
இன்றைய வாழ்க்கைச் சூழலில், ‘அரிது அரிது அந்நிய உணவுகளை உண்ணாதோர் அரிது! அரிது அரிது இரைப்பை அல்சர் இல்லாதோர் அரிது! எனக் குறுங்கவிதை எழுதும் அளவுக்கு நாட்டில் அல்சர் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். வயதானவர்களுக்குத்தான் அல்சர் வரும் என்று சொல்லிவந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது பத்து வயதிலேயே அல்சர் வந்துவிடுகிறது. 40 வயதில் இது ஆவேசம் காட்டுகிறது.
எது அல்சர்?
இரைப்பையிலும் சிறுகுடலின் முன்பகுதியிலும் புண் ஏற்படுவதை ‘பெப்டிக் அல்சர்’ என்கிறோம். சிறுகுடலின் மற்ற பகுதிகளிலும் பெருங்குடலிலும்கூட அல்சர் வரலாம். அதற்கு வேறு பெயர்கள்; வேறு காரணங்கள்!
இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது; பெப்சின் என்சைம் உண்டாகிறது. இந்த இரண்டும் அளவுக்கு மேல் சுரந்தால் இரைப்பை மற்றும் முன்சிறுகுடலில் தற்காப்பு சவ்வு சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர்.
காரணங்கள் என்ன?
அல்சர் ஏற்பட பல காரணங்கள் உண்டு.இரண்டு காரணங்களே பிரதானம்.அல்சருக்கு ஆணிவேர்.இரைப்பை அமிலம் அதிகமானாலும் அல்சர்.இரைப்பைச் சுவர் பலவீனம் ஆனாலும் அல்சர்.இந்த இரண்டுக்கும் அடிப்படை அம்சம் தற்போதைய தவறான வாழ்க்கை முறை.!
அமிலச் சுரப்பு அதிகமாவதற்கு அந்நிய நாடுகளின் துரித உணவுகள்தான் முதல் காரணம். எப்படி? இரைப்பையில் அமிலம் சுரப்பதை வானொலியை டியூன் செய்வதற்கு ஒப்பிடலாம். சூரியன் எஃப்.எம். கேட்க வேண்டுமா? 93.5 அலைவரிசை ஹலோ எஃப்.எம்.முக்கு 106,4. இதுமாதிரிதான், நாம் அதைச் செரிமானம் செய்ய கொஞ்சமாக சாப்பிடுவது இட்லி/இடியாப்பமா? அமிலம் சுரக்கும். செயற்கை ரசாயனங்கள் தூக்கலாக இருக்கிற மட்டன் பிரியாணியும் சுக்கா வறுவலும் சாப்பிடுகிறோமா? அப்படியானால் அமிலத்தின் அளவு பலமடங்கு அதிகமாகும். ஆக்ரோஷமான கடல் அலைகள் அடிக்கடி வந்தால் கரை சேதமாவதுபோல் அளவுக்கு அதிகமான அமிலம் அடிக்கடி சுரந்தால் அது இரைப்பையைத் தாக்கும்; அல்சர் தலைகாட்டும்.
பெரும்பாலான வானொலிகள் சொல்லிவைத்ததுபோல் அதிகாலை 5 மணிக்கு ஒலிபரப்பை ஆரம்பித்துவிடும். அதேபோல் இரைப்பையிலும் காலை, மதியம், இரவு வேளைகளில் முறையே 8, 1,8 என்ற மணி அளவில் உணவை எதிர்பார்த்து அமிலம் சுரக்கத் தொடங்கிவிடும். அந்த நேரங்களில் நாம் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால், இந்த அமிலம் இரைப்பைச் சுவர்களைத் தின்ன ஆரம்பிக்கும். நேரத்தோடு சாப்பிடாதவர்களுக்கு இந்த வழியில்தான் அல்சர் வருகிறது.
சிலருக்குக் காரம், புளிப்பு சாப்பிட்டால் அமிலம் அதிகமாகும். இன்னும் சிலருக்கு எண்ணெய் காரணமாக இருக்கும். இன்றைக்குக் காரம், புளிப்பு, எண்ணெய் மிதக்காத ஒரு துரித உணவைக் கைகாட்ட முடியுமா? அதனால்தான் சொன்னேன், அந்நிய உணவுகள் அல்சருக்கு அழைப்பிதழ் கொடுக்கும் தீயசக்திகள் என்று!
அடுத்து, மனசுக்கும் அல்சருக்கும் நெருங்கிய தொடர்புண்டு! ஆம்! மனசுக்கும் அமிலச் சுரப்பிகளுக்கும் நடுவில் வேகஸ் எனும் நரம்புப் பாலம் உண்டு. இதன் வழியாகத்தான் மூளையிலிருந்து அமிலம் சுரப்பதைத் தூண்டுகிற தூதுவர்கள்’ இரைப்பைக்கு வந்துசேருகின்றனர். ஆகவேதான், மன அழுத்தம், கவலை, கோபம், ஆத்திரம், பரபரப்பு போன்ற மனசு சார்ந்த பிரச்சினைகள் நம்மை பாதிக்கும்போதெல்லாம் இரைப்பையில் அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரந்து அல்சரை வரவேற்கிறது. இதுபோல் உறக்கம் தொலைந்த/ஓய்வில்லாத வாழ்க்கையும் அல்சருக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.
இரைப்பைக்குப் புகையும் மதுவும் ஓர் இரட்டைத் துப்பாக்கி போன்றது! இவை அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும்; ஏற்கெனவே அல்சர் இருந்தால் அதைத் தீவிரப்படுத்தும்; அல்சர் மாத்திரைகளையும் வேலை செய்யவிடாது; நோய் குணமாகாது.
இரைப்பை சுவர் பலவீனம் ஆனாலும் அல்சர் வரலாம் என்று சொன்னோம்.இதற்கு ஹெச் பைலோரி எனும் பாக்டீரியா கிருமியின் வேலை.இந்த பாதிப்பு உள்ளவர்கள் இதற்கென இருக்கிற கூட்டு மாத்திரைகளை சாப்பிட்டால்தான் அல்சர் விடைபெறும்.
அல்சர் வராமல் தடுப்பது எப்படி?
ஒரு வேளை உணவைக்கூடத் தவிர்க்காதர்கள்; தள்ளிப் போடாதீர்கள். காரம், மசாலா, புளிப்பு நிறைந்த உணவுகளைத் தவிருங்கள்.
சிறுதானிய உணவுகள், முழுதானிய உணவுகள் சிறந்தவை. கத்திரிக்காய், அவரை உள்ளிட்ட நாட்டுக் காய்கள் நல்லது.
அவித்த உணவை அதிகமாகவும் பொரித்த உணவைக் குறைவாகவும் சாப்பிடுங்கள். நீர் மோரும் இனிப்புத் தயிரும் இரைப்பைக்கு நண்பர்கள்.
நொறுக்குத் தீனிக்குப் பதிலாக பழம், சாலட் சாப்பிடுங்கள்.
காபி, தேநீர், குளிர் பானங்கள், கோலா பானங்கள் வேண்டாமே!
இரவில் எளிய உணவு போதும்.
அடிக்கடி விருந்துகளுக்குச் செல்லாதீர்கள்.
மது,புகை வேண்டவே வேண்டாம்!
பயம், பதற்றம், பரபரப்பு, ஆத்திரம், கோபம், மன அழுத்தம் தவிர்க்கவும். சுயமருத்துவம் வேண்டாம்.
வலி மாத்திரைகளிடம் கவனமாக இருங்கள்!

