-ஜி.சக்கரவர்த்தி,பி.பார்ம்
 
மருந்து மாத்திரை பற்றிய விழிப்புணர்வுக்காக மருந்து சாப்பிடும் முன் ஒரு நிமிஷம்!என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருந்தேன்.விகடன் பிரசுரம் வெளியிட்டது.அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் ஹெல்த் அண்ட் பியூட்டி வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்
 
நோய்களின்போது மட்டும் மருத்துவரின் சிபாரிசுப்படி தேவையான கால அளவு வரை மருந்தோ மாத்திரையோ எடுத்துக்கோண்டு
உடல் நிலை 
சரியானதும் நிறுத்தி விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதுதானே சரி.
அதில்லாமல் டெப்போவில் பஸ் நின்ற பிறகும் இறங்காமல் அடம் பிடிப்பது போல, நோய் தீர்ந்த பிறகும் “நான் நிறுத்த மாட்டேன்,” இது தின்னாத்தான் எனக்கு நல்லாருக்கு. தின்னலைனா மறுபடி எனக்கு ஏதும் வந்திடும்.” என ஸ்டாக் தீர மாத்திரை வாங்கித் தின்று கொண்டிருக்கும் சில ஆசாமிகளைப் பார்க்கும் போது பாவப்படத்தான் வேண்டியிருக்கிறது.
 
சில குணப்படுத்த முடியாத, ஆனால் கட்டுப்படுத்தக்கூடிய நோய்களுக்கு மட்டும்தான் காலம் பூரா மருந்து தின்னும் தலைவிதி. உதாரணமாக ஆஸ்துமா, ஹைப்பர் டென்ஷன், டையபட்டீஸ்….
 
மற்றபடி நிறைய நோய்கள் யாவும் குணப்படுத்தக் கூடியவை. நோய் தீரும்வரை தின்று விட்டு, தலையை சுற்றி தூர எறிந்து விட்டு வந்து விட வேண்டும். அப்படி விட முடியாமல் மாத்திரையைக் கட்டிக் கொண்டு அழுவதைதான் Drug Addiction என்பார்கள். அதாவது மாத்திரை சார்ந்த வாழ்வு (Dependence of Drug )
 
தண்ணி, தம், கஞ்சா போல இவர்கள் மருந்து, மாத்திரைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பார்கள். இந்த மாதிரி அடிமைப்படுபவர்கள், தானாக மருந்து எடுக்க (Self Medication) ஆரம்பித்தவர்கள்; கன்னா பின்னாவென்றும், அளவு தெரியாமலும் மருந்து தின்ன ஆரம்பித்தவர்கள்.
 
ஒல்லியாக இருப்பவன் ஒருத்தனைப் பார்த்து எவனாவது தெரிந்தவன் “என்ன மச்சான் ஈறுகுச்சி கணக்கா இருக்குற, இந்த விட்டமின் மாத்திரை வாங்கித் தின்னு, அப்புறம் பாரு சும்மா கும்முன்னு கர்லா கட்டை கணக்கா ஆயிடுவே” என பத்த வைத்து விட்டுப் போவான். இவன் அர்னால்டு ஆகும் ஆசையில் விட்டமின் மாத்திரை கண்டது, கடையது எல்லாம் வாங்கித் தின்பான். கடைசியில் விட்டமின் மாத்திரையும் பாக்கெட்டுமாக அலைவான்.
 
ராத்திரி தூக்கம் வரவில்லையா? மொட்டை மாடியில் உட்கார்ந்து யோசிக்கும் சில ஆசாமிகள், தூக்க மாத்திரை தின்ன ஆரம்பிப்பார்கள். கடைசியில் தூக்க மாத்திரை தின்னலைன்னா தூங்க முடியாது என்ற நிலைக்குப் போய் விடுவார்கள்.
 
இன்னும் சில அல்சர் ஆசாமிகள் டைஜினும், ஆன்ட்டாசிடுமாக குடிப்பார்கள். சாப்பிட்டு விட்டு தண்ணி குடிப்பது போல ஆன்ட்டாசிட் சாப்பிடுவார்கள். கேட்டால் “பழக்கமாயிடுச்சு” என சிரிப்பார்கள்.
 
தலைவலிக்காரர்களுக்கு கேட்கவே வேண்டியதில்லை. காதலியை எதிர்பார்ப்பவன் போல தலைவலி எப்படா வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். வர்ற மாதிரி தெரிஞ்சதுமே மாத்திரை போட்டு தண்ணி குடித்துவிட்டு,ஆகா தடுத்துட்டேன் பார்த்தியா என, அடுத்து எப்போ மாத்திரை திங்கலாம் என்று ஆவலாகக் காத்திருப்பார்கள்.
 
இது போல, கன்னா பின்னாவென்று மருந்து எடுப்பதை Drug Abuse, Drug Misuse எனச் சொல்வார்கள். இதையெல்லாம் Drug Addictionக்கு கொண்டு போய்விடும். போற்றுபவர்கள் போற்றட்டும். புழுதி வாரித் தூற்றுபவர்கள் தூற்றட்டும். எம் வழியில் தொடர்ந்து செல்வோம்” என தப்பு செய்பவர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
 
இன்னும் சில மருந்துகள் நீண்ட காலம் எடுக்கும்போது, அதாவது ரொம்ப காலமாக Antibiotic எடுக்கிறோம் என வையுங்கள்… உடலில் நோய் தரும் பாக்டீரியாக்கள் அந்த மருந்தை எதிரியின் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு எதிர்ப்பது போல எதிர்க்க ஆரம்பித்துவிடும். இதை Drug Resistant என்பார்கள். இந்த மாதிரி நேரத்தில் அந்த மருந்தைத் தின்னுவதெல்லாம் வெட்டி வேலை.சரியாக கண்டுபிடித்து வேறு மருந்து தின்ன வேண்டும்.
 
ஓப்பியம் வகை மருந்துகளான மார்பின், ஹெராயின், பெத்தடின், மெத்தடோன் போன்ற பெருந்தலைகள் மட்டும்தான் அடிமையாக்கும் என்பதில்லை. நாம் சரியாக கட்டுப்பாடில்லாமல் தின்னும் சின்ன விட்டமின் மாத்திரை கூட நம்மை அடிமையாக்கி விடும். இதனால்தான் எந்த மருந்தை யார் தின்ன வேண்டும் என டாக்டர்கள் யோசனையின் பேரில் நடக்க வேண்டும். சில மருந்துகளை எழுதுவதற்கு குறிப்பிட்ட சில டாக்டர்களுக்குத்தான் அதிகாரம் உண்டு. சில மருந்துகளை விற்பதற்கு சில மெடிக்கல் ஷாப்பில் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்க வேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டு வைத்திருக்கிறார்கள்
 
Drug Addiction ஆனவர்கள் மீண்டு வர வழியில்லையா? தடுக்க சட்டம் இல்லையா? இருக்கிறது. ஆனால் விதிமுறைகளின் கயிறு நம்மை இறுக்குவதாக நினைத்து நாம் அறுக்க நினைக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கட்டு அவிழும்போதும் நாம் நம்மை அறியாமல் பாதாளம் நோக்கி விழுகிறோம்.