லகிலுள்ள உளவியல் அறிஞர்கள் சொல்லும் உண்மை, ‘நீங்கள் எதைக் கற்றுக் கொள்கிறீர்களோ, உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறதோ அது மட்டுமே உங்கள் மூளைக்குள் சென்று பதியும். அப்படி உங்கள் மூளைக்குள் பதிந்த எண்ணங்கள்தான் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கனத்திலும் உங்களிடமிருந்து வெளிப்படும்.

ஆங்கிலத்தை வருடக்கணக்கில் கற்றுக்கொள்ளும் ஒருவன், ஜெர்மன் மொழியிலோ சீன மொழியிலோ ஒருபோதும் பேச முடியாது. சிந்திக்க முடியாது. அவனறியாத மற்ற எந்த மொழியில் அவனிடம் எதைப் பேசினாலும் அவனால் புரிந்து கொள்ள முடியாது, ரசிக்க முடியாது, அதன்படி செயல்படவும் முடியாது.

இன்றைய காலகட்டத்தில் வெற்றிபெறும் சினிமாவை பார்க்கும் பொழுது இதையா இவர்கள் ரசிக்கிறார்கள்..? கொண்டாடுகிறார்கள்..? என்று பயம் உண்டாகிறது. படத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதைக் கொண்டாடுகிறார்கள் என்றால், அதுவரையில் அவர்கள் சிந்தித்து செயல்பட்டு வந்ததை, அவர்கள் விரும்பியதை அந்தப் படம் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறார்கள். அதனால் அந்தப் படத்தை அவன் ரசித்துக் கொண்டாடுகிறார்கள்.

அப்படியென்றால் ஒரு படம் வெற்றியடைவதை வைத்து, படம் பார்ப்பவர்களின் மனநிலையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களால் வரவேற்கப்பட்ட படங்களை வைத்து (உம்: புஷ்பா 2, லக்கி பாஸ்கர்) ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள்? அவர்கள் எண்ணம் எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு படம் ஓடுவதும் ஓடாததும் இளைஞர்களிடமே இருக்கிறது. அவர்கள்தான் பெரும்பாலும் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். வெற்றியடைகின்ற படங்கள் என எடுத்துக் கொண்டால், அதில் மிகஅதிகமான வன்முறையும், கொடூரமான கொலைக் காட்சிகளும், மது, பாலியல் வன்முறை, போதை போன்ற, மக்களுக்கு தீமை விளைவிக்கக் கூடிய விஷயங்களையே முழு படத்திலும் காட்சிகளாக்குகிறார்கள். இளைஞர்கள் அதை ரசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள்.

இப்படிப்பட்ட படங்கள் எப்போதோ ஒன்றிரண்டு படங்கள் வரும்பொழுது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. அப்படிப்பட்ட மோசமான படங்கள் மட்டுமே வருகின்றன, அவைகள் மட்டுமே ஜெயிக்கின்றன என்றால், திருடனும் கொள்ளைக்காரனும் ஒரு சாதாரணமான மனிதனாக மாறிப்போகிறான். அவன் செய்யும் அத்தனைத் தீமைகளும் நீர்த்துப் போகின்றன.

இன்றைய இளைஞர்களுக்கு எது பிடிக்கிறதோ, எதை ரசிக்கிறார்களோ, எதைக் கொண்டாடுகிறார்களோ அதுதான் சரியென, பொதுமக்களும் நினைத்துவிடும் ஆபத்து இருப்பதை உணரவேண்டும். ஒரு படம் பிடித்திருந்தால் அதைப் பார்ப்பதோடு விட்டுவிட்டால், அந்த ஆபத்தான சினிமாவால் சமூகத்திற்குப் பாதிப்பில்லை. ஆனால், அதைக் கொண்டாடும் பொழுது அது மற்றவர்களையும் கவரக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

ஒரு செம்மரக் கடத்தல்காரனை மாபெரும் ஹீரோவாக்கி, இன்று அதன் தொடர்ச்சியாக வந்த அடுத்த பாகத்தைக் கொண்டாடுவதும், அவன் செய்யும் குற்றங்களைப் பற்றிச் சிறிய சலசலப்பு கூட இல்லாததும் பேராபத்து. தீமையைக் கொண்டாடும் மனம் ஆரோக்கியமானதில்லை.

அத்தகைய ரசனை, அந்த மனநிலை, நாளைய சமூகத்தை நாசமாக்கிவிடும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சூன்யமாக்கிவிடும் என்பதாவது உங்களுக்குப் புரிகிறதா..?