
இருட்டைப் போக்க விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை ஒருவர் நினைவு கூருவாராயின்,எந்த இருண்ட சூழலிலும் அவரால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
பொதுவாக மகிழ்ச்சி என்பது சொகுசான வாழ்க்கையும், அந்தந்த நேரத்தில் வருத்தம் இல்லாமல் இருப்பதும்தான் என்றே பெரும்பாலானோர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால்,அந்த வகையான மகிழ்ச்சி எவ்வளவு வந்தாலும், கடலில் கரைத்த உப்பாகவே மறைந்துபோகும்.எத்தனை போட்டாலும் நிரம்பாத பாத்திரமாகவே வெறுமை தட்டும். மின்மினிப் பூச்சியாகக் கடந்து செல்லுமே தவிர,நட்சத்திரமாக நிலைத்து நின்று சுடர் விட்டுப் பிரகாசிக்காது.
மகிழ்ச்சிக்கான ரகசியம் என்ன என்பதை அறிய,கனடாவில் ஓர் ஆய்வு நடத்தினார்கள்.நூறுக்கும் மேற்பட்டவர்களிடம் சைக்காலஜி,நியுரோ சைன்ஸ்,பிலாசஃபி என உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்ததில் அவர்கள் கண்டுபிடித்தது என்ன தெரியுமா? ‘உங்களை நீங்கள் முன்னேற்றிக் கொள்வதும்,மற்றவர்களுக்கு உதவி செய்வதும், உறவுகளுடனான பிணைப்பும்தான் வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தைத் தரும். அதுதான் நிலையான மகிழ்ச்சிக்கு ஆதாரமாக அமையும்’ என்பது தான்.
மகிழ்ச்சி என்பது நமக்கு என்ன கிடைக்கிறது என்பதில் இல்லை. கிடைத்த வாழ்க்கையை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. ஒவ்வொரு பொழுதும் பயத்திலும்,பரபரப்பிலும், இயலாமையிலும்,இறுகிப் போகாமலும்,பிறர் தன்னை கவனிக்க வேண்டும் என்று நினைத்து நம் இயல்பை தொலைக்காமலும் இருப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது.
எந்த வண்ணத்துப் பூச்சியும் தன்னை யாரும் பார்ப்பதில்லை என்று கவலைப்படுவதில்லை. தனக்கு எங்கே இனிமை கிடைக்கிறது என்று மட்டுமே அது தேடுகிறது. எந்தப் பூவும் தன்னைப் பிறர் ரசிக்கவேண்டும் என்பதற்காகப் பூப்பதில்லை. ஒவ்வொரு நொடியும் தான் மலர்ந்திருக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறது. அதனால்தான் அவற்றையெல்லாம் பார்க்கும்போது எப்போதும் மகிழ்ச்சியாகப் பறந்து திரிவதாகவும்,சந்தோஷமாக மலர்ந்திருப்பதாகவும் தோன்றுகிறது.நமக்கும் அந்த ஆனந்தம் தொற்றிக் கொள்கிறது.
நீங்களும் எப்போதும் மற்றவர்கள் உங்களை கவனிக்க வேண்டும் என்று நினைக்காமல்,உங்கள் மகிழ்ச்சி உங்களிடம்தான் ஒளிந்திருக்கிறது என்பதை உணருங்கள்.அப்படி இருந்தால்,நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களிடமிருந்து அந்த சந்தோஷம் மற்றவர்களுக்கும் பரவும்.எங்கும் ஆனந்தம்

