டாக்டர்.ஜி.ராஜமோகன். மனநல ஆலோசகர்.

 

மன நோய்கள் யார் யாருக்கெல்லாம் வரலாம் என்ற கேள்விக்கு மிக எளிமையான பதில், மனம் என்பது யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் மனநோய்கள் வரலாம். மனச்சிதைவு போன்ற தீவிரமான மனநோய்கள் வருவதற்கு மரபணு உட்பட பல உயிரியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுவாக, தீவிர மனநோய்களைப் பொறுத்த வரையில் அவை வருவதற்கு உடலியல் (Biological) காரணங்களே பிரதானமானது. பல சினிமாக்களில் வருவது போல பெற்றோர்களோ, வளர்ப்பு முறையோ அல்லது சூழலோ தீவிர மனநோயை உருவாக்க முடியாது.

மரபணு ரீதியாகவே மனசிதைவுக்குரிய பண்புகளே இந்த மனநோய்க்கான காரணம். மற்றபடி மனப்பதட்டம், மனஅழுத்தம் போன்ற சாதாரணமான மனநோய்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நமது சூழல், நமது ஆளுமை, நமது பண்புகள் போன்றவையெல்லாம் கூட ஏதோ ஒரு வகையில் இத்தகைய மனரீதியான பிரச்சினைகளுக்குக் காரணமாக அமையும்.

“மனநோயைத் தடுப்பது எப்படி?” 

உடலில் வரும் நோய்களை எப்படித் தடுக்க முடியும்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் தான். அதைப் போலவே மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதே மனநோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வழி. உதாரணத்திற்கு, எனக்கு ஒருவர்மீது சந்தேகம் வருகிறது என்பது நோயல்ல. இயல்பாகவே கூட அப்படி ஒரு சந்தேகப் பார்வை நமக்குத் தேவை. ஆனால் எந்தவிதக் காரணமும் இல்லாமல் ஒருவரை சந்தேகிக்கிறோம், அதன் விளைவாக அவரை வெறுக்கிறோம், அவரைப் பார்த்து எரிச்சல் கொள்கிறோம் என்பது ஆரோக்கியமற்ற நிலை. அது நமக்கு நிறைய சங்கடங்களைக் கொடுக்கும், மனஅமைதியைக் கெடுக்கும், சகஜமான பரஸ்பர நம்பிக்கைகளைக் கெடுக்கும் என்பது மன சீர்கேடு.

இந்த மனசீர்கேட்டை நாம் உணர்ந்து அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கான உதவியை நாடுவதன் மூலமாகவே இந்த மனசீர்கேட்டில் இருந்து வெளியே வர முடியும்.அதன் வழியாக மனதின் ஆரோக்கியத்தைப் பேண முடியும். மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் நம்மை மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.