மூலிகை மருத்துவர்
என்.திருநாவுக்கரசு எஸ்.எம்.பி.
(பரம்பரை அனுபவ மூலிகை வைத்தியர்)
இரும்புலியூர், தாம்பரம், சென்னை & 59
பற்பாடகம் மூலிகையின் மருத்துவம்

பற்பாடகம் என்ற இந்த மூலிகை தெரியாதவர் பலர். தெரிந்தவர் சிலர் இருக்கக் கூடும். நகரத்தில் உள்ள பழைய நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த மூலிகை குப்பைமேனி, அம்மான் பச்சரிசி, கீழாநெல்லி போல் எங்கும் கிடைக்கும். சுமார் அரை அடி உயரம் முதல் 1 அடி உயரம் வரை வளரக்கூடியது. இந்த பூண்டு மெல்லிய கம்பி போன்று வளர்ந்து ஊசி போன்ற இலைகளையும் சிறிய குண்டூசி போன்ற கதிர்களையும் உடையதாக இருக்கும். சுமார் கடுகளவுள்ள இதன் கதிர்கள் வாயில் போட குழகுழப்பாக இருக்கும். இது பனி, மழை காலங்களில் மேடான சமவெளிகள், பாறை சரிவு, இருப்பு பாதையோரங்களில் அதிகமாக வளர்வதைக் காணலாம்.

குணம்: உடல் வெப்பத்தை தணிக்கும் எல்லாவிதமான ஜூரங்களுக்கும் குணப்படுத்துவதில் இந்த மூலிகை முதன்மையானது. முக்குற்றத்தால் வரும் சுரம், விஷசுரம் இவைகளை போக்க வல்லது. வியர்வை பெருக்கியாகவும், உடல் நாற்றத்தையும், அழுக்கையும் போக்கும். மலத்தை இளக்கும். இதை தனித்தே பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. இந்த மூலிகை மற்ற மூலிகையோடு சேரும்போது அதன் தன்மை குணங்களுக்கு ஏற்றவாறு பணிபுரிகின்றது. நோய்களை வேருடன் களையும் தன்மை உடையது.

சுரங்களுக்கு கஷாய முறை: பற்பாடகம், சுக்கு, விலாமிச்சை வேர், சிறுதேக்கு, வெற்றிவேர், சித்தரத்தை, பவளமல்லி இலை, ஆடாதோடை, பப்பாளி இலை, நிலவேம்பு மூலிகைகள் வகைக்கு 1 கைப்பிடி அளவு. கடைச்சக்கு 5.2 கிராம் அளவாக போட்டு, இடித்து 1.3 லிட்டர் நீர் விட்டு காய்ச்சி 8ல் 1 ஆக வடித்து 1 நாளைக்கு 4 முறை 50 மில்லி வீதம் கொடுக்க 3 தினத்தில் வாத,பித்த,சிலேத்துமம் சுரங்கள், விஷசுரம் குணமாகும்.

  1. பற்பாடகம், சுக்கு, நெருஞ்சில் வேர், எருக்கன் வேர், முத்தகாசு, திப்பிலி மூலம் வகைக்கு 5.2 கிராம் மேலே குறிப்பிட்ட முறையில் கஷாயமிட்டு குடிக்க, சுதக ஜன்னி, தலைமுழுக்கு நேரத்தில் சம்போகத்தால் வந்த சன்னி, தோடம், நாக்கு வெடித்தல், விக்கல், பிதற்றல் போன்ற சன்னி ஜுரம்களுக்கு ஏற்றது.
  2. ஆடாதோடை, தூதுவளை, சுக்கு, திப்பிலி, சித்தரத்தை, மிளகு, பற்பாடகம் இவை 5 கிராம் அளவாக எடுத்து 1.3 லிட்டர் நீரில் காய்ச்சி 8ல் 1 ஆக காய்ச்சி தினம் 4 வேளை 50 மில்லி வீதம் சாப்பிட கபம் சளி இருமல் இளைப்பு காசம் இவைகள் நிவாரணம் கிடைக்கும். வாத சுரம் போகும்.
  3. பற்பாடகம், அதிமதுரம், வெட்டிவேர், மல்லி, நன்னரி, தூதுவளை, ஆடாதோடை, சுக்கு, லவங்கம் ஆகியவை வகைக்கு 5 கிராம் 1 படி நீரில் காய்ச்சி, வடிகட்டி, பெரியவர் முதல் சிறியவர் வரை குளிர் சுரம், பித்த சுரம் உள்ளவர்கள் குடிக்கலாம். பெரியவர் 50 மில்லி, சிறியவர் 20 மில்லி குடிக்கலாம்.
  4. பேதியாகும் விஷ சுரங்களுக்கு: பற்பாடகம், சிந்தில், கோஷ்டம், சிறுதேக்கு, திப்பிலி, நிலவேம்பு, சுக்கு, ஆடாதோடை வகைக்கு 5 கிராம் எடுத்து இடித்து 1 படி நீர் விட்டு 8ல் 1 ஆக காய்ச்சி வடித்து, தினம் 4 வேளை 50 மில்லி அளவாக பெரியவர்களுக்கு கொடுக்க 3 நாளில் சுரம் தணியும். பத்தியம்: ஆவியில் வெந்த உணவு, கஞ்சி: மிளகு சீரகம் சேர்த்து காய்ச்சி கஞ்சியை பயன்படுத்தவும். விரைவில் குணமாகும்.

குறிப்பு:இந்த கசாயங்களை மண் பாத்திரத்தில் காய்ச்சுவது நன்று.