
கலைமாமணி டாக்டர் எஸ். அமுதகுமார், MBBS, MCIP,PG.Dip.Diabetology,F.C.G.P.
உடலுக்கு ஒன்பது வாசல்…
ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு, ரத்த வாந்தி, ரத்தம் ஒழுகுதல், ரத்தம் வடிதல், ரத்தம் வழிதல் – இப்படி உடலின் உள்ளேயிருந்து வெளிவரும் ரத்தத்தை, பலர் பலவிதமாக அழைப்பார்கள்.
தலை முதல் கால்வரை, உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் ரத்தக் கசிவு ஏற்படலாம். அதேமாதிரி, உடலின் வெளியேயும் ரத்தக் கசிவு எற்படலாம்.உடலுக்கு உள்ளேயும் ரத்தக் கசிவு ஏற்படலாம்.உடலின் வெளியே ஏற்படும் ரத்தக் கசிவு நமது கண்ணுக்குத் தெரியும்.நாமே பார்ப்போம்.ஆனால் உடலுக்கு உள்ளேயே எற்படும் ரத்தக் கசிவை நம் கண்ணால் பார்க்க முடியாது.
ரத்தம் உடலில் இருந்து வெளியே வருவதை வெளிரத்தக் கசிவு என்று சொல்லலாம். உடலுக்கு உள்ளேயே ரத்தம் கசிவதை உள்ரத்தக் கசிவு என்று சொல்லலாம். உடலில் இருந்து ரத்தம் வெளியே வர பல வழிகள் உள்ளன.உடல் முழுவதும் 2 சதுர மீட்டர் தோலால் நன்கு மூடப்பட்டுத்தானே இருக்கிறது,அப்புறம் எப்படி ரத்தம் உடலில் இருந்து வெளியே வரும்? என்ற பயம் எல்லாருக்கும் உடனே வந்திருக்கும்.
முகமது பின் துக்ளக் என்றொரு பழைய தமிழ்த் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய அல்லாஹ் அல்லாஹ் என்று தொடங்கும் பாடலில், உடலுக்கு ஒன்பது வாசல், மனதுக்கு எண்பது வாசல் என்று சொல்லியிருப்பார் கண் (2),காது (2),மூக்கு (2),வாய் (1),ஆசன வாய் (1),சிறுநீர்ப்பாதை (1)) ஆக மொத்தம் 9.நமது உடல் முழுவதும் மூடப்பட்டிருக்கும் தோலில் நமது தேவைக்காக இயற்கையாக ஏற்பட்ட இடைவெளிகள்தான் இந்த ஒன்பது வாசல் என்று கவிஞர் வாலி மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
வெட்டு, குத்து, அடிதடி போன்ற நிகழ்வுகளில் கீறல், சிராய்ப்பு, தேய்த்தல் முதலியவைகள் ஏற்பட்டு அதன் மூலம் ரத்தக் கசிவு ஏற்படுவது வெளி ரத்தக் கசிவு ஆகும். விபத்தினால் உடலின் உள்ளேயிருக்கும் உறுப்புகள் மற்றும் சிறிய, பெரிய ரத்தக் குழாய்கள் சேதமடைந்து, அதன் மூலம் ரத்தக் கசிவு ஏற்படுவது உள் ரத்தக் கசிவு ஆகும். வாய் வழியாக ரத்தம் வெளியேறுவதை நாம் ரத்த வாந்தி என்றழைப்பதுண்டு.அதாவது வயிற்றின் உள்ளே இருக்கும் பொருட்களை, மீண்டும் வாய் வழியாக வெளியே கொண்டு வருவது.அது வெறும் ரத்தமாகவும்இருக்கலாம்.அல்லது உணவுகலந்த ரத்தமாகவும் இருக்கலாம். ரத்த வாந்தி எடுத்தாலே, அந்த நபர் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியவர் ஆவார்.
