-டாக்டர்.ரமேஷ் சதாசிவம்

ன்றாட வாழ்க்கையில் நாம் நமது உடலுக்கென செலவிடும் நேரம் என்பது மிகக் குறைவு. புறவுலகத்தின் நிர்ப்பந்தங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது உடலின் ஆரோக்கியத்திற்குக் கொடுப்பதில்லை. தினமும் குறைந்தபட்சம் நாற்பது நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செல்வது பலவகைகளில் ஓர் ஆரோக்கியமான
செயல்பாடு.

நடைப்பயிற்சி செய்யும்போது சேகரித்து வைத்திருக்கும் ஊட்டச்சத்துகள் ஆற்றலாக மாறுகின்றன, உடலுக்குத் தேவையான ஆற்றல் உருவாகிறது. உடலும்,மனதும் புத்துணர்வு அடைகிறது.மேலும், பல ஹார்மோன்களின் செயல்பாடுகள் நடைப்பயிற்சியின்போது சீராகின்றன. பதட்டத்தின்போதும், ஸ்ட்ரெஸ்ஸின்போதும் அதீதமாக வெளிப்படும் அட்ரினலின் ஹார்மோன்களும், ஸ்டீராய்டு ஹார்மோன்களும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த ஹார்மோன்களின் சம நிலையின்மைகளும் கூடப் பதட்டத்தையும், ஸ்ட்ரெஸ்ஸையும் உருவாக்குகின்றன. நடைப்யிற்சியை நீண்ட காலம் தொடரும்போது அது இந்த ஹார்மோன்களின் செயல்பாடுகளைச் சீராக்குகின்றன. இதனால் பதட்டம் தீவிரமானதாக, நீண்டதாக மாறும் நிலை குறைகிறது.

நடைப்பயிற்சியின் போது இதயத்தின் செயல்பாடும் மேம்படுகிறது.ரத்த ஓட்டம் சீராகிறது, இதயத்தின் உந்து திறன் அதிகமாகிறது, அதனால் மூளை உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகிறது.இதனால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது, அதன் விளைவாக, சிந்தனை திறனும், ஆக்கப்பூர்வமான முடிவெடுக்கும் திறனும் அதிகமாகின்றன. புறவுலகில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தத் திறன்களைக் கொண்டு நம்மால் பக்குவமாக, நிதானமாகச் சரி செய்ய முடிகிறது. அதுவே பலவிதமான நெருக்கடி நிலையில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.

நடைப்பயிற்சி நல்ல, ஆழ்ந்த,திருப்தியான தூக்கத்தைக் கொடுக்கிறது. பெரும்பாலான நேரங்களில், பதட்டமும், ஸ்ட்ரெஸ்ஸும் தூக்கத்தை பாதிக்கின்றன. தூக்கமின்மை
என்பது பதட்டத்தினால் உருவாகக்கூடிய பிரச்சினைகளை இன்னும் அதிகமாக்குகிறது, மேலும் அது பதட்டத்தையும் அதிகப்படுத்துகிறது. நல்ல தூக்கம் என்பது பலவகைகளில் ஒரு ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கும் செயல்பாடு.அந்த வகையில் தினமும் நடைப்பயிற்சிக்கு பதட்டத்தை குறைப்பதிலும், ஸ்ட்ரெஸ்ஸைத் தடுப்பதிலும் மிக முக்கியமான பங்கு இருக்கிறது.

இவ்வளவு நன்மைகள் இருக்கும்போது தயக்கம் என்ன… இதுவரை நடைப்பயிற்சியில் ஈடுபடாதீர்கள் உடனே… அதாவது புத்தாண்டு 2025 முதல் தொடங்குங்கள்.புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், ஆரோக்கியம் பெருகட்டும்.

புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துகள்.