முளைகட்டிய தானியங்களை உயிருள்ள உணவு எனலாம்.நமது சமையல் முறையால் சத்தான உணவுகள் கிடைப்பது இல்லை.தானியங்களை முறை கட்டி சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும்.

 ஏனெனில் முளைகட்டிய நிலையில் வைட்டமின் B1, ஃபோலிக் அமிலம், பயோடின் மற்றும் சில இன்றியமையாத அமினோ அமிலங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதேபோல், சில நொதிகளும் உருவாகின்றன. அவை புரதம், மாவுச்சத்தை ஓரளவுக்கு சிதைத்துவிடுவதால் முளைகட்டிய தானியங்கள் பாதி சமைக்கப்பட்டது போன்ற பக்குவத்தில் இருக்கும். எனவே, அதில் உள்ள சத்துகள் அனைத்தும் எளிதில் உட்கிரகிக்கப்பட்டுவிடும். முளைகட்டாத தானியங்கள் உணவில் சேரும்போது ஒருசில மாவுச்சத்துக்கள் குடலில் இயல்பான முறையில் செரிமானம் செய்யப்படுவதில்லை. அவற்றைக் குடலில் வாழும் நுண்ணுயிரிகள் சிதைக்கும்போது அதிக அளவில் வாயு குடலில் சேரும். இந்தத் தொல்லை முளைகட்டிய தானியங்களை உண்ணும்போது ஏற்படுவதில்லை.

பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கோதுமை, கம்பு, கேழ்வரகு, எள், உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைப் பகல் முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன்பின் அதில் உள்ள நீர்ச்சத்து முழுவதும் வடித்துவிடும்படி ஒரு துணியில் கட்டித் தொங்க வைத்துவிட்டால் காலையில் முளைகட்டிக் காணப்படும். அதை விருப்பத்துக்கு ஏற்ப அப்படியேவோ, சிறிது ஆவியில் காட்டியோ அல்லது தாளித்தோ சாப்பிடலாம்.

தானியங்களைத் தீட்டுவது, இயந்திரங்களின் மூலம் சுத்திகரிப்பது போன்றவற்றால் பெரும்பான்மையான சத்துகள் அழிக்கப்படுகின்றன. தவிர, 42 டிகிரி செல்சியஸுக்கு மேற்பட்ட வெப்பத்தில் சமையல் செய்யும்போது எஞ்சியுள்ள சத்துகள், நொதிகள், வைட்டமின் B வகைகள் சிதைவடைய நேரும். எனவே, முழுமையாக சமைக்கப்பட்ட எந்த உணவுக்கும் உயிர் இருக்காது.