ஊமத்தை ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல மருந்து. அதே நேரத்தில் அதை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். ஊமத்தை இலையோ, பூவோ அல்லது இரண்டையுமே காயவைத்து சுருட்டு மாதிரி சுற்றி வாயில் வைத்து புகையை உள்ளே இழுத்துவிட்டால், அந்த நேரத்தில் வரக்கூடிய மூச்சுத் திணறல் சரியாகும். பிரச்னைக்கு ஏற்றாற்போல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், தலை சுற்றுவது போலவோ, வாய் குமட்டல் வந்தாலோ உடனே நிறுத்தி விட வேண்டும். நீண்ட நாட்களாக வறட்டு இருமலால் அவதிப்படுபவர்களும் இதேபோல் செய்தால் பலன் கிடைக்கும்.

ஊமத்தையில் கரு ஊமத்தையின் பிஞ்சுக்காயை உமிழ்நீர் விட்டு மையாக அரைத்து தலையில் வழுக்கை உள்ள இடங்களில் தடவிக் கொண்டு வந்தால் முடி வளரும். இதில் மருள் ஊமத்தையின் வேரை மணப்பாகு செய்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய்கூட குணமாவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம். ஆனால் கவனமாக சாப்பிட வேண்டும். அனுபவம் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்வது நல்லது.

புண்கள், அழுகிய புண்கள் குணமாக அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் சம அளவு ஊமத்தை இலைச்சாறை கலந்து அடுப்பில் நீர் வற்றும் வரை காய்ச்சி, குளிர்ந்ததும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். இதை புண் உள்ள இடத்தில் வெளிப்பூச்சாக பூசினால் குணம் கிடைக்கும். ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்தடம செய்தால் கீல்வாயு குணமாகும்.

தேள், பூரான், வண்டுக்கடியால் ஏற்படும் வீக்கத்துக்கு ஊமத்தை இலையை அரைத்து மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம். வீக்கம், கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்துக்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டால் பலன் கிடைக்கும்.

பிஞ்ச ஊமத்தங்காயை சிறிதளவு எச்சில் (உமிழ் நீர்) சேர்த்து அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வர, தலைப்பேன்கள் குறையும். முடி வளரத் தொடங்கும்.

– டாக்டர் பி.அருண், பி.எஸ்.எம்.எஸ்.