
டாக்டர்.டி.காமராஜ்,எம்டி.
பாலியல் நிபுணர்.
சொர்க்கத்தை வானத்தில் தேட வேண்டாம்;பூமியில் இருக்கிறது;நாம் வாழும் வீட்டில் இருக்கிறது.திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள்.கணவன்- மனைவி இருவரும் இணக்கமாக வாழும் வீடு தான் சொர்க்கம்.
சொர்க்கத்தை உருவாக்க தம்பதியர் என்ன செய்ய வேண்டும்?

1.மனைவிக்கும் நன்றி சொல்லுங்கள்.
நீங்கள் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியிருந்தால், உங்கள் நண்பர் அவரது வாகனத்தில் உங்களை அழைத்துச் செல்வார்.அவருக்கு நீங்கள் நன்றி சொல்வீர்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லாதபோது உங்களோடு மருத்துவமனை வரை வந்தவருக்கும் நன்றி சொல்வீர்கள்.அடைமழை. வெளியே சென்று உணவருந்த முடியாத சூழ்நிலை ஏற்படும்போது வீடு தேடிவந்து ஒரே ஒரு முறை உணவளித்தவருக்கும் நன்றி தெரிவிப்பீர்கள். உங்களுடனேயே இருக்கும் உங்கள் வாழ்க்கைத்துணை காலம் முழுக்க உங்களுக்கு அப்படி எத்தனையோ உதவிகளை செய்துகொண்டே இருக்கிறார்.அவருக்கு ஒரு நாளாவது நன்றி தெரிவித்திருப்பீர்களா?
கணவன்-மனைவிக்குள் அப்படி எந்த நன்றியும் தேவை இல்லைங்க! என்று நீங்கள் முடிவு செய்தால், அது தவறு. ஏன் என்றால் தினமும் இரவு உங்களுக்கு பின்னால் அவர் தூங்குகிறார்.ஆனால் உங்களுக்கு முன்னாலே காலையில் எழுந்து சமைக்கிறார்.உங்களுக்கு தேவை யானதை எல்லாம் செய்துகொடுத்து உங்களை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்.இப்படிப்பட்ட மனைவிக்கு நன்றி சொல்வது தானே கணவருக்கு அழகு! அதுபோல் மனைவியும் கணவருக்கு நன்றி சொல்லலாம்! நன்றி என்பது வீட்டிற்குள் அதிகமாக புழங்கப்பட வேண்டிய வார்த்தை! சொல்லிலும், செயலிலும் நன்றி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி நிறையும்.வாழ்க்கை சொர்க்கமாக திகழும்.
2.கட்டளைக்குப் பதில் கனிவு.
கட்டளையிட்டே பலரும் பழகிவிட்டார்கள். வேலைக்காரர்கள் முதல் வீட்டில் உள்ளவர்கள் வரை அனைவரிடமும் கட்டளையிட்டால்தான் காரியம் நடக்கும் என்ற சிந்தனை பலரது அடி மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.இப்படி கட்டளையிடும் பழக்கத்தை கணவன்-மனைவி இருவருமே கைவிட வேண்டும்.கட்டளைக்கு பதில் கனிவாக பேசப் பழகிக்கொள்ளுங்கள்.
‘கல்யாணமாகி இத்தனை மாதமாச்சு. இன்னும் சாம்பார் கூட சரியாக வைக்கத் தெரியவில்லை. அதை ஒழுங்காக தயார் செய்ய கற்றுக்கொள்’ என்று கட்டளையிடும் பெரும்பாலான கணவன்மார்களுக்கு சாம்பாரில் என்னவெல்லாம் சேர்க்கப்படுகிறது என்பதுகூட தெரிந்திருக்காது.
வாழ்க்கைத் துணையிடம் எந்த விஷயத்தையும் கட்டளைபோட்டு செயல்படுத்த முன் வரக்கூடாது. அநாகரீகமாக விமர்சனம் செய்யவும் கூடாது.
