டாக்டர்.சிவபாலன் இளங்கோவன்.
மனநல மருத்துவர் 

னமும் உடலும் ஒருங்கிணைந்த செயல்பாடு கொண்டது.இதை புரிந்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக் கொள்ளலாம். அண்மையில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இதய நோய் நிபுணர். “டாக்டர், எங்கிட்ட வரும் நோயாளிகளில் பாதிக்கு மேல் உங்களுக்கு வர வேண்டிய நோயாளிகள்தான். மன அழுத்தத்தினால் வரக்கூடிய படபடப்பு, பதட்டம், நெஞ்சு வலி போன்றவை இதய நோய் போலவே இருப்பதால் எல்லோரும் என்னிடம் வருகின்றனர்.ஆனால் பரிசோதனையில் அவர்கள் இதயத்தின் செயல்பாடுகள் நார்மலாகவே இருக்கிறது. அவர்களிடம் உங்களுக்கு இருப்பது மனஅழுத்தம் என சொன்னால் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்” என்றார்.

அவர் சொல்வது உண்மைதான். மன அழுத்தம் எப்படி உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் எல்லாருக்கும் இருக்கிறது. ஏன் மருத்துவர்களுக்கே கூட அது இருக்கிறது. மனதை உடலின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கமே அதற்குக் காரணம். மன அழுத்தம் தொடர்பான அத்தனை அலட்சியத்திற்கும், புரிதலின்மைக்கும் மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது மனதின் உருவமற்ற தன்மையையே. 

மனதிற்கு என்று எந்த உருவமும் இல்லை.ஒரு இதயத்தைப் போல, ஒரு நுரையீரலைப் போல, ஒரு சிறுநீரகத்தைப் போல நம்மால் மனதைப் பார்க்க முடியாது. ஏனென்றால் மனம் என்பது ஒரு செயல், அலகு (functional unit). அதாவது கணினியில் உள்ள மென்பொருள் போல மூளையில் உள்ள மென் பொருள் மனம். ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் (operating system).

இந்த உருவமற்ற தன்மையால் மனதில் வரக்கூடிய பிரச்சினைகளும் வெளிப்படையாகத் தெரியக் கூடியதாக இல்லை. உதாரணத்திற்கு ஒருவருக்குக் கையில் எலும்பு உடைந்துவிட்டால் அது வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் அதை நாம் ஏற்றுக்கொள் கிறோம், அவரின் இயலாமை அப்போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. ஆனால் மனச்சோர்வும் அதே போன்ற இயலாமையை அவருக்குக் கொடுத்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம். காரணம், மனச்சோர்வு வெளிப்படையாக நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் நாம் மனதின் இருப்பை, அது உடலின் ஒரு அங்கம் என்பதை நாம் நிராகரிக்கிறோம்.

உண்மையில் மனம் என்பது உடலின் ஓர் அங்கம். அதுவும் மிக முக்கியமான அங்கம். உடலில் என்ன பிரச்சினை என்றாலும் அது மனதையும் பாதிக்கும். உதாரணத்திற்கு எப்போ தாவது இரண்டு மூன்று நாட்கள் காய்ச்சல் வந்து படுத்து உள்ளீர்களா? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக வழக்கமான மனநிலை உங்களுக்கு அப்போது இருந்திருக்காது. அதே போல மனதின் பிரச்சினைகள் உடலின் மற்ற அமைப்புகளையும் பாதிக்கும். அப்போது அந்த உடல் அமைப்பு சார்ந்த சிக்கல்களை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டு மென்றால் அவரது மனநிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

சமீபத்தில் நீரிழிவு தொடர்பான உலகம் முழுக்க ஒரு பெரிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதாவது நீரிழிவு நோயில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கியமான காரணிகளைக் கண்டறிவதற்கான சோதனையில் ஏராளமான நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றார்கள். அந்த ஆராய்ச்சியில் நோயாளிகளை சர்க்கரையின் அளவை நன்றாகக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாதவர்கள் என இரண்டாகப் பிரித்தார்கள். இரண்டு விதமான நோயாளிகளிலும் அந்த இரண்டு நிலைகளுக்கும் காரணமானவை எவை என உலகம் முழுக்க இந்த ஆராய்ச்சி நடந்தது. ஆராய்ச்சியின் முடிவு அத்தனை ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதாவது நீரிழிவு நோய்க்கான மருந்தைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதுதான் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் காரணிகளில் முக்கியமானதாக இருக்கும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நீரிழிவு நோய்க்கான மருந்தைத் தொடர்ச்சி யாக எடுத்து கொண்ட ஏராளமான நோயாளி களுக்குக்கூட சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லை. ஏன் என அவர்கள் ஆராய்ச்சி செய்தபோது அவர்களுக்குக் கிடைத்த முடிவுதான் அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம். அதாவது, சரி செய்யாத மனச்சோர்வு ஒருவருக்கு இருக்கும்போது அது சர்க்கரையின் கட்டுப்பாட்டை பாதிக்கிறது.அந்த நோயாளி எவ்வளவு முறையாக நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், சரி செய்யப்படாத மனச்சோர்வு அவர்களின் சர்க்கரையின் அளவின்மீது ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்கள். 

