-டாக்டர்.சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்.

மீபத்தில் நண்பர் ஒருவருடைய குழந்தையின் பிறந்தநாள் நிகழ்விற்காகச் சென்றிருந்தேன். அங்கு பெற்றோர்களுக்காகத் தனி உணவும், குழந்தைகள் அனைவருக்கும் பீட்சா உணவும் ஏற்பாடாகி இருந்தது. அதைப் பார்த்ததும்  எனக்குள் “பீட்சா எப்போது குழந்தைகளின் உணவானது?’ என்ற கேள்வி எழுந்தது. அதேபோல பெரும்பாலான அமெரிக்க வணிக நிறுவனங்களும் குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமான உணவுப் பொருள் என விளம்பரப்படுத்துகிறார்கள். 

இது எப்படி நிகழ்கிறது? சமீப காலங்களில் மேற்கத்திய கலாச்சார உணவு முறைகள் குழந்தைகளைக் குறிவைத்து தனது வலையை விரிக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

உணவு என்பது ஊட்டச்சத்துக்கானது, வளர்ச்சிக்கானது,  ஆரோக்கியத்திற்கானது என்பது மாறிப்போய் உணவு என்பதைச் சுற்றிப் பல கற்பிதங்களும், மதிப்பீடுகளும், அடையாளங்களும் கொடுக்கப்பட்டதன் விளைவுதான் மேற்கத்திய கலாச்சார உணவுகளை நம் குழந்தைகள் நாடிப் போவதில் வந்து முடிந்திருக்கின்றன.

நமது உணவு பழக்கம் உடல் நலத்துடன் நேரடியாக தொடர்புடையவை.உடல் நலத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் உணவு பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஒரே அளவில் மனநலப் பிரச்சினைகள் பெருகி வருவதற்கு காரணமாக,மாறிவரும் நமது வாழ்க்கை முறைகள் தான் காரணம் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.உடல் உழைப்பு குறைந்ததும் மாறிவரும் உணவு பழக்கங்களும் தான் இதற்கெல்லாம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

குழந்தைகளின் உணவுப் பொருட்களையே இரண்டாகப் பிரிக்கலாம்: நரம்பியல் சாதகமானது (Neuro healthy), நரம்பியலுக்கு ஆபத்தானது (Neuro toxic). எந்த உணவு முறைகளெல்லாம் சாதகமானது, எந்தெந்த உணவு முறைகள் ஆபத்தானது என்பதை இன்றைய பெற்றோர்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

ஒரு குழந்தையின் இயல்பான வளர்ச்சிக்கு சமவீதத்தில் கார்போஹைட்ரேட், கொழுப்புசத்து, புரதச்சத்து மற்றும் கனிமங்கள், வைட்டமின்கள் போன்ற நுண்ணூட்டங்களும் மிக அவசியமானது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நியூரான்களின் வளர்ச்சியும் மூளையின் செயல் திறனும் பெரும்பாலும் கார்போஹைட்ரேட் என்னும் சர்க்கரையையே சார்ந்து இருக்கின்றன. இந்த சர்க்கரை ஒரு மேம்படுத்தப்பட்ட சர்க்கரையாக (Complex sugar) இருக்கும் பட்சத்தில் அது மிகப் பாதுகாப்பானது. பழங்கள், தானியங்கள், கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் இந்த சர்க்கரை மேம்படுத்தப்பட்ட சர்க்கரையாக இருக்கின்றன. ஆனால் எளிய சர்க்கரை (Simple sugar) வகைகள் ஆபத்தானவை. எளிய சர்க்கரையில் இருந்து மூளை உடனடி ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும்.

ஆனால் அதில் இருந்து உருவாகக்கூடிய நச்சுப்பொருட்கள் (free radicals) நரம்பு மண்டலத்திற்கும், நியூரான்களின் வளர்ச்சிக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய இனிப்புகள், சாக்லேட்டுகள், கேக், குக்கீஸ், பர்கர், பீட்ஸா போன்ற உணவுப் பொருட்களில் இந்த எளிய சர்க்கரை வகைகளே உள்ளன. நீண்டகாலம் தொடர்ச்சியாக இவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் நியூரான்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். அதே போல நியூரான்களின் இணைப்பும் அத்தனை முழுமையாக இருக்காது. அதனால் குழந்தைகளின் கற்றல் திறனை பாதிக்கும்.கவனமின்மை அதிகரிக்கும்.இதன் விளைவாக குழந்தைகளுக்கு பல்வேறு உணர்வு ரீதியான நடவடிக்கை பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல் கொழுப்பு சத்தைப் பொருத்தவரையில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானதாகும்.

