
டாக்டர்.கு.சிவராமன், சித்த மருத்துவர்.
திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது.
நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.
எமன் அருகில் வராமல் இருக்க, காலை கடும்பகல் சுக்கு,மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம். எனவே, இனி உங்கள் இரவு மெனுவில் கடுக்காய் இருக்கட்டும். திரிபலா சூரணத்தை சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