சில நேரங்களில், மிக அரிதாக, மிகச் சாதாரண விஷயத்துக்குக்கூட,ரத்தவாந்தி எற்படுவதுண்டு.சிலசமயங்களில்,மூக்கின் உள்பகுதியில் அடிபட்டாலோ, வாயின் உள்பகுதியில் அடிபட்டாலோ, அந்த இடத்தில் வடியும் ரத்தமானது,வயிற்றுக்குள் போய், பின் மறுபடியும் வாய் வழியாக ரத்த வாந்தியாக வருவதுண்டு.
வாய் வழியாக வரும் ரத்த வாந்தி சிவப்பு, கருஞ்சிவப்பு, பழுப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் இருக்கும். பழுப்பு நிறத்தில் வரும் ரத்த வாத்தி அநேகமாக காபி கலரில் இருக்கும். ரத்த வாந்தியின் நிறத்தை வைத்தே ரத்தம் உடலுக்குள் எங்கிருந்து வருகிறது, எதனால் வருகிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்
கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுத்தால் ரத்தம் பெரும்பாலும் இரைப்பை மற்றும் அதனை ஒட்டிய உணவு மண்டலத்தின் மேற்பகுதியிலிருந்து வருகிறது என்று அர்த்தம்.
பளிச்சென்ற சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுத்தால் அந்த ரத்தமானது, அப்பொழுதுதான் இரைப்பைக்குள் கசிந்திருக்கிறது என்று அர்த்தம்.
கருஞ்சிவப்பு நிறத்தில் வாந்தி வருகிறதென்றால், உடலின் உள்ளே ரத்தம் மெதுவாகக் கசிகிறது என்று அர்த்தம். பளிச்சென்ற சிவப்பு நிறத்தில் வாந்தி வருகிறதென்றால் உடலின் உள்ளே ரத்தம் வேகமாகக் கசிகிறது என்று அர்த்தம்.
ஒரே நேரத்தில் சிலர், சுமார் அரை லிட்டர் ரத்தம் கூட வாந்தியாக எடுப்பார்கள்.இதுபோன்ற நபர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று முதலுதவி செய்ய வேண்டும்.
திடீரென்று வெறும் வாந்தி வந்தாலே, தெருவையே கூட்டிவிடும் நாம்,ரத்த வாந்தி வந்தால், அவ்வளவுதான்… ஊரையே கூட்டிவிடுவோம். ரத்தவாந்திக்கு அவ்வளவு பலம். ரத்த வாந்திக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. விபத்தினாலோ, காயத்தினாலோ, தீராத நாள்பட்ட நோயினாலோ, மருந்து மாத்திரைகள் ஒத்துக் கொள்ளாததனாலோ, அதிக அளவில் உள்ள வயிற்றுப் புண்ணினாலோ ரத்த வாந்தி ஏற்பட வாய்ப்புண்டு.
உணவுக்குழாய் எரிச்சல், மூக்கின் உள்பகுதியில் ரத்தம் வடிதல், நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக்குழாய் சிதைந்து போகுதல், சாப்பிடமுடி யாத ஒரு உணவுப்பொருளை விழுங்கி, அதனால் உணவுக் குழாயில் ஏற் படும் சிதைவு, குழந்தைகள் தெரியாமல் சில பொருள்களை விழுங்கி, அதனால் உணவுக்குழாய் பாதிப்படைதல் போன்ற சில காரணங்களும் ரத்த வாந்தியை உண்டாக்கும். இதோடு மட்டுமல்லாமல், இரைப்பைப் புண், இரைப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய், மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகள் ஆகியவைகளும் ரத்த வாந்தியை உண்டுபண்ணும்.
ரத்த வாந்தி என்பது ஒவ்வொருவருடைய ஆயுளிலும், ஒரே ஒரு தடவையாவது வருவதுண்டு.ஆயுள் முழுக்க ரத்த வாந்தி வராமலேயே வாழ்நாளை ஓட்டியவர்களும் உண்டு. ஆண்டுக்கொரு முறை ரத்த வாந்தி எடுப்பவர்களும் உண்டு.
