
தலைக்கவசம்; உயிர்க்கவசம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களும், ஹெல்மெட் கட்டாயமாக அணிந்து செல்வதை கண்காணிக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்ற நீதிமன்ற நெருக்குதல்களும், வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைக்கு டூ வீலரில் செல்லும்போது, ‘‘ஹெல்மெட் போடலியா?’’ என்ற போக்குவரத்து போலீசின் கேள்விகளும் அதிகமாக வலம் வரும் காலகட்டம் இது.
இந்திய அளவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதுதான். தமிழகத்தில் 2018-ல் நடந்த சாலை விபத்துகளில் 11, 266 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 சதவிகித உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதால் நிகழ்ந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டம் போட்டு, உத்தரவு போட்டு, அபராதம் போட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஹெல்மெட்டை கட்டாயம் தலையில் கட்டாயம் திணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்றால் இல்லை. ஒவ்வொருவரையும் சார்ந்து மற்றவர்கள் இருக்கிறார்கள்; ஒவ்வொருவருக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்கிறது. உடலில் எந்த பாகத்தை இழந்தாலும், நவீன மருத்துவ அறிவியலால் அதை ஒட்ட வைக்க முடியும். உயிரை இழந்தால் ஒட்ட வைக்க முடியுமா?
தலையில் ஏற்படும் காயம் உயிரிழப்புவரை இட்டுச் செல்கிறது. அதற்காக ஹெல்மெட் அணியாமல் டூ வீலரில் செல்பவர்கள் எல்லாம், அடிபட்டு செத்துப் போய்விடுவார்கள் என்று அர்த்தமில்லை. அணிந்து சென்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்பதுதான் நிதர்சனம்.
ஹெல்மெட் போட்டால் தலைவலிக்கும், வியர்க்கும், முடிகொட்டும், கழுத்து வலிக்கும், காது கேட்காது, பக்கவாட்டில் வாகனம் வந்தால் தெரியாது என்று பல்வேறு சப்பைக்கட்டுக்கள் நம் கைவசம் இருக்கின்றன. அப்படியே போலீஸ்காரர் மடக்கினாலும், அவரை ‘கவனித்துவிட்டு’ தப்பி விடலாம் என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது. ஹெல்மெட் போடாமல் சென்றால், போலீஸ்காரரிடம் இருந்து வேண்டுமானாலும் தப்பலாம். விபத்து நேரிட்டால் படுகாயத்திடம் இருந்து தப்ப முடியாது.
ஹெல்மெட் அணியாமல் தவிர்ப்பதற்கு நாம் சொல்லும் காரணங்களில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து செல்வதுதான் சாலச்சிறந்தது.
*ஹெல்மெட் அணிந்தால் தலை வியர்க்கிறது என்றால், சுத்தமான காட்டன் கைத்துண்டை தலையை சுற்றி கட்டி அதன் மேல் அணியலாம்; அது, வியர்வையை உறிஞ்சி விடும். குளித்து தலைமுடியை சுத்தமாக அலசி, துாய்மையாக வைத்திருந்தால் தலைமுடி உதிராது. மாறாக வெயிலால் தலைமுடி நேரடியாக பாதிக்கப்படுவது குறையும். நீண்டதுார பயணத்தில் ஹெல்மெட் அணிந்து சென்றால், அவ்வப்போது கழற்றி விட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும். கழுத்துப் பகுதியில் வியர்வை பட்டு ஹெல்மெட் பின்பகுதி அழுக்காகும். அதை முறையாக சுத்தம் செய்தால், பூஞ்சை தொற்று வராது. ஹெல்மெட் உட்பகுதியை வெயிலில் காய வைத்தால் வியர்வை வாசனை வராது; கிருமி தாக்குதலும் இருக்காது.