‘நான் யார் தெரியுமா?’என்பது போன்ற மிரட்டல் கணவர், மனைவி உறவில் வெளிப்படக்கூடாது. ‘மிரட்டினாதான் நம்மைப் பற்றிய பயம் இருக்கும்!’ ‘மிரட்டினால்தான் திருந்துவார்கள்!’ என்பது போன்ற எண்ணங்கள் குடும்பங்களில் தவிர்க்கப்பட வேண்டியவை.
3.இனிய இடைவெளி.
நெல்லாக இருந்தாலும், புல்லாக இருந்தாலும் ஆரோக்கியமாக வளர இடைவெளி அவசியம்.அதனால் தான் நாற்றுகளை பிடுங்கி வயலில் போதுமான இடைவெளிவிட்டு நடு கிறோம். வயலில் தேவைப்படும் இடைவெளி வாழ்க்கையிலும் தேவை.
‘கணவர்-மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் இடைவெளி வாழ்க்கையை அழ காக்கும்’ என்கிறார், உலகப்புகழ் பெற்ற கவிஞர் கலில் ஜிப்ரான்!. இதோ அவரது கவிதை..
நீங்கள் இணைந்திருங்கள்.. ஆனால், உங்களுக்குள் சிறிது இடைவெளி இருக்கட்டும்.. சொர்க்கத்தின் தென்றல் அதன் வழியே உங்களிடம் செல்லட்டும்.. ஒருவர் கோப்பையை ஒருவர் இட்டு நிரப்புங்கள்.. ஆனால், மற்றவர் கோப்பையில் இருந்து எடுத்து பருகாதீர்கள்.. பாடி, ஆடி மகிழ்ச்சியாக இருங்கள்..
ஆனால், தனித்தனியாக… கலில் ஜிப்ரான் கவிதை போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
4.கட்டுப்படுத்த வேண்டாமே!
அதீத அன்பு செலுத்துவதாக கூறிக்கொண்டு கணவரை மனைவி யும்,மனைவியை கணவரும் கட்டுப்படுத்த முயற்சிக்கக்கூடாது. உண்மையில் நீங்கள் யார் மீதாவது அதிக அன்பு செலுத்தினால், அவர்களுக்கு அதிக சுதந்திரம்தான் கொடுக்க வேண்டுமே தவிர கட்டுப்படுத்தக்கூடாது.
முதலில் வாழ்க்கைத் துணையிடம் கட்டுப்படுத்த முயற்சிக்கிறவர்கள் பின்பு குழந்தைகள், அடுத்து தங்களிடம் வேலை பார்ப்பவர்கள் என்று அந்த அதிகார எல்லையை விரித்துக்கொண்டே செல்வார்கள்.
மனைவி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றும், கணவருக்கான இலக்கணங்கள் இவைதான் என்றும் நம் சமுதாயம் எழுதப்படாத சில விதிகளை உருவாக்கியிருக்கிறது. அதுதான் சரியானது என்று கருதிக்கொண்டு அதற்குள் வாழ வாழ்கைத் துணையை கட்டாயப்படுத்தாதீர்கள்.
உறவுக்குள் கட்டாய சூழ்நிலை உருவாகினால் கணவருக்கோ, மனைவிக்கோ தங்கள் மனதில் இருப்பதை துணையிடம் பகிர்ந்துகொள்ள சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. ‘சொன்னால் என்னவாகுமோ! துணைவர் அதை எப்படி எடுத்துக் கொள்வோரோ! நாளை அதை வைத்து குத்திக்காட்டினால் என்ன செய்வது?’ என்று பலவாறாக நினைத்து மனம்விட்டு பேசமுடியாமல் தவிப்பார்கள்.
திருமணமான புதிதில் இருந்தே இத்தகைய தயக்கங்களுக்கு இடம் கொடுக்காமல் கணவன்-மனைவி இருவருமே வெளிப்படையான வாழ்க்கை வாழ முன்வர வேண்டும்.
இப்படி இணக்கமாக வாழ்ந்தால் இல்லறத்தில் சொர்க்கத்தை காணலாம்;சுகத்தை காணலாம்; என்றென்றும் மகிழ்ச்சியாக வாழலாம்.

