டாக்டர்.மகேஸ்வரி ரவி,எம்.டி.,டி.ஜி.ஓ

சொந்த பந்தத்தில் திருமணம் செய்தால்  ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பார்களா? நல்ல சந்ததி உருவாகுமா? இப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது.சில நேரங்களில் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்கலாம்.

குடும்பப் பாசத்துக்கும், சென்டிமென்ட்டுக்கும் முக்கியத்துவம் தந்து, யதார்த்தத்தை மறந்துவிடுகிறார்கள். மாமா பையன், அத்தை பெண் போன்ற நெருங்கிய உறவுகளுக்குள் நடக்கும் திருமணத்தால், குறைபாடுடைய குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

‘உறவு விட்டுப்போகக் கூடாது’ என்கிற அடிப்படையில்தான் இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன. ஆனால், இத்தத் திருமணம் மூலமாக உருவாகும் குழந்தை என்கிற புதிய உறவு கோளாறுகளோடும், குறைபாடுகளோடும் பிறக்கக்கூடும் என்பதை பலரும் உணர மறுக்கிறார்கள்.

வெளியிலிருந்து பெண் எடுத்தால் மட்டும் குறைபாடுடைய குழந்தை பிறக்காதா என்கிற கேள்வி எழலாம். பிறக்காது என்று சொல்லமுடியாது. ஆனால், ஒப்பீட்டு அளவில் பார்க்கையில், உறவுகளுக்குள் நடக்கும் திருமணத்தால் பிறக்கும் குழந்தைகள்தான் இப்படிப்பட்ட பிரச்னையைச் சந்திக்கின்றன.

எதனால் அப்படி நிகழ்கிறது? இக்கேள்விக்கான மருத்துவ அடிப்படையிலான விளக்கத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

இலை, கிளை, வேர் என்று பல்வேறு பகுதிகளைக் கொண்ட ஒரு மரம், ஒரு சிறு விதையிலிருந்து தோன்றுகிறது. அது போலவே கண், மூக்கு, காது, கைகள் போன்ற பகுதிகளைக் கொண்ட மனித உடல், கண்ணுக்குத் தெரியாத செல் எனப்படும் நுண்ணுயிரிலிருந்தே தோன்றுகிறது. அனைத்துக்கும் அடிப்படையான செல்லின் முக்கிய பாகம் உட்கரு (நியூக்ளியஸ்) என்றழைக்கப்படுகிறது.

அச்சுப் பிசகாமல் தன்னைப் போலவே இன்னொரு செல்லை உருவாக்குவது இந்த நியூக்ளியஸ்தான். செல்லின் நியூக்ளியஸுக்கு வெளியே கருவெளி  உள்ளது.துளைகளுள்ள உட்கரு மெல்லுறை, உட்கருவையும் கருவெளியையும் பிரிக்கிறது. இதன் மூலமாகத்தான் கருவெளி உட்கருவுக்கு உணவளித்து, கழிவினையகற்றி அதனை உயிர்ப்பிக்கிறது.

மனிதனை உருவாக்கும் முயற்சியில் இந்த செல்தான் வளர்ச்சியுறுகிறது. அத்துடன் வேறுபாடு அடைகிறது. ஒரு செல்லே கோடானு கோடியாகப் பல்கிப் பெருகி வளர்ச்சி யுறும் தன்மை, மாறுபடும் தன்மை, சார்ந்து அசையும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வகை வகையாகப் பிரிகின்றது. 

மனித அமைப்பிலே கோளாறு ஏற்படுவதற்கு அதன் மூல வித்தாகிய செல்லில் ஏற்படும் கோளாறும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது மருத்துவ உலகம் கூறும் உண்மை.

செல்லில்தான் குரோமோசோம்கள் எனப்படும் இனக்கீற்று கள் உள்ளன. ஒரு குழந்தை உருவாக தாயின் கருவணுவும் தந்தையின் விந்தணுவும் இணையும்போது தாய் வழி குரோமோசோம்களுடன் தந்தை வழி குரோமோசோம்கள் இணைகின்றன. இக்குரோமோசோம்கள் ஒரு பாதி தாயிட மிருந்தும் மற்றொரு பாதி தந்தையிடமிருந்தும் பெறப்படுவதால் அவை இரண்டிரண்டாக இணைக்கப்பட்ட ஜோடிகளாகவே காணப்படுகின்றன.

மனித இனத்தைப் பொறுத்தவரையில் 23 குரோமோசோம்களைத் தாயிடமிருந்தும் 23 குரோமோசோம்களைத் தந்தையிடமிருந்தும் ஒரு குழந்தை பெறுகிறது. இந்த 23 குரோமோ சோம்களில், 2 குரோமோசோம்கள் பண்புகளுக்குக் காரண மாகும் பண்பினக் குரோமோசோம்களாகவும், மற்ற ஒன்று ஆணா,பெண்ணா என்பதை நிர்ணயிக்கக்கூடிய பாலினக் குரோமோசோமாகவும் அமையும்.

இவ்வாறு தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் 22 பண்பினக் குரோமோசோம்களையும் ஒரு பாலினக் குரோமோசோம்களையும் தனித்தனியே பெறுகின்ற குழந்தை மொத்தத்தில் ஜோடிப் பண்பினக் குரோமோசோம்களையும் ஒரு ஜோடி பாலினக் குரோமோசோம்களையும் பெறுகிறது. அதாவது ஒரு குழந்தை, பெற்றோரிடமிருந்து 23 ஜோடி குரோமோ சோம்களைப் பெறுகிறது.

ஒவ்வொரு குரோமோசோமிலும் நிறம், அழகு, உயரம். உருவ அமைப்பு, குலப் பண்புகள் போன்றவற்றைத் தீர்மானிக்கும் பல ஆயிரக்கணக்கான ஜீன்கள் எனப்படும் மரபுக் கூறுகள் உள்ளன. இந்த மரபுக் கூறுகள், பரம்பரை பரம்பரையாக ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலை முறைக்குக் கடத்தப்படுகின்றன. ஆக, ஒரு குழந்தையின் உடலில் ஆயிரக் கணக்கான தாய்வழி ஜீன்களும் ஆயிரக் கணக்கான தந்தை வழி ஜீன்களும் முறைப்படி பொருத்தமாக இணைந்து செயல்படுகின்றன.

அதாவது நிறந்தரும் தாய்வழி ஜீன்கள் நிறந்தரும் தந்தை வழி ஜீன்களுடனும் இணைந்து ஒரே ஒழுங்கில் செயல்படு கின்றன. இவ்வாறு இணைந்து செயல்படும் தாய்வழி ஜீன்களிலும் தந்தை வழி ஜீன்களிலும் ஏதேனும் ஒன்று தன் திறனில் மாறுபட்டு விடலாம் அல்லது குறைபாடு உடைய தாகிவிடலாம்.

அப்போது மாறுபட்ட ஜீன்களின் ஜோடியில் ஒன்று மற்றதை விடச் செயலாற்றலிலும் மாறிவிடலாம். ஒரு ஜோடியிலுள்ள ஜீன் மற்றதை விட ஓங்கி தன் பண்புகளை ஆதிக்கம்கொள்ளச் செய்தால் அதனை ஓங்கு பண்பு கொண்ட ஜீன் என்பர் (Dominant gene). அல்லது தன் செயலில் பின்னடங்கி செயல்பட்டால் அதனை ஒடுங்கு பண்பு கொண்ட ஜீன் என்பர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் கோளாறுகளில் 40 சதவீதம், மூதாதையரின் பாதிப்பால்தான் ஏற்படுகிறது. ஆகவே சிறிய தலையுள்ள குழந்தை, பரம்பரை வழுக்கை, மந்த புத்தி போன்றவற்றுக்கும் குறைபாடுள்ள மற்றும் மாறுபட்ட ஜீன்களே காரணம்.

உடலின் வண்ணமும், முடியின் கருமையும், கண்களின் இயற்கை நிறமும் மாறி, தோலும் முடியும் வெளுத்து, கரியவிழிகளில் நிறம் மங்கி, வெளிச்சத்தையே பார்க்கக் கூசி, ஓரக் கண்ணோடு பார்க்கும் பாண்டு நோய், கண் பார்வை நலிவு, பிறவிச் செவிடு, நிறக் குருடு, சிறு காயமானாலும் ரத்தத்தைத் தொடர்ந்து கொட்டும் குருதி உறையா நோய், வெட்டி வெட்டி இழுக்கும் வலிப்பு, மன வளர்ச்சி முழுமை யடையாமை தொடர்பான நோய்கள், ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா, நரம்புகள் பாதிப்பினால் தன்னிச்சை யின்றி உடலுறுப்புகள் செயல்படும் கோரணி வாதம் போன்ற எண்ணற்ற நோய்கள் ஜீன்களின் மூலம் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கோ, பேரக் குழந்தைக்கோ கடத்திச் செல்லப்படுகின்றன.

மேற்கூறிய குறைபாடுகள் ஒரு குடும்பத்தில் இருந்தால் முன்பெல்லாம் முற்பிறவியில் செய்த பாவம்தான் என்று அழுது புலம்பித் தவித்தனர். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய குழந்தைகள் பிறக்க பெற்றோரின் செய்கை காரணமல்ல அவர்களது உடலில் உள்ள ஜீன்களே பெரும்பாலும் காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

நூறு குழந்தைகளில் நான்கு குழந்தைகள் இது போன்ற குறைகளுடன் பிறப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நெருங்கிய உறவில் திருமணம் செய்கையில், கணவன், மனைவி இருவருமே ஒரேவிதமான மரபுக் கூறுகளைத்தான் கொண்டிருப்பார்கள். அவர்களின் பரம்பரையில், யாரோ ஒருவருக்கு உடல்குறைபாடு இருந்திருக்கும்பட்சத்தில், அக்குறைபாட்டுக்குரிய மரபுக்கூறு இருவரிடமும் பொதிந்திருக்கும். எனவே, அந்தக் குறைபாடு ஜீன்களின் வழியாக பிறக்கப்போகும் குழந்தைக்குக் கடத்தப்பட அதிக வாய்ப் பிருக்கிறது. 

கணவனும், மனைவியும் வேறுவேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனில், அவர்களின் மரபுக்கூறுகளும் வேறுபட்டதாகத்தான் இருக்கும். எனவே, அவர்களின் மூலமாக பரம்பரை நோய் கடத்தப்பட வாய்ப்பு குறைவு.

அதுமட்டுமன்றி, பெற்றோர்கள் இருவரும் மிக நெருங்கிய உறவினர்களாக இருப்பார்களேயானால், கருச் சிதைவுகளும் குறைப்பேறுகளும் அதிகமாக ஏற்படுகின்றன. உறவுத் திருமணங்களில் மாமன் மகன், அத்தை மகள் ஆகிய உறவுத் திருமணத்தைவிட, தாய் மாமன் முறையில் திருமணம் புரிந்து கொள்வது, அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த  கருத்துக்களை வைத்து, ‘உறவுத் திருமணமே வேண்டாம்’ என ஒட்டு மொத்தமாக முடிவு கட்டிவிட வேண்டாம்.

தாய் தந்தையர் வழியிலும் அவரது மூதாதையர் வழியிலும் எவ்விதக் குறைபாடுகளும் காணப்படவில்லையெனில் உறவுத் திருமணங்களால் தவறில்லை.

இப்போது மருத்துவத் துறையோடு மரபியல் ஆலோசனை நிபுணர்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் ஆண், பெண் இருவரது பாரம்பரியத்தையும், ஜீன்களையும் ஆராய்ந்து, எந்தெந்த வியாதிகள் எத்தனை குழந்தைகளுக்கு எந்தெந்த விகிதத்தில் குடும்பத்தினருக்கு வரலாம் எனக் கணக்கிட்டு, ஆலோசனைகள் வழங்குகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட தம்பதிகள் எச்சரிக்கையோடு இருக்கமுடியும்.