மீன்  எண்ணெய்களிலும் சில தாவர எண்ணெய்களிலும் கிடைக்கக்கூடிய ஒமேகா 3,ஒமேகா 6,  கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு சாதகமானது. ஆனால் நமது குழந்தைகள் ப்ரைட் ரைஸ் ,பிஸ்கட்,டோனட், பர்கர்,பீட்சா போன்ற பெரும்பாலான பேக்கரி பொருட்களை சாப்பிடுகிறார்கள்.

இதனால் நல்ல கொழுப்பு குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.

குளிர்சாதனப் பெட்டியின் வரவிற்குப் பின் நமது உணவு முறைகள் வெகுவாக மாறியிருக்கின்றன. உணவு சேமிக்கப்பட்டு நீண்ட நாள் பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கப்படும் முறை இந்த குளிர்சாதனப் பெட்டிகளின் வரவால் நிகழ்ந்திருக்கிறது. அது மட்டும் அல்லாது உணவு சார்ந்த வணிக நிறுவனங்களும் நீண்ட நாள் பயன்பாட்டிற்காக உணவைப் பதப்படுத்த தொடங்கின. இன்று சந்தையை பெரும்பாலும் ஆக்ரமித்திருப்பது இந்தப் food). பதப்படுத்தப்பட்ட உணவே (Processed food).இப்படிப் பதப்படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் ஏராளமான பொருட்கள் அந்த உணவுடன் சேர்க்கப்படுகின்றன. அவையெல்லாம் நியூரான்களின் வளர்ச்சியின்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் சமீபத்திய ஆராய்ச்சிகள் கண்டறிந்திருக்கின்றன. இவையெல்லாம் நரம்பியலுக்கு ஆபத்தான (Neurotoxic) உணவுப் பொருட்கள்.

வணிக நோக்கத்திற்காக சமீப காலங்களில் குழந்தைகளின் உணவு என்று திட்டமிட்டு சில பிராண்டுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகள் முதலான அத்தனை ஊடகங்களிலும் இந்த உணவுப் பொருட்கள் மிக நுட்பமாக சந்தைப்படுத்தப்படுகின்றன. அந்த உணவுப் பொருளின் மூலப்பொருட்களையும்,

அது உண்மையில் தரும் ஊட்டசத்து அளவையும் கண்டுகொள்ளாமல் அத்தகைய உணவுகள் பெற்றோர்களால் தருவித்து தரப்படுகின்றன. 

குழந்தைகளைப் பொறுத்த வரையில் எந்த ஒரு உணவையும் அது தரப்படும் முறையைப் பொறுத்தே விரும்புகின்றன. ருசியோ அல்லது அதில் உள்ள ஊட்டச்சத்தோ அவர்களுக்கு முக்கியமல்ல. ஒரு அழகான கார்ட்டூன் பொம்மை வரையப்பட்ட கேக் அவர்களை மிக அதிகமாக ஈர்க்கும். ஆனால் எந்தவித அலங்காரமும் இல்லாத சத்து மாவுக் கரைசல் அவர்களால் விரும்பப்படாது,அது எவ்வளவு சுவையாக இருந்தாலும். இதைப் புரிந்துகொண்ட உணவு நிறுவனங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த சில அலங்காரங்களைச் செய்து தங்களது உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. பெற்றோர்களும் இந்த வணிக சந்தைக்கு இரையாவதுதான் வேதனையானது. 

விருப்பங்களுக்கும், தேவைகளுக்குமான வித்தியாசம் குழந்தைகளுக்குத் தெரியாது.ஆனால் நமக்கு அது நிச்சயம் தெரிய வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்குத் தேவையானவற்றை நாம் நிராகரிக்கக்கூடாது. அதனால் உணவுகளின்மீது திணிக்கப்பட்ட போலி விளம்பரங்களையும், மதிப்பீடுகளையும், அடையாளங்களையும் புறக்கணித்துவிட்டு அவர்களுக்கு அந்தந்த வயதில் தேவையான, அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு முழுமையான உணவைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்துப் பெற்றோர்களுக்கும் இருக்கிறது. ஏனென்றால் உணவு என்பது வெறும் ருசிக்கானது மட்டுமல்ல, அதுதான் நமது குழந்தைகளின் உடல்நலத்திற்கும் அத்தியாவசியமானது.