
-டாக்டர் விஜய் விஸ்வநாதன்.
சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் எம்.வி.நீரிழிவு மருத்துவமனை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல,சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் முன்னோடி நிறுவனம் ஆகும்.
நீரிழிவு சிகிச்சையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், அதன் பாதிப்புகளை திறம்பட கையாளுதல் தொடர்பான மூன்று நாள் தேசிய மாநாடு மார்ச் 20 முதல் 22 வரை (MVCON-2026) சென்னையில் நடக்கிறது.
முதல் நாள் நிகழ்வில், இந்தியாவில் நீரிழிவு ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற நீரிழிவு நோய் நிபுணரும், பேராசிரியருமான மாண்புமிகு மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் அவர்களுக்கு ‘எம்.வி வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. அவர் தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,புவி அறிவியல் துறைகளுக்கான மத்திய இணை அமைச்சராகவும் (தனிப் பொறுப்பு): பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
நீரிழிவு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் தேசிய அளவில் புகழ் பெற்ற டாக்டர்.விஜய் விஸ்வநாதன் பேசினார்…
“நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உடலில் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.முக்கியமாக கால்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.
கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் கால்களையே வெட்டி எடுக்க வேண்டிய கொடூரமான சூழ்நிலை பலருக்கும் ஏற்படுகிறது.அதை தவிர்க்க தீவிரமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம்.
கால் பாதங்களில் உள்ள ரத்தக் குழாய்கள் கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரையால் பலத்த சேதம் அடைகின்றன. இதனால் ரத்த ஓட்டம் குறைந்து செல்கள் மடிய தொடங்குகின்றன.
சுருக் சுருக் என குத்தும் உணர்வு, காலின் நுனிப்பகுதியில் எரிவது போன்ற உணர்ச்சி,காலில் உணர்ச்சி இன்றி மரத்துப் போதல், தரையில் நடந்தால் பஞ்சுமீது நடப்பது போன்ற உணர்வு…இது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
தினசரி கால் பாதங்களை கவனிக்க வேண்டும். காலணி இல்லாமல் வெளியில் எங்கும் நடந்து செல்லக்கூடாது. வீட்டிலும் காலணியுடன் நடப்பது நல்லது. அதற்கென்று தனியாக காலணியை பயன்படுத்தலாம்.
கால்களில் புண், தடிப்பு,எரிச்சல் இருந்தால் அலட்சியம் செய்யாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம்.
தினசரி நடைப்பயிற்சி செய்துவர வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்” என்றார் டாக்டர். விஜய் விஸ்வநாதன்.
-விஜயா, ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)

