
-டாக்டர்.எம்.செந்தில் குமார்,பிசியோதெரபிஸ்ட்.
தினமும் உடற்பயிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மற்றவர்களிடமிருந்து இருமல், சளி, தும்மலால் வெளியேறும் கிருமிகள் நம்மை அண்டவிடாமல் தடுக்கலாம்.
வயதாக ஆக நம் எலும்பில் தேய்மானம் ஏற்படும்.
இதனால் எலும்பில் வலிமை குறைந்து விடுகிறது.
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியின் மூலம்
தான் எலும்பு தேய்மானம் அடையாமல் தவிர்க்கலாம்.
உடற்பயிற்சி செய்வதால், எலும்பு மூட்டு மற்றும் தசைநார்கள் நன்றாக பலப்படுகிறது. தசைகளில் சுருங்கி
விரியும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் எந்த ஒரு பொருளையும் அசால்டாக தூக்கி கையாள முடியும். கரடு முரடான பாதையில் நடந்து செல்லும் போது
சட்டென கால் இடறினாலும் தசைபிடிப்பு போன்ற பிரச்சினைகள் பெரும்பாலும் வராமல் தடுக்கலாம்.
அலுவலகத்தில் அதிக நேரம் தொடர்ந்து பணிபுரிந்தாலும் சோர்வு என்பதே தெரியாமல் உடலின் செயல் திறன் மேம்படும்.
மூட்டுவலி பிரச்னையால் சிலர் அவதிப்படும்போது ஒட்டு மொத்த உடலின் எடையும் ஒரே காலில் கொண்டு வந்து சாய்ந்தபடி, விந்தி விந்தி நடப்பார்கள். உடற்பயிற்சி செய்வதால் தசைநார்கள் வலிமை அடைந்து இது போன்ற பாதிப்பு வராமல் தடுக்கலாம்.
உடம்பில் தேவையில்லாத கொழுப்பு வயிற்று பகுதியில் தேங்கி, தொப்பை விழுந்து விடும். தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே போதும். இதனால் வயிறும் குறைந்து அழகிய கம்பீர தோற்றத்தை பெற முடியும்.
புற்று நோய் திசுக்களையும் உடற்பயிற்சி கட்டுப்படுத்துகிறது. முறையான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது புதிய திசுக்கள் உருவாகி வளர்ச்சி அடைவதால் புற்றுநோய் திசுக்கள் படிப்படியாக அழிந்து விடும்.
இதமான உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் குறைந்து, எந்த வேலையையும் எளிதாக செய்யக்கூடிய அளவுக்கு, உடலில் தெம்பையும், புத்துணர்வையும் எப்போதும் தக்க வைக்கலாம்.
உடற்பயிற்சி செய்வதால் மனப் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும்.
உடல் பருமனை குறைத்து உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்க உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவும் கூட.
உடற்பயிற்சி செய்துவந்தால் பல விதமான நோய்களில் இருந்து இருதயம் பாதுகாக்கப்படும். பரம்பரையாக இருதய நோய் இருந்தாலும் தொடர் பயிற்சியால் வரக்கூடிய பிரச்னைகளைத் தள்ளிப்போட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
சீரான முறையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் தசைகளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும் போது ரத்தக் குழாய்கள் விரிவதால் உயர் ரத்த அழுத்தம் வருவதை தடுக்கலாம்.
சில வகை உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல் நலத்திற்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. உதாரணத்திற்கு விபத்துகளால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தருவதே இந்த உடற்பயிற்சிகள் தான்.
உடற்பயிற்சி செய்தால் கட்டுமஸ்தான உடலமைப்பு,உறுதியான தசைகள் மற்றும் ஆரோக்கியமான உடல் என பலவகையான பலன்கள் கிடைக்கும்.