ரத்த வாந்தி வரும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் .ரத்தம் வாய் வழியாக வெளியே வருவதோடு – மட்டுமல்லாமல் மூக்கு வழியாகவும் வரும். அப்படி வரும்போது திடீரென்று தொண்டையிலிருந்து நுரையீரலுக்குள் சென்றுவிடும். இது தான் ரொம்ப ரொம்ப அபாயமான விஷயமாகும்.
உடனடியாக இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால், உயிரிழப்பு கூட ஏற்படலாம்.பெரும்பாலும் 1.விழுங்க முடியாமல் தொண்டையில் பிரச்னை உள்ளவர்கள்.2.மது அருந்துபவர்கள். 3.பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். 4.வயதானவர்கள்.
இவர்களுக்குத்தான் மேற்கூறிய மாதிரி பிரச்னை ஏற்படவாய்ப்புண்டு.
உடலில் இருந்து வெளியாகும் ரத்தக் கசிவுகளிலேயே மிக முக் கியமானது, பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் ரத்தக் கசிவுதான். மங்கையராய் பிறப்பதற்கே,மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சொல்லியதுபோல பெண்களாய்ப் பிறக்க கோடி கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். பெண்கள் தங்கள் வாழ்நாளில், பெரும்பாலான காலங்கள் இந்தமாதாமாத பிரச்னையில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இது இயற்கையே என்றாலும் படும் கஷ்டம் ஏராளம். பெண்கள் தங்களது பாஷையில் இதைரத்தக் கசிவு என்று சொல்லாமல், ரத்தப் போக்கு என்று சொல்வார்கள். உடலில் இருந்து வெளியாகும் ரத்தப் பிரச்னைகளில் இதுவும் ஒன்று.
கர்ப்பமாக இருக்கும்போது ரத்தக் கசிவு, கர்ப்பப்பை புற்றுநோயினால் ஏற்படும் ரத்தக் கசிவு, பைப்ராய்டு கர்ப்பப்பை கட்டியினால் எற்படும் ரத்தக்கசிவு, ஆசன வாயில் மூல நோயினால் ரத்தக் கசிவு, பெண்ணுறுப்பு வழியாக ரத்தக் கசிவு போன்ற பல காரணங்களில் உடலில் இருந்து ரத்தக் கசிவு ஏற்படுவதுண்டு.
பல் ஈறுகளில் கெட்ட ரத்தம் சேர்ந்து போய் கசிவது, ஆண்களின் சிறுநீர்ப்பாதையில் கல் உண்டாகி, கீழே இறங்கும் போது சிறுநீர்ப்பாதையை கிழித்துக் கொண்டு வரும்போது ஏற்படும் ரத்தக் கசிவு, மலச்சிக்கலினால் ஆசனவாயில் ஏற்படும் ரத்தக் கசிவு போன்ற இன்னும் பல காரணங்களினாலும் ரத்தக் கசிவு ஏற்படுவதுண்டு.
மிகச் சிறிய ரத்தக் கசிவுகளெல்லாம் ரத்தம் உறைந்து தானாகவே நின்றுவிடும்.ஆனால், அதிக, மிகப் பெரிய காயங்களால் ஏற்படும் ரத்தக் கசிவுகள் தானாகவே நிற்காது. பஞ்சு, துணி போன்றவைகளை வைத்து நன்றாக அழுத்திக் கொண்டு, உடனே மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.
ரத்த வாந்தி ஒரு தடவை எடுத்தாலும் சரி,பல தடவை எடுத்தாலும் சரி. சமீபத்தில் எடுத்திருந்தாலும் சரி, பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தாலும் சரி, உங்கள் குடும்ப டாக்டரிடம் முழு விவரத்தையும் சொல்லிவிடுங்கள்.அது உங்களுக்கு சிகிச்சையளிக்க மிகவும் உதவியாக இருக்கும். தான் ரத்த வாந்தி எடுத்தது, மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைத்து மறைக்க முயற்சி செய்யாதீர்கள்.

