
-டாக்டர் ஜி.ராமானுஜம், மனநல மருத்துவர்,
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி
எல்லா உயிரினங்களுக்கும் தீங்கைத் தவிர்த்தல்(Harm avoidance)என்ற பண்பு அடிப்படையானது. இது குறையும்போது நமது செயல்களின், சூழலின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுகிறோம். தலைக்கவசம் அணியாமல் தலைதெறிக்க வண்டியோட்டுவது, அதீத நம்பிக்கையில் சில முட்டாள்தனமான முதலீடுகளைச் செய்வது,ஆளே இல்லாத ஊரில் டீக்கடை தொடங்குவது,நல்ல பாம்புக்கு முத்தம் கொடுப்பது,மலை உச்சியில் செல்ஃபி எடுப்பது,இன்னும் சிலர் தன்னையே ஹீரோவாக்கி தானே திரைப்படம் எடுத்துக்கொள்வது, கவிதை எழுதுவதுடன் நின்றுவிடாமல் அதைப் புத்தகமாக வெளியிடுவது எனத் தனக்கும் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது இப்படிப்பட்டதுதான். மேனியா (Mania) என அழைக்கப்படும் மன எழுச்சி நோயாலும் இதுபோன்ற
செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை…என திருக்குறள் அருமையாகச் சொல்கிறது. எப்போதும் அச்சம் தேவையற்றது எனச் சொன்னாலும், அச்சம் ஒரு அவசியமான ஆதார உணர்வு.அடிக்கடி செய்தித்தாள்களில் விபத்துச் செய்திகளைக் காண்கிறோம். ஆனால், தலைக்கவசம் அணியச் சொன்னால் மறுக்கிறோம்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தளங்களில் உள்ள ஏரிகளுக்குச் சென்று படகுச் சவாரி போகும்போது லைஃப் ஜாக்கெட் எனப்படும் உயிர்காக்கும் உடையைக் கேட்டுப் பாருங்கள்.ஏதோ புகாரி ஓட்டலுக்குச் சென்று புளியோதரை கேட்பவரைப் போல் நம்மை விசித்திரமாகப் பார்த்தவாறே, எங்கோ ஏழு கடல் ஏழு மலை தாண்டிக் கிடக்கும் ஒரு பழைய உடையைக் கொடுப்பார்கள். அதுவும் பாதி பிய்ந்துபோய் அரைகுறையாகத்தான் இருக்கும்.
ஆனால்,ஏதேனும் விபத்து நடந்துவிட்டால் அரசாங்கம் சரியில்லை, நிர்வாகம் ஒழுங்கில்லை எனப் போராட்டம் நடத்துவோம். இதுபோன்றே மின்சாதனங்களைப் பயன்படுத்துவது, கட்டிடங்களில் தீயணைப்பு சாதனங்கள் அமைப்பது எனப் பல விஷயங்களிலும் நாம் அஞ்சுவதற்கு அஞ்சாமல் இருக்கிறோம். முதலில் பயப்படுவதற்கு யோசிக்காமல் தைரியமாகப் பயப்படுங்கள்!
அப்படியானால் எல்லாவற்றுக்கும் பயந்துகொண்டே இருக்க வேண்டியதுதானா? நிச்சயமாக இல்லை. அச்சமின்மையைப் போல் அச்சமும் அதிகமானால், நமக்குப் பாதிப்புதான். இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அவசியம்.ஆனால் காரோட்டும்போதும் அணிந்திருந்தால் அது அதீத அச்சம். ‘அச்சம் தவிர்’, ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள ‘சமநிலை’ தான் நாம் புரிந்து கொள்ளவேண்டிய வாழ்வியல் மட்டும் அல்ல உளவியல் ஆகும்.

