயத்துக்கும் கூடுதலான பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுரையீரலுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. ரத்த அழுத்தத்தால் ரத்த நாளங்கள்  பாதிப்புக்கு உள்ளாகும் .
 
கொழுப்பில் இரண்டு வகை உண்டு. அடர்த்தி அதிகமான கொழுப்பை நல்ல கொழுப்பு என்றும், அடர்த்தி குறைந்த கொழுப்பைக் கெட்ட கொழுப்பு என்றும் கூறுவார்கள். நல்ல கொழுப்பின் அளவு குறைந்தாலும், கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்தாலும், இரண்டுமே தேவையைவிடக் குறைந்தாலும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படும்.
 
ரத்த அழுத்தத்தால் கொழுப்புப் பொருள்கள் ரத்த நாளச் சுவர்களில் படிந்து அவற்றின் ரத்த ஓட்டத்தைக் குறைக்கும்போது இயல்பாகவே ஆண்மை  எழுச்சி ஏற்படாமல் செக்ஸ் குறைகள் வந்துவிடுகின்றன. 
 
அதிக உடல் பருமன் உள்ள ஆண்களுக்கு டெஸ்டோ ஸ்டீரான் என்ற ஆண்மைக்குரிய ஹார்மோன் குறைவாகச் சுரப்பதாகவும், பெண்மைக்குரிய ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகரிப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது தவிர, உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடலுறவு வேட்கை இயல்பாகவே குறைந்து காணப்படுவதும் கண்டறியப் பட்டுள்ளது.
 
மன இறுக்கமும் உடல் நெருக்கமும்
 
மன இறுக்கத்தால் உடலுறவுக் குறைபாடுகள் நேரடியாகத் தோன்றுவதில்லை. பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை மன இறுக்கம் தூண்டி உடலுறவுக் குறைபாடுகளை உண்டாக்குகிறது.
 
உடலுக்காகட்டும், மனத்துக்காகட்டும் ஒரு ஸ்திரத்தன்மை உண்டு. இந்த ஸ்திரத்தன்மை புதிய சூழல்கள், எதிர்ப்புகள், சோக நிகழ்வுகள், சமூகத்தில் உள்ள சீர்கேடுகள், மன உளைச்சலை ஏற்படுத்தும் சூழல்கள் என எதிர்மறையான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும்போது பதற்றத்தால் நிலை குலைந்துவிடுகிறது. அதுவே மன இறுக்கமாகிறது.
 
மன இறுக்கம் நமது அன்றாடச் செயல்களை முடக்கி உடல் மற்றும் உள்ளத்தின் நலன்களையும் வெகுவாகப் பாதிக்கிறது. மன இறுக்கத்தால் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, மது, புகை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகவும் நேரிடுகிறது. இதனால் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன.
 
மன இறுக்கம் உண்டாகும்போது ரத்த அழுத்தம் உயரும். இதனால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட ரத்த நாளங்கள் சிதைந்துபோகும். இதயம் சீர்கெட ஏதுவாகும். மன இறுக்கம் ஏற்படும்போது முகத்தில் தசை இறுக்கமாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தசை இறுக்கம் மன இறுக்கத்துக்கான எச்சரிக்கை அறிகுறி.
 
மன இறுக்கம் போன்ற சூழல்களில் உடலுறவு சாராத விஷயங்களில் அதிகமான கவனம் செலுத்தப்படுவதால் வேட்கை குறைந்து விறைப்புத்தன்மை ஏற்படுவதில்லை. மன இறுக்கத்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது விரும்பினாலும்கூட  விறைப்புத்தன்மை ஏற்படாமல் போகிறது.
 
எனவே உடல் பருமன் ஆண்மைக்கு எதிரி என்பதை புரிந்து கொள்ளலாம்.உயரத்துக்கு ஏற்ற எடையை சீராக பராமரிப்பது தாம்பத்ய வாழ்க்கைக்கு நல்லது.இல்லற இன்பம் பெற தினசரி உடற்பயிற்சி செய்து உடலை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்
 
மன இறுக்கமோ கவலையோ இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.