
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள சிறிய நகரம் பூதலூர்.பூதலூரைச் சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய கிராமங்கள் இருக்கின்றன.விவசாயத்தைச் சார்ந்தே பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். புதுஆற்றங்கரைக்கு தெற்குப் பகுதிக்கு ஆற்றுப் பாசனம் இல்லை.பெரும்பாலும் வானம் பார்த்த பூமிதான்.பூதலூரைச் சுற்றியுள்ள மக்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களும்,சாதாரண தொழிலாளர்களும் அதிகமிருக்கிறார்கள்.

அந்த அடித்தட்டு மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சுமார் 50 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார் டாக்டர் எஸ்.கிருஷ்ணன்.குறைந்த கட்டணம் என்பதால் ஏழைகள் மட்டுமே அவரிடம் மருத்துவம் பார்க்கச் செல்கிறார்கள் என்பதில்லை. வசதியானவர்களும் அவரிடம் சிகிச்சை பெற நம்பிக்கையுடன் வருகிறார்கள். டாக்டர் கிருஷ்ணன் அந்த ஊரைச் சேர்ந்தவர் இல்லை.இருந்தும்,அவர் அந்த மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறார்.டாக்டருடைய சொந்த ஊர்,புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள வளையப்பட்டி. 1978 ஆம் ஆண்டு பூதலூரில் சிறிய அளவில் கிளினிக் தொடங்கினார்.ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்தான் கட்டணம்.தற்போது இருபது ரூபாய்.
இவரை கைராசிக்கார டாக்டர் என்று மக்கள் அழைக்கின்றார்கள்.24 மணி நேரமும் இவரை சந்திக்கலாம்.தீபாவளி, பொங்கல்,வெளியூர் பயணம் என்று எதற்கும் அவர் விடுமுறை எடுப்பதில்லை. நடு இரவில் கதவைத் தட்டினாலும் தயக்கமில்லாமல் வைத்தியம் பார்ப்பார். நோயாளியின் பாதிப்பை உணர்ந்து சிகிச்சை அளிப்பார்.பாதிப்பு அதிகமிருந்தால் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்.அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளியை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கோ,தனியார் மருத்துவமனைக்கோ அனுப்புவார். யாரிடம் சிகிச்சை பெறலாம் என்றும் வழிகாட்டுவார்.
பணத்திற்காக தேவையில்லாமல் டெஸ்ட் எடுக்கச் சொல்வதோ,விலை உயர்ந்த மாத்திரைகளை எழுதுவதோ இல்லை. பெரும்பாலும் விலை குறைவான மருந்துகளையே எழுதிக் கொடுப்பார்.
மழைக்காலங்களில் வைரஸ் தொற்றுகள் அதிகமிருக்கும்.அந்தச் சமயங்களில் நோயாளிகள் மிகவும் அதிகமாக வருவார்கள்.பெரும்பாலும் நோயாளிகளை அதிக நேரம் காக்க வைக்காமல் மருத்துவம் பார்த்து அனுப்பி வைப்பார்.கொரோனா காலத்திலும் அவர் எப்பொழுதும் போல் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார்.
25,30ஆண்டுகளுக்கு முன்பு வாகன வசதிகளோ,சாலை வசதிகளோ கிடையாது.அவசரம் என்றாலோ, வயதானவர்களைப் பார்க்க வேண்டி வந்தாலோ மண் சாலையில் 10,15 கிலோ மீட்டர் சைக்கிளில் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்ப்பார்.
டாக்டர் கிருஷ்ணனை கையெடுத்து கும்பிடாதவர்கள் யாரும் இல்லை. எவ்வளவோ விலை ஏற்றம் இருந்தாலும் 20 ரூபாய்க்கு சிகிச்சை அளிப்பது மிகவும் பாராட்டுக்குரியது.அந்த இருபது ரூபாய்கூட இல்லாதவர்களிடம், ஊசி போட்டு,மருந்து மாத்திரைகளை கொடுத்து, அடுத்த முறை வரும்போது பணம் தாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைப்பார்.
மருத்துவம் என்பது சேவை என்பதிலிருந்து மாறி,முற்றிலும் பணம் சம்பாதிக்கும் தொழிலாக இன்றைக்கு மாறிப்போய்விட்டது.ஆனால்,ஆரம்பி
-பாலசுப்ரமணியன்,களர்ப்பட்டி,
படங்கள்: வின்சென்ட், பூதலூர்.

