– டாக்டர் .வி.விக்ரம்குமார் எம்.டி(சித்தா)
 
பசும்பால் தெரியும், ஆட்டுப்பால் தெரியும், ஒட்டகப்பால் தெரியும். அதென்ன தங்கப்பால்! விலை உயர்ந்த தங்கத்தைப் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் பாலா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்!… தங்கத்தின் விலை பற்றியெல்லாம் கணக்கிடும் வகையில் உங்கள் கற்பனையை ஓடவிட வேண்டாம்! சளி, இருமல் பாடாய்ப்படுத்தும் போது, வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பரிந்துரைக்கும் உன்னதமான மருந்து தான் இந்த ‘தங்கப்பால்.’
 
நெடுங்காலம் முதலே பாலில் மஞ்சள் மற்றும் சில மணமூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படும் மருத்துவ குணமிக்க மஞ்சள் பாலைத் தான், இப்போது ‘தங்கப்பால்’ என அழைக்கின்றனர் மேலை நாட்டினர். உண்மை தான்… விலை உயர்ந்த தங்கத்தை விட. மூலிகைப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் மஞ்சள்பால் கொடுக்கும் பலன்கள் அதிகமானவை. பாலோடு மஞ்சள் சேர்க்கும் போது கிடைக்கும் நிறம், தங்கம் போல ஜொலிக்கும் தானே !… தாராளமாக இதை தங்கப் பால் என அழைக்கலாம்.
 
சமைத்து முடித்த உணவுகளுக்கு நிறத்தைக் கொடுக்கவும் அழகூட்டவும் மட்டுமே இவ்வளவு நாட்களாக மேலை நாடுகளில் மஞ்சளைப் பயன்படுத்தப்படுத்தி வந்தனர். மஞ்சளுக்குள் விரவிக்கிடக்கும்  மருத்துவக் கூறுகளை அலசி ஆராயத் தொடங்கியதன் விளைவாக, இப்போது மஞ்சளை விசாலமாக பயன்படுத்தும் சிந்தனை அவர்களுக்கு துளிர்விட்டிருக்கிறது எனலாம். நம்மிடம் இருக்கும் இந்த அற்புதமான மருந்தை, நாம் தான் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.
 
 பாலில் மஞ்சள், மிளகு, ஏலம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ‘தங்கப்பால்’ பல்வேறு நோய்களை நீக்கும் குணமுடையது. அதுவும் இப்போது தொடங்கியிருக்கும் மழைக்காலத்திற்கு மிகவும் அவசியமான மருத்துவ பானம் இது. மூக்கிலிருந்து நீர்வடியும் போது… தொண்டையில் கரகரப்பு மேலோங்கும் போது… தலைபாரமாக உணரும் போது.. அடுக்கடுக்காய் இருமல் துன்பப்படுத்தும் போது… உடனடியாக மாத்திரைகளைப் பயன்படுத்த பரபரக்க வேண்டாம் .பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து குடித்துப் பாருங்கள். எவ்வித பக்கவிளைவுமில்லாமல் பலன்கள் விரைவில் கிடைக்கும்.
 
மஞ்சளில் இருக்கும் ‘கர்குமின் ‘ (Curcumin) எனும் வேதிப்பொருள், மஞ்சள் பாலின் வீரியத்தை அதிகரிக்கிறது. கர்குமினின் நோய்ப் போக்கும் திறனை, உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. மனதை உற்சாகப்படுத்தி, மனச்சோர்வை (Depression) குறைக்கும் வன்மையும் கர்குமினுக்கு இருப்பதாக ஆய்வு நிரூபிக்கிறது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் தங்கப்பாலை உபயோகிக்கலாம்.
 
பாலில் மஞ்சளோடு, சுக்குத் தூள், அமுக்கிராப் பொடி, பாதாம் பருப்பு என இயற்கைப் பொருட்களை சேர்த்து தங்கப்பாலின் மதிப்பை மேலும் கூட்டலாம். இவை உடலுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்க உதவும். பொதுவாக பாலில் மஞ்சள், மிளகு, இஞ்சி, ஏலம் போன்ற பொருட்களைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சளோடு மிளகு சேர்க்கும் போது, இரண்டின் மருத்துவகுணங்களும் அதிகரிக்கும். மஞ்சளின் ‘கர்குமினும்’ மிளகின்  பைப்பரினும் வினைபுரிந்து, வீரியமிக்க மருந்தாக  மாறும்.
 
மிகக் குறைந்த செலவில் வீரியம் மிக்க மருத்துவ குணம் நிறைந்த பாலை, சுத்தம் சுகாதாரத்தோடு வீட்டிலேயே தயாரித்து அருந்தி  ஆரோக்கியமாக வாழலாம்.