
– டாக்டர்.ஜி.ராஜமோகன்
சர்வதேச யோகா தினமாக ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.இது நமது நாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் கிடைத்த பெருமையாகும்.
யோகா மனிதனின் உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி வெற்றிகரமான வாழ்வுக்கு வழிகாட்டியாக,காலம் காலமாக விளங்கி வருகிறது. மிகச் சிறந்த இந்த பயிற்சியை அங்கீகரித்து ஆண்டு தோறும் சர்வதேச அளவில் யோகா தின கொண்டாட்டங்களை
முன்னெடுக்க பிரதமர் தலைமையிலான ஒன்றிய அரசு பெரும் முயற்சியிகளை மேற்கொண்டது.
இந்தியாவின் இந்த மிகச்சிறந்த கொடையை ஐ.நா.வும் ஏற்றுக்கொண்டது. அதன்படி ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாட அழைப்பு விடுத்தது. 2015 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 9-வது கொண்டாட்டம்.
அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட நமது பிரதமர் மோடி, நியூயார்க் நகரில்,ஐ.நா. தலைமையகத்தில் நடந்த யோகா கொண்டாட்டத்தை தலைமையேற்று நடத்தினார். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்து அசத்தினார்கள். உலகின் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தார்கள்.
நமது உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும்.அதற்கு எளிமையான வழி யோகாசனம் தான். உடற்பயிற்சி செய்வதால் உடல் நலம் மட்டும் பாதுகாக்கப்படும்.ஆனால் முறையான யோகாவின் மூலம் உடல் நலத்தோடு மனநலமும் பேணி பாதுகாக்கப்படும். நம்முடைய உடல் நலக் கேட்டுக்கு மனநல பாதிப்புகளும் மறைமுக காரணியாக இருக்கின்றன.
யோகாசனம் செய்வது மிகவும் கடினம்;அப்படி இப்படி உடலை வளைப்பது எல்லோராலும் செய்ய முடியாது என்ற தவறான எண்ணம் பரவலாக உள்ளது.இது உண்மை அல்ல.
எல்லோரும் எளிதாக யோகாசனம் செய்ய முடியும்.பெண்களும் தாராளமாக செய்யலாம். இளம் வயதிலேயே யோகாசன பயிற்சியை கற்றுக் கொள்ள வேண்டும்.பள்ளி கல்லூரிகளில் அறிமுகம் செய்ய வேண்டும். யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றி விட்டால் நோயற்ற பெருவாழ்வை அடையலாம்.
யோகாசனப் பயிற்சிகளை தினசரி செய்து நல்வாழ்வு வாழ வேண்டும்.யோகாவை கொண்டாடி மகிழ்வோம்!