*டூவீலரில் செல்லும்போது, சாலையின் துாசு, வாகனப் புகையை சுவாசித்தபடி செல்கிறோம். இவற்றால் தான் அலர்ஜி ஏற்பட்டு, ஆஸ்துமா பிரச்னை அதிகமாகிறது. முழுவதும் முகத்தை மூடிய ஹெல்மெட்டால், தூசு, புகையை சுவாசிப்பது குறைகிறது. இதனால், மூச்சிரைப்பு உள்ளவர்களுக்கு, நோயின் வீரியம் குறையும்; நன்றாக மூச்சுவிட முடியும்; நுரையீரலுக்கு, எந்த பிரச்னையும் இல்லை. சிறு சிறு தொந்தரவுகளை மனதில் நினைத்து, மிகப்பெரிய நன்மைகளை ஒதுக்கி விடக்கூடாது.
*கழுத்துவலி இருப்பவர்கள், டூவீலரே ஓட்டக் கூடாது. ஹெல்மெட் அணிவதால் மட்டுமே, கழுத்துவலி வராது. கழுத்துவலி இருப்பவர்களும், ஹெல்மெட் அணியலாம். தலைக்கு சரியாக பொருந்தாத ஹெல்மெட் அணியும் போதுதான், தலை பாரமாக இருப்பது போன்று தோன்றும். தலையில் மாட்டியவுடன் நாடியில் அதை முறையாக கட்ட வேண்டும். அப்போது தான் தொந்தரவின்றி பயணம் செய்ய முடியும்.
*பழைய ஹெல்மெட்டில் தான், ‘காது கேட்பதில்லை’ என்ற பிரச்னை இருந்தது. நவீன வடிவமைப்பில் காது கேட்பதற்கு, காற்றோட்டம் தருவதற்கான வசதிகள் உள்ளன. தலையில் அதிகமாக வியர்த்து, சைனஸ் தொல்லை, தலைவலி வரும் என்பது தவறு. நாள் முழுக்க அணிந்திருப்பதில்லை.நகர்ப் பகுதிகளில் அதிகபட்சம் ஒருமணி நேரம் அணிந்து டூவீலர் ஓட்டுவர். அந்த நேரத்தில் தலையை காப்பது தான் முக்கியம். காது கேட்பதில் பிரச்னை உள்ளவர்கள், அதற்கு ஏற்ற நவீன ஹெல்மெட் அணிய வேண்டும். பெயருக்கு எதையோ வாங்கி தலையில் அணிந்து அவஸ்தை படுவதை விட, உயிருக்கு உத்தரவாதம் தரும் வகையில், சற்றே விலை கூடுதலான ஹெல்மெட் வாங்கி அணியலாம்.
மேற்கண்ட கருத்துக்கள் எல்லாம் பிரபல மருத்துவர்கள் கூறியவை. ஹெல்மெட் வியாபார நிறுவனங்களுக்கான விளம்பர கருத்துக்கள் அல்ல அவை. நாம் உயிரைக் காப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் அவை.
எனவே, மயிரா? உயிரா? எது முக்கியம் என்று முடிவெடுக்க வேண்டியது நாம்தான்.
பெண்களுக்கு..

ஹெல்மெட் அணிவதால் கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று பயப்பட வேண்டாம். ஹெல்மெட் அணிவதற்கு முன்பாக தலையில் ஒரு காட்டன் ஸ்கார்ப் அல்லது தொப்பி அணியுங்கள். இந்த ஸ்கார்ப் அல்லது தொப்பியை தினமும் சுத்தமாக துவைத்துப் பயன்படுத்துங்கள்.
அதிக நேரம் ஹெல்மெட் உபயோகிக்கும்போது இடையிடையே சிறிது நேரம் அதைக் கழற்றி விட்டு, தலையில் காற்று படும்படி விடலாம்.
தினசரி ஹெல்மெட் பயன்படுத்துபவர்கள் தினசரி அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்க வேண்டியது அவசியம்.
கூந்தலை விரித்தபடி டூவீலர் ஓட்டுவதை தவிர்க்கவும். கூந்தல் பகுதி முழுவதையும் மூடும்படியான துணி அணிந்து, அதன் மேல் ஹெல்மெட் அணிவதன் மூலம் தூசும் மாசும் கூந்தலில் சேராமல் காக்க முடியும்.
– கு.பவித்ரன்

