டாக்டர்.அஜய் வசந்த்.

பொதுவாக நம்மில் பலர் ஆடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை உள்ளாடைகளுக்குக் கொடுப்பதில்லை. ‘உள்ள போடுறதுதானே… எப்படி இருந்தா என்ன’ என்ற மனநிலை பலரிடம் உள்ளது. உள்ளாடைகளைக் கடைகளில் பொதுவெளியில் தேர்வு செய்வதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு அவசர கதியில் கையில் கிடைப்பதை வாங்குவது, உள்ளாடைதானே என்று விலை குறைந்த மலிவான துணிகளில் வாங்குவது என்று இந்த மனோபாவம் இன்றும் பலரிடம் இருக்கிறது.

நாம் அதிக பணத்தை ஆடைகளுக்காகச் செலவழிக்கிறோம். ஆனால், அந்த ஆடைகளின் ஃபிட்டிங் அழகாக வெளிப்பட உள்ளாடைத் தேர்வும் மிகவும் அவசியம். ‘நான் ஃபிட்டா தான் இருக்கேன். ஆனா, எந்த ஆடையும் அமைப்பா இருக்கிறதில்லையே…’ என்பவர்கள் பலர்.

ஆடையின் வெளித்தோற்றம் நாம் தேர்வு செய்யும் உள்ளாடையைப் பொறுத்தே அமையும் என்கிறார்கள் ஸ்டைலிஸ்ட்கள். மேலும். உள்ளாடைகள் என்பது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. ஆரோக்கியம் சார்ந்ததும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உள்ளாடைகள் அணிவதன் முக்கிய நோக்கம் தனிநபர் சுகாதாரத்தைப் பராமரிப்பது. ஆனால் பலரும் அதை வெளித்தோற்றத்துக்கான முக்கியத்துவமாக மட்டுமே நினைக்கிறார்கள். அது சார்ந்த சுகாதாரம் பற்றிய விஷயங்களை அறிவதுகூட இல்லை. எனவே, உள்ளாடைகளைத் தேர்ந்தெடுக்கும் போது தோற்றத்துக்கான விஷயமாக மட்டும் பார்க்காமல், உடல்நலத்துக்கும் ஆரோக்கியமானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நமக்கு என்ன வகை பொருந்துகிறது, எந்தத் துணி ரகம் சௌகர்யமாக இருக்கிறது, ஃபிட்டிங் சரியாக இருக்கிறதா என்பதையெல்லாம் முன்னிறுத்தி உள்ளாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உள்ளாடை வாங்குவதில் குறிப்பிட்ட நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்வது அவசியம். இன்னும் சொல்லப்போனால், உள்ளாடைகளுக்கென்றே தனியாக ஒருநாள் ஷாப்பிங் சென்றால் அதில் மட்டுமே கவனம் செலுத்தி வாங்கி வர முடியும். இல்லையென்றால், எல்லா ஷாப்பிங்கையும் முடித்த பிறகு அவசரத்தில் கடைசியாகக் கைக்குக் கிடைக்கும் ஒன்றை எடுத்துக்கொண்டு பில் போட சென்றுவிடுவார்கள் பலர்.உள்ளாடை வாங்க திட்டமிட்டு செயல் படவேண்டும்.

ஒரு நாளைக்கு ஓர் உள்ளாடையா?

ஒரு நாளில் இரு வேளை குளிக்கும் நல்ல பழக்கம் உள்ளவர்கள்,அப்போது உடைகளைப் போல உள்ளாடையையும் மாற்றிவிட வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு ஓர் உள்ளாடைதான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. உடற்பயிற்சி, அதிக வியர்வை, மழையில் நனைவது போன்ற சூழல்களில் உள்ளாடையையும் உடனடியாக மாற்ற வேண்டும். உள்ளாடைகள் ஈரப்பதத்துடன் இருந்தால் பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். மேலும், வெளுத்துப் போகும்வரை, கிழிந்து போகும்வரை என உள்ளாடைகளைப் பயன்படுத்தக்கூடாது. ஓர் உள்ளாடையை அதிகபட்சம் ஆறு மாதங்களில் இருந்து எட்டு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமலிருப்பதுதான், உடல் சுகாதாரத்துக்கு நல்லது.

துவைக்கும்போது..!

உள்ளாடைகளைப் பிற ஆடைகள் மற்றும் பிறர் ஆடைகளுடன் சேர்த்து வாஷிங்மெஷினில் துவைக்கும்போது, அதிலிருக்கும் பாக்டீரியா போன்றவை பிற ஆடைகளுக்கும் பரவலாம்.எனவே, உள்ளாடைகளைத் தனியாக ஊறவைத்துத் துவைக்க வேண்டும். அதிக ரசாயனம் சேர்க்கப்பட்ட வாஷிங் திரவங்கள், கிருமிநாசினி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இந்த ரசாயனங்கள், சென்சிட்டிவ்வான அந்தரங்கப் பகுதியில் எரிச்சலுணர்வு, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.. எனவே சாதாரண சோப், டிடர்ஜென்ட் பயன்படுத்தித் துவைத்தால் போதுமானது. உள்ளாடைகளை சோப் போகும் வரை நன்றாக அலச வேண்டும்.

வெயிலில் காயவைக்க வேண்டும்!

இன்றும் பல பெண்கள் சங்கோஜத்தினால் உள்ளாடைகளை வெளியிலோ, மொட்டை மாடியிலோ காய வைக்காமல், பிறர் கண்படாதபடி இருக்க வேண்டும் என நிழலில் அல்லது ஒரு துணிக்கு அடியில் காயப்போட்டு உலர்த்துகிறார்கள். உள்ளாடைகளை சூரிய ஒளி நேரடியாகப்படும் வகையில் காயவைக்க வேண்டும். அப்போதுதான் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் உள்ளாடைகளில் இருக்கும் கிருமிகளை அழிக்கும். புடவை, சுடிதார் போல இதுவும் ஓர் ஆடை என்று அதை இயல்பாக்க வேண்டும்.

தாம்பத்யம்… கூடுதல் ஈர்ப்பு!

உள்ளாடைக்கும் ரொமான்ஸுக்கும் தொடர்பு உண்டு என்று அறிவோம். மேலும், ஒருவர் தான் சுகாதாரமாக இருப்பதை தன் பார்ட்னருக்கு உணர்த்தும் ஓர் அம்சமாக உள்ளாடை அமையும்.கலர், டிசைன் என சற்று சிரத்தை எடுத்து ஃபேன்ஸி உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்து அணியும்போது, தம்பதிகளின் தாம்பத்ய நெருக்கம் அதிகரிக்கும். ஆணும் பெண்ணும் மேட்சிங்காக அணியக்கூடிய ‘கபுள் அண்டர்வேர்’ வரை சந்தையில் கிடைக்கின்றன. மேலும், மேட்சிங்கான பிரா – பேன்டி செட் அணிவதுகூட கூடுதல் ஈர்ப்பைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய பெட்ரூம் சீக்ரெட்

இனி ஷாப்பிங்கில் உள்ளாடைகளுக்கும் உரிய கவனம் கொடுப்போம்! அலட்சியம் வேண்டாம்.