
டாக்டர்.கு.கணேசன், குடும்ப நல மருத்துவர்.
ஆலன் ஜோயஷ் சாமுவேல்… வயது 24… சென்னை கிறித்துவக் கல்லூரி, முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர். சில வருடங்களுக்கு முன் வகுப்புத் தோழியுடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் விளையாடிக்கொண்டிருந்த குட்டி நாயொன்று இருவரையும் கடித்துவிட்டது. லேசான காயம்தான். ஆனாலும், இருவரும் கல்லூரி மருத்துவமனையில் காயத்துக்கு முதலுதவி பெற்றுக்கொண்டனர்.
அதன் பிறகு சாமுவேலின் தோழி நாய்க்கடிக்கு முறையான தடுப்பூசிபோட்டுக்கொண்டார். சாமுவேலோ ‘சிறிய காயம்தானே. அதுவும் குட்டி நாய் கடித்தது. என்ன செய்யப்போகிறது…’ என்று அலட்சியமாக இருந்துவிட்டார். ரேபீஸ் தடுப்பூசியை இவர் போட்டுக்கொள்ளவில்லை. அதன் விளைவு, சாமுவேலுக்கு ‘ரேபீஸ்’ நோய் வந்து, சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
நாய்க்கடியைப் பொறுத்தவரை, அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒன்றே போதும். ‘ரேபீஸ்’ நோய் குறித்து மக்கள் மத்தியில் இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. உலகில் ‘குணப்படுத்தவே முடியாது.. நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்’ என்று கவலைப்படுவதற்கும் ஒரு நோய் இருக்கிறது என்றால், அது வெறிநாய்க்கடியால் வரும் ‘ரேபீஸ்’தான்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அதேவேளையில், இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்துவிடலாம் என்பதும் 100 சதவிகிதம் உண்மை.
எது ரேபீஸ்?
ரேபீஸ் (Rabies) என்பது ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்தக் கிருமிகள் நாய், ஆடு,மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டிகள் பலவற்றில் வசிக்கும். இவற்றில் ரேபீஸ் கிருமி உள்ள எந்தவொரு பாலூட்டி மனிதரைக் கடித்தாலும் ரேபீஸ் வரும்.
இந்தியாவில், முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம்.
நோய் வரும் வழி?
ரேபீஸ் நோயுள்ள நாயின் உமிழ்நீரில் ரேபீஸ் வைரஸ்கள் வாழும். இந்நாய் மனிதரைக் கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக
இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துகொள்ளும். அங்குள்ள தசை இழைகளில் பன்மடங்கு பெருகும்.பிறகு, நரம்புகள் வழியாகவும். முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து,மூளைத் திசுக்களை அழித்து, ரேபீஸ் நோயை உண்டாக்கும்.
இதுதவிர, சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ் நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம்.உமிழ்நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம். வெறிநாய் காலில் கடித்தால், பாதிப்புகள் வெளியில் தெரிய அதிக நாட்கள் ஆகலாம்.முகத்திலோ, கையிலோ கடித்தால் உடனடியாக அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.
அறிகுறிகள்?
பொதுவாக, வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு மேல் இந்த நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு அதிகபட்சமