‘டெங்கு காய்ச்சல்’ வைரஸ் பாதிப்பினால் ஏற்படக்கூடிய ஒரு ஆபத்தான நோய்.இத்தக் காய்ச்சல், நம் நாட்டில் அக்டோபர்,நவம்பர் மாதங்களில் அதிகமாக ஏற்படும்.

இந்த டெங்கு காய்ச்சல் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது. குறிப்பாக, நகரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குத் தான் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

‘ஃப்ளாவி’ வகை வைரஸ்கள்தான் இந்த டெங்கு காய்ச்சலுக்குக் காரணமாக உள்ளன. ‘ஏடீஸ்’ வகைக் கொசுக்கள்தான் இந்த வைரஸ்களைப் பரப்பி நோயை உண்டாக்குகின்றன.

எப்படிப் பரவுகிறது?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ‘ஏடீஸ்’ கொசுக்கள் கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது அவர்களுடைய உடலில் இருந்து ஃப்ளாவி வைரஸ்கள் கொசுக்களின் உடலுக்குள் சென்று விடும்.பிறகு இந்தக் கொசுக்கள் இன்னொருவரின் உடலில் கடிக்கும்போது வைரஸ்கள் அந்த நபருடைய உடலுக்குள் பரவி டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.

நோயின் பாதிப்புகள்

டெங்கு காய்ச்சல் நான்குவிதமாக மனிதர்கள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

  1. எந்த வகைக் காய்ச்சல் என்று தெரியாத நிலை.
  1. டெங்கு காய்ச்சல்.
  1. டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல்.
  1. டெங்கு அதிர்ச்சி பாதிப்பு.

ஃப்ளாவி வைரஸ் அல்லது டெங்கு வைரஸ் கிருமிகள், ஒருவருடைய உடலுக்குள் நுழைந்த மூன்று முதல் பதினான்கு நாள்களுக்குள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தி விடும்.பெரும்பாலும் பலருக்கு மூன்று முதல் ஏழு நாள்களுக்குள்ளேயே டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுவிடுகிறது.

அறிகுறிகள்

பிற வைரஸ் நோய்களைப் போலவே டெங்கு காய்ச்சலும் ஏற்படும். காய்ச்சல் ஏற்பட்ட சில நாள்களிலேயே அதிக உடல் சூட்டுடன், கடுமையான உடல் வலியும் ஏற்படும்.

மூட்டு வலி, தசை வலி போன்றவையும் இருக்கும்.சிலருக்கு தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். 

மூன்றாவது அல்லது நான்காவது நாளில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்படலாம்.மிகவும் குறிப்பாக தோலில் ரத்தக் கசிவு இருக்கும். அதனால், தோல் முழுவதுமே சிதைந்து போகலாம்.கண்கள் சிவந்து காணப்படும். உடலில் உள்ள நிணநீர்க் கட்டிகளில் வீக்கம் ஏற்படும். உடல் அசதி இருக்கும்.

ஐந்து முதல் எட்டு நாள்கள் வரை டெங்கு காய்ச்சல் இருக்கும். பிறகு படிப்படியாகக் குறைந்துவிடும்.ஆனால், உடல் அசதி, தளர்வு போன்றவை பல வாரங்கள் வரை நீடிக்கலாம்.

ஒரு சிலருக்கு, டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலாகவோ அல்லது டெங்கு அதிர்ச்சி பாதிப்பாகவோ இந்த டெங்கு காய்ச்சல் மாறலாம்.பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டாலும், ஒரு சிலருக்குத்தான் அது டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலாக மாறும். டெங்கு காய்ச்சல் ஏற்படும்போதே ரத்தக்கசிவு ஏற்படுவ தில்லை.ஒருவருக்கு ஏற்கெனவே டெங்கு வைரஸின் பாதிப்பு இருக்கும்போது இன்னொரு புதிய வகை டெங்கு வைரஸின் பாதிப்பு ஏற்படும்போதுதான் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்படுகிறது.

