டாக்டர்.ஏ.அமீர்ஜஹான்.
எம்.டி.,பாலியல் நிபுணர்

குழந்தைகளை பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் மிகவும் மோசமான,ஆபத்தான வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். செல்போன் எனும் சுனாமி நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை,கல்வியை,நேரத்தை,மன அமைதியை, அழித்துக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் இந்தியாவில் தான் அதிக அளவில் கோடிக்கணக்கான செல்போன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 7.30 மணி நேரம் செல்போன் பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெரியவர்கள் மட்டுமின்றி பச்சிளம் குழந்தைகள் கூட செல்போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற அவல நிலைக்கு வந்துவிட்டார்கள். எத்தனையோ நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் இளம் சிறார்கள் புத்தகம் எடுக்காமல் செல்போன் எடுப்பது நல்லதல்ல.

சாப்பாடு ஊட்டக்கூட செல்போன் கொடுத்தால் தான் முடியும் என்றால் நாம் எங்கே போகிறோம்? கஞ்சா போதையை மிக ஆபத்தான போதையாக மாறி வருகிறது குழந்தைகளின் செல்போன் பயன்பாடு. ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தை ஒரே இடத்தில் குனிந்த தலை நிமிராமல், ஆடாமல் அசையாமல் இருந்தால் என்னாவது?

*குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட செல்போன் கொடுத்து கெடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு பாட்டு பாடி,கதை சொல்லி உணவு கொடுங்கள்.  குழந்தைகளை விளையாட ஊக்கப்படுத்துங்கள்.  அருகில் உள்ள பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். வண்ண வண்ண புத்தகங்களை வாங்கி வாசித்து காட்டுங்கள். வீட்டில் உள்ளவர்கள் புத்தகம் படிப்பது முக்கியம்.”

*இயற்கையை ரசிக்க பழக்கப் படுத்தலாம்.  இசைக் கருவிகளை அறிமுகம் செய்யுங்கள்.  அருகில் உள்ள குழந்தைகளோடு பழக,விளைமாட அனுமதிக்க வேண்டும்.  செல்போன் வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகளை அடிக்காமல் பக்குவமாக நடந்த வேண்டும்.  செல்போன் பார்க்க பழக்கப்படுத்தி விட்டால் புத்தகம் படிப்பதில் ஆர்வம் வராது.”

*செல்போன் அடிமையானால் பேச்சுக்கூட சரியாக வராது. மற்றவர்களோடு பழகக் கூட தெரியாமல் போகலாம்.  செல்போன் அடிமைத்தனம் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்கலாம்.

குழந்தைகளுக்கு நாம் தான் முன் மாதிரி.பெற்றவர்கள் நல்ல முன் மாதிரியாக நடந்த கொள்ள வேண்டும். அப்போதுதான் செல்போன் எனும் கொடிய சுனாமிலிருந்து காப்பாற்ற முடியும்.