
எனக்கு வயது 31. இதுவரை மூன்று முறை கரு கலைந்து இருக்கிறது.எதனால் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் யோசனை என்ன டாக்டர்?
-எஸ்.அருணா, தருமபுரி.
ஒரு பெண்ணுக்கு 3 முறைக்கு மேல் தானாக கருக்கலைதல் ஏற்பட்டிருந்தால், அவளை முழுமையாகப் பரிசோதித்து அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
பெரும்பாலும் இவ்வாறு கரு கலைவதற்கு செர்விக்ஸ் எனப்படும் கர்ப்பப்பையின் வாய் தளர்ந்து திறப்பதுதான் காரணம்.மேலும், கர்ப்பப்பையின் அசாதாரணத் தன்மை யும், டாக்ஸோபிளாஸ்மாஸிஸ்,ரூபெல்லா போன்ற நோய்த் தொற்றின் காரணமாகவும் இருக்கலாம்.
இதர காரணங்கள்:
*கர்ப்பப்பையின் வளர்ச்சியின்மை.
*ஹார்மோன் குறைபாடுகள்.
*மரபியல் சம்பந்தப்பட்ட குறைபாடு இருந்தால்,கருவை வளர விடாமல் இயற்கை தடை விதித்து விடும்.
விளக்கமளிக்கவே முடியாத சில சூழ்நிலைகளாலும் கருக் கலைப்பு ஏற்படலாம்.உடலின் எதிர்ப்புச் சக்தி காரணமாக இப்படிப்பட்ட சூழல்கள் உருவாகின்றன.
எதிர்ப்புச் சக்தியின் அடிப்படை என்ன? நமது உடலின் இயல்பு என்னவெனில், எந்தவித அந்நியர்களையும் அது அனுமதிக்காது. அப்படியே ஓர் அந்நியன் அத்துமீறி நுழைந்துவிட்டால், உடனடியாக, antibodies எனப்படும் எதிர்ப்புச்சக்தி வீரர்களை உருவாக்கி அந்நியனை விரட்டி யடித்துவிடும்.
ஆணின் விந்தணுவும், கருவும்கூட பெண் உடலைப் பொறுத்தவரை அந்நியன்தான். எனவே விந்தணு, கருவழிப் பாதையில் நுழைந்தவுடன் அதை அந்நியனாக எண்ணி antibod-ies -களை உடல் உருவாக்கிவிடும். அவை,விந்தணுவை அழித்து விடுகின்றன. சமயங்களில்,இதே காரணத்தினால் கருவணுவே, விந்தணுவை நிராகரித்தும் விடுகிறது.அருகில் உள்ள மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.