ரத்தக்கசிவு பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?

டெங்கு வைரஸ் கிருமிகள், மனித ரத்தத்தில் உள்ள மோனோசைட்ஸ் எனப்படும் வெள்ளை அணுக்களின் உள்பகுதியில் தான் வளர்ந்து பெருகின்றன. இதனால், அந்த வெள்ளை அணுக்கள் சிதைந்துபோகின்றன. இப்படிச் சிதையும் வெள்ளை அணுக்களில் இருந்து பல்வேறு உயிர்-ரசாயனப் பொருள்கள் வெளிப்படும். இவை ரத்தக்குழாய்களைப் பாதித்து, ரத்தக்கசிவை ஏற்படுத்துகின்றன.

மேலும், இந்த வைரஸுக்கு எதிராக உடலில் ஏற்படும் எதிர்ப்பாற்றல் புரதங்களின் வினையாலும் ரத்தம் உறைதலில் மாற்றம் ஏற்படும். இவர்களுக்குத்தோலில் ரத்தக்கசிவு ஏற்படுவதுடன், உடற்பகுதியிலும் ரத்தக்கசிவு ஏற்படலாம். இதனால், ரத்த வாந்தி எடுத்தல், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் கலந்து வெளியாதல், பெண்களுக்கு மாதவிலக்குச்

சமயத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், வாயில் ஈறு பகுதியில் ரத்தம் கசிதல் போன்ற பல்வேறு வழிகளிலும் ரத்தக் கசிவு இருக்கும். ஒரு சிலருக்கு அபூர்வமாக மூளைப் பகுதியிலும் ரத்தக்கசிவு ஏற்படலாம்.

டெங்கு அதிர்ச்சி பாதிப்பு

டெங்கு காய்சலால் சிலருக்கு டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்படும்.இப்படி ரத்தக்கசிவு ஏற்பட்டு அது அதிகமாகும் போது ரத்த அழுத்தக் குறைபாட்டால், டெங்கு அதிர்ச்சி பாதிப்பு ஏற்படும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு மேல் இந்த டெங்கு அதிர்ச்சி பாதிப்பால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் தளர்ந்துவிடும். நாடித் துடிப்பு வேகமாக துடிக்கும்.ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.கை, கால் பகுதிகள் வெளுத்துவிடும். அடிக்கடி மயக்கம் அடைவார்கள். ஒரு சிலருக்கு நினைவிழப்பு ஏற்படலாம். இந்தப் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால், உயிருக்கே ஆபத்தாக முடியும். டெங்கு அதிர்ச்சி பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் மூன்று சதவீதம் பேர் இவ்வாறு இறந்துபோகிறார்கள். அதனால், பாதிக்கப் பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலால் ஒரு சிலருக்கு மிக அபூர்வமாக மூளைப் பாதிப்பு, மூளை நசிவு போன்றவை ஏற்படலாம். மூளையில் ரத்தக்கசிவு காரணமாகவே இந்தப் பாதிப்புகள் ஏற்படு கின்றன.இவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான தொந்தரவுகளோடு, தலைவலி, வாந்தி, வியர்வை அதிகரித்தல், நினைவிழத்தல், மயக்கம் போன்றவை இருக்கும்.

டெங்கு காய்ச்சலை மருந்துகள் மூலம் முழுமையாக சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவது கடினம்.ஆனால், இந்த டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கான மருந்துகள், சிகிச்சைகள் இருக்கின்றன.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரை முதலில் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். உடல் அசதி, தலைவலி, உடல் வலி போன்றவை இருக்கும் என்பதால் அவருக்கு நல்ல ஓய்வு தேவை. நல்ல ஆரோக்கியமான உணவும் கொடுக்க வேண்டும். சத்தான உணவுகள், பழங்கள் அதிகம் கொடுக்க வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருந்தால், துணியைத் தண்ணீரில் நனைத்து நெற்றியில் வைத்து காய்ச்சலைக் குறைக்க வேண்டும்.