
பழைய சோறு சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம்… வயிற்றுப் புண் வராது.பழைய சோறு நம் முன்னோர்களின் உடல் நலத்துக்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.சமீபத்தில் அமெரிக்க நியூட்ரிஷன் அசோசியேசன், பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பாராட்டி பட்டியல் இட்டது.
பழைய சாதம்,பழைய சோறு,பழஞ்சோறு, ஏழைகளின் உணவு,ஐஸ் பிரியாணி… என்றெல்லாம். அழைக்கப்படும் இந்த உணவு அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம்.நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும்… என்று இதன் எளிய செய்முறையை விளக்கலாம்தான். இதுகூடத் தெரியாதா எங்களுக்கு? என்று சிலர் கோபப்படவும் கூடும்.ஆனால், எதைச் சொன்னாலும் செய்முறை விளக்கம் கேட்கும் இளைய தலைமுறைக்கு பீட்சா,பர்கரிலேயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் இளைய பட்டாளத்துக்காகவாவது இதைச் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது.பழைய சோறு கிடக்கட்டும்… சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது.
கிராமங்களில் வெயிலில் வாடி, வதங்கி வருபவர்கள் உரிமையோடு கேட்கும் பானம் அது! கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி…!என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால் பழைய சோற்றுத் தண்ணீர், நீராகாரம் என்று அர்த்தம்.உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம் நீராகாரம்.
நன்மைகள்
*உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.
*காலையில் இதைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்;உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
*இந்த உணவு நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்;உடல் சோர்வை விரட்டும்.
*ரத்த அழுத்தம் சீராகும்;உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிக்கச் செய்யும்.
*நாள் முழுவதும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும்.
*ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வு தரும்.
*எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
*புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.
“வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்.
*பழைய சோறு இருக்கும் இடம் ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்து வந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம் பழைய சோறு.
-ஹெல்த் அண்ட் பியூட்டி, Health and beauty