இப்போது நீரிழிவு நோய்க்கான வைத்திய முறைகளில் முக்கியமானது என மனச் சோர்வைக் கண்டறிவதும் அதை முறையாக வைத்தியம் செய்வதும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சியின் முடிவு உடலுக்கும், மனதுக்குமான ஒருங்கிணைப்பில் பல்வேறு கதவுகளைத் திறந்திருக்கிறது. மனச்சோர்வு தொடர்பான புரிதல்களை மருத்துவ உலகத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது.

இதய நோய் நண்பர் சொல்லியது போல அவரது மருத்துவமனையில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளிலுமே உடல் ரீதியான துறைகளுக்கு வரும் நோயாளிகளில் கணிசமானவர்களுக்கு மனச்சோர்வுதான் முதன்மையான பிரச்சினை என்கிறது ஒரு ஆய்வு. தீர்க்கப்படாத மனச்சோர்வே அவர்களின் உடல் ரீதியான பிரச்சினைகளுக்குக் காரணமாயிருக்கிறது என்கிறது அந்தக் குறிப்பிட்ட ஆய்வு. மனச்சோர்வு அவர்களுக்கு சரி செய்யப்படுமானால் அவர்களின் உடல் ரீதியான சிக்கல்களும், பிரச்சினைகளும் தீர்ந்து விடும். ஆனால் அதை சரி செய்வதில் உள்ள தயக்கம் பெரும்பாலான நோயாளிகளை அந்த நிலையிலேயே வைத்திருக்கிறது.

தேவை யில்லாத பரிசோதனைகள், அவசியம் இல்லாத மாத்திரைகள், பாதிக்கப்படும் அவர்களின் அன்றாட வாழ்வு, அதனால் ஏற்படும் உறவு சிக்கல்கள் என ஏராளமான விளைவுகளை அந்தத் தயக்கம் ஏற்படுத்துகிறது. இந்த தயக்கம் நோயாளிகளுக்கு மட்டுமல்ல, பிற துறையைச் சேர்ந்த மருத்துவர்களுக்கே இருக்கிறது. ஒருவேளை நோயாளியே தங்களின் மன உளைச்சலைப் பற்றி மருத்துவரிடம் சொன்னால் கூட அவர்களும் மற்றவர்களைப் போலவே ‘தைரியமா இருங்க’, ‘ட்ராவல் பண்ணுங்க’, ‘யோகா பண்ணுங்க’ போன்று பொத்தாம் பொதுவாகச் சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அதை ஒரு நோயாக பாவிப்பதில் இருக்கும் சிக்கல்தான் மனஅழுத்தம் ஏற்படுத்தும் அத்தனை விளைவு களுக்கும் எல்லா இடங்களிலும் அடிப்படையாக இருக்கிறது. அதே போலவே மனதை உடலின் ஒரு அங்கமாகக் கருதாத அறியாமைதான் மனம் ஏற்படுத்தும் உடல் ரீதியான சிக்கல்களைப் புரிந்து கொள்வதில் இருந்து நம்மைத் தடுக்கிறது.

உண்மையில் மனநலத்துறை எதிர்நோக்கியிருக்கும் சிக்கல்களில் முதன்மையானது இந்த அறியாமைகளும், புரிதலின்மைகளும்.

மனம் தொடர்பான அறிவியல் பார்வைகளைப் பொது மக்களுக்கு மட்டுமல்ல, அதைப் பிற துறை மருத்துவர்களுக்கே கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மனநலத்துறைக்கு நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அதை மனநலத் துறையை சார்ந்தவர்கள் மட்டுமே பேசுவதால் அது அவர்களின் சுயநலத்திற்காகப் பேசுவதாக ஆகிவிடும். அதனால் அரசாங்கமும், தன்னார்வல அமைப்புகளும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மனநலம் தொடர்பான அறிவியல் பார்வைகளைப் பொதுத்தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் நம் மக்களை நாம் இதில் இருந்து மீட்டுக்கொண்டு வரமுடியும்.