டாக்டர் கு.கணேசன் எம்.பி.பி.எஸ்
பொதுநல மருத்துவர்

தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போகவேண்டாம் என்று கூறுவார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… தினமும் ஓர் ஆஸ்பிரின் சாப்பிடுங்கள்; உங்கள் ஆயுள் அதிகரிக்கும்’ என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

‘என்ன, ஒரு ரூபாய் மாத்திரைக்கு இத்தனை மகத்துவமா?’ என்று கேட்பது காதில் விழுகிறது.

சாதாரணமாக காய்ச்சல், தலைவலி உடல் வலிகளுக்குத் தரப்படுகிற ஆஸ்பிரின் மாத்திரை உயிர் காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்பது உண்மை! இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், அதிக கொழுப்பு உள்ளவர்கள். புகைபிடிப்பவர்கள், நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆகியோருக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது குறையத் தொடங்குவதால் வரும் மாரடைப்புக்கு ‘ஆஞ்சைனா’ (Angina) என்று பெயர். மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால், நெஞ்சுவலி குறைந்துவிடும். இதயத்துக்கு ரத்தமும் ஆக்ஸிஜனும் தேவையான அளவுக்குக் கிடைக்காத காரணத்தால் இந்த வலி வருகிறது.

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் வலி வியாபித்து கயிறு கட்டி இழுப்பதுபோல நெஞ்சு வலிக்கும். நேரம் ஆக ஆக வலி கூடிக் கொண்டே போகும். மயக்கம் வரும். மார்பைப்  பிசைந்து  அழுத்துவது போல் கடுமையாக வலிக்கும். இந்த வலி கழுத்து, தாடை இடது புஜம், இடது கைவிரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்த்துக் கொட்டும். ஓய்வெடுத்தாலும் நெஞ்சு வலி குறையாது. மேலும் மேலும் வலி கூடிக்கொண்டே போகும். இதுதான் முழுமையான மாரடைப்பு. அதாவது மயோகார்டியல் இன்பார்க்ஷன் (Myocardial infarction). ரத்தக்குழாயில் கொழுப்பு / ரத்தக்கட்டி அடைத்துக் கொள்வதால் இது ஏற்படுகிறது.

இந்த இரண்டுக்கும் உயிர் காக்கும் மருந்தாக ஆஸ்பிரின் விளங்குகிறது. ரத்தக்குழாயை விரிக்கிற தன்மை ஆஸ்பிரினுக்கு உண்டு என்பதால், ‘ஆஞ்சைனா வலியின்போது சுருங்கிய நிலையில் உள்ள கரோனரி ரத்தக்குழாய்களை விரித்துவிடுகிறது. ரத்தம் இதயத்தசைகளுக்குத் தடையில்லாமல் கிடைத்துவிடுகிறது. இந்தக் காரணத்தால் ஆஞ்சைனா வலி குறைந்துவிடுகிறது. இதுபோல் ரத்தம் உறைகிற தன்மையைத் தடுக்கும் குணமும் இதற்கு உண்டு என்பதால், இன்ஃபார்க்ஷன் எனும் மாரடைப்பிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.

எனவேதான், கோவையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் அண்மையில் அளித்த பேட்டியில், ‘மாரடைப்பு அறிகுறிகள் தெரியவரும்போது உடனடியாக டிஸ்பிரின் (ஆஸ்பிரின்) 325 மில்லி கிராம், அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடாப் 150 மி.கி. சாப்பிட்டால் ரத்தம் உறைவதைத் தடுத்து, மாரடைப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும். பின்னர் மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொண்டால் உயிர் பிழைக்கலாம்’ என்று கூறியுள்ளார்.