– டாக்டர் ஜி.ராஜமோகன்

மது பிள்ளைகளை எப்போதும் குழந்தையாகவே நினைக்கிறோம்.அவர்கள் படிக்கிறார்கள், உலகத்தை கவனிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள்…
என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
நம்மைவிட புத்திசாலியாகவும் இருப்பார்கள்.நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நம்பக்கூடாது.டீன் ஏஜ் பிள்ளைகளிடம் இஷ்டம் போல் பேசக்கூடாது.நமது அணுகுமுறை தவறாக இருந்தால்… கண்மூடித்தனமாக எதிர்ப்பார்கள்… எதையும் கேட்டுக்கொள்ளும் மன நிலை இல்லாமல் போகலாம்.

விவாதம்…

இது உங்களுக்கும் சரி,உங்கள் பிள்ளைகளுக்கும் சரி ஒரு போதும் உதவாது.கோபமாக இருக்கும்போது நாம் பேசுகிற வார்த்தைகளுக்குப் பெரும்பாலும் எந்த அர்த்தமும் இருக்காது. அமைதியாக இருப்பது ஒன்றே எந்தச் சூழலையும் புத்திசாலித்த னமாகக் கையாளக்கூடிய சிறந்த அணுகுமுறை.

தவறான நேரம்…

கோபமாகவோ, பசியுடனோ,மனநிலை சரியில்லாமலோ இருக்கும்போது எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்க வேண்டாம்.உங்கள் பிள்ளையிடம் நீங்கள் பேச வேண்டும் என்பதை முன் கூட்டியே தெரிவித்து, இருவருக்கும் உகந்த நேரத்தைக் குறித்துக் கொண்டு,பிறகு பேசலாம்.

ஏளனமான பேச்சு…

இது நிச்சயமாக உங்கள் பிள்ளையிடம் சீற்றத்தை உண்டாக்கி உங் களுக்கும் பிள்ளைக்கும் இடையிலான இடைவெளியை பெரிதாக்கும்.

லெக்சர்…

என்னதான் உங்கள் பிள்ளைகளைவிட நீங்கள் அனுபவசாலி யாக இருந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை லெக்சர் மாதிரி போதித்தால் நிச்சயம் கவனிக்க மாட்டார்கள்.அவர்கள் உங்கள் பேச்சைக் கவனிக்க வேண்டும் என நினைத்தால், அதற்கான சரியான நேரமும் அணுகுமுறையும், பேசும் தன்மையும் முக்கியம்.

நச்சரிப்பு…

சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது,தொணதொணவென சொல்லிக் கொண்டே இருப்பது போன்றவை,உங்கள் மன வெறுப்பைத்தான் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளும் நிச்சயம் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள்.

முக்கியமாக உங்கள் பிள்ளையின் நடத்தை,தனிப்பட்ட முறையில் உங்களைத் தாக்குவதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.அவர்களுக்கு அப்படி எந்த உள்நோக்கமும் நிச்சயம் இருக்காது.

கவனமாக, நிதானமாக பேசுங்கள்.எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காதீர்கள்.நமது பிள்ளைகள் நமது உயிர்.