-டாக்டர்.சு.முத்து செல்லக்குமார்.எம்.டி.

ப்படி எப்படி…சமைப்பது எப்படி? அதுவும் சத்தான, சுவையான சமையல்…உடல் ஆரோக்கியத்திற்கான சமையல் என்ற கேள்விகளுக்கு விடை தரும் முயற்சி தான் இந்தக் கட்டுரை. 

நீண்டகாலமாகவே, ஆவியில் வேகவைத்துச் சமைக்கும் முறை நடைமுறையில் இருக்கிறது.

இதில், பாத்திரத்தின் அடிப்பகுதியில் நீர் ஊற்றப்பட்டு, துளைகள் உள்ள தட்டு மேல் பகுதியில் போடப்பட்டிருக்கும். இதன் மீது, சமைக்க வேண்டிய காய்கறி போன்றவை வைக்கப்பட்டிருக்கும். மேல் பாதி, ஒரு மூடியால் மூடப்பட்டிருக்கும்.

பாத்திரத்தைச் சூடேற்றும்போது, அடிப்பகுதியில் உள்ள நீர் நன்கு கொதித்து ஆவியாகும். இந்த நீராவி, மேல் பகுதியில் உள்ள துளைகளின் வழியாகச் சென்று, அங்குள்ள உணவைச் சமைக்கும். சாதாரணமாக, நீரில் உணவைக் கொதிக்க வைப்பதைவிட இதற்கு நேரம் சற்று அதிகமாகும்.

இந்த முறையில் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற உணவுகளைச் சமைக்க முடியும். மேலும், காய்கறிகளையும் வேகவைக்க முடியும். இவ்வாறு, ஆவியில் சமைத்துச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. ஏனெனில், ஆவியில் வேகவைக்கும் முறையில் எண்ணெய், நெய் ஆகிய கொழுப்பு மிகுந்த பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. மேலும், தண்ணீரில் வேகவைக்கும்போது சில சத்துகள் அதில் வீணாகும். ஆனால், ஆவியில் வேகவைக்கும்போது சத்துகள் வீணாவதில்லை.

எனவே, ஆவியில் வேகவைத்த உணவைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதய நோயாளிகளுக்கும், இத்தகைய முறையில் சமைத்த உணவுகள், எந்தவிதக் கெடுதலையும் தராது. இதய நோய்கள் வராமல் தடுக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த சமையல் முறையாகும்.