டலுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.உடம்பு சரியில்லை என்றால் உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம்.மனசு சரியில்லை என்றால் மட்டும் அலட்சியமாக இருந்து விடுகிறோம்.

மனதில் பிரச்சனைகளை கண்டுபிடிக்க எந்த பரிசோதனைக் கூடத்திற்கு போவது?

மனநல மருத்துவர் அல்லது மன நல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

மனச்சோர்வு (Depression) என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மிக பிரபலமான வரும், அன்றாட வாழ்வின் ஆடம்பரங்கள், சொகுசுகள் என நாம் நினைக்கும் அத்தனையையும் பெற்ற ஒருவருக்குக் கூட இந்த மனச்சோர்வு வரலாம். அதனால் கல்வி, பொருளாதாரம், ஏனைய வசதிகள் என எல்லாவற்றையும் தாண்டி எந்த மனிதனுக்கும் மனச்சோர்வு வரலாம். அதனால் ஒருவர் தனக்கு மனச்சோர்வு இருப்ப தாகச் சொல்லும்போது இந்தக் காரணங்களை யெல்லாம் குறிப்பிட்டு “உங்களுக்குப் போய் மனச்சோர்வு வருமா?” எனக் கேட்டு அவரது பிரச்சினையை நிராகரிக்கக்கூடாது.

பெரும்பாலான நேரங்களில் மனச்சோர்வு என்பது எந்தப் புறக்காரணங்களும் இல்லாமல் தான் வருகிறது. அதாவது நம்மைச் சுற்றி நிகழும் காரணங்களால் இந்த மனச்சோர்வு உருவாகு வதில்லை. 

அன்றாட வாழ்வில் சில பிரச்சினைகள் சார்ந்து நமக்கு ஏற்படும் கவலைகள் என்பது வேறு, மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு என்பது வேறு. பெரும்பாலான நேரங்களில் நாம் இவை இரண்டையும் குழப்பிக்கொள்கிறோம். பிரச்சினைகளைச் சார்ந்து தற்காலிக மனநிலை மாற்றம் என்பது மாறக்கூடியது. மேலும் அது நம்மைத் தொடர்ச்சியாக ஒரு சிக்கலில் வைத்துக்கொள்வதில்லை. சிக்கல்கள் சரியாகும்போதோ அல்லது சரியாகாது என்று தெரிந்து கொள்ளும்போதோ நாம் அவற்றில் இருந்து வெளிவரப் பழகிக் கொள்கிறோம். ஆனால் மனஅழுத்தம் என்பது தொடர்ச்சியாக நீடிக்கக் கூடியது; மேலும் நமது அன்றாட வாழ்க்கையை யும், அதன் நிமித்தமான பணிகளையும் பாதிக்கக்கூடியது. பிரச்சினைகள் எதுவும் இல்லாமலோ அல்லது பிரச்சினைகளின் தீவிரத்தன்மைக்கு சற்றும் தொடர்பில்லாமல் எல்லா நேரமும், எல்லா கணமும் நம்மை எந்த ஒரு வெளிப்புற இன்பத்தையும் நுகரவிடாமல் எப்போதும் ஒரு அழுத்தத்தில் நம்மை வைத்திருக்கும், வாழ்க்கையின்மீதான, உறவுகள் மீதான, நமது எதிர்காலத்தின்மீதான நமது பிம்பங்களை’ எல்லாம் கலைத்துப் போட்டு நம்மை ஒரு முடிவற்ற, இலக்கற்ற பாதையில் செலுத்தக்கூடியதுதான் மனஅழுத்தம். அது உண்மையில் எப்போதாவது உங்களுக்கு வரும்போதுதான் உங்களால் அதன் தீவிரத்தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். அப்படி ஒருவேளை உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடிந்தால் நிச்சயமாக இதனால் பாதிக்கப் பட்டவர்களை உங்களால் அலட்சியப்படுத்த முடியாது.

மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் என்பது எளிதில் குணப்படுத்தக் கூடியது.மனநோய்கள் எல்லாம் தீவிரமானது, குணப்படுத்த முடியாதது என நம் எல்லோருக்கும் மனநோய்கள் பற்றி ஒரு பொதுவான பிம்பம் இருக்கிறது. உண்மையில் எல்லா மனநோய்களும் ஒன்றல்ல. உடலில் வரும் நோய்கள் போலவே மனதில் வரும் நோய்களிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. மிக சாதாரணமானது முதல் மிகத் தீவிரமானது வரை என ஏராளமான மனநோய்கள் உள்ளன. அதில் மனச்சோர்வு என்பது சாதாரணமாக குணப்படுத்தக்கூடிய ஒரு வகை. ஆனால் அதற்கான வைத்தியத்தை நாம் செய்யத் தவறும் போது அது கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரத் தன்மையை நோக்கி செல்லத் தொடங்கும். அப்படி வைத்தியம் செய்யப்படாத பெரும்பாலான மன அழுத்தம்தான் தற்கொலைகளில் சென்று முடிகிறது. அப்படி ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது.

யாராவது எனக்கு மனசு சரியில்லை என்று சொன்னால் அதை அலட்சியம் செய்யாமல் தேவையான மருத்துவ உதவி பெற தவறாமல் உதவுங்கள்.

-டாக்டர்.ஜி.ராஜமோகன்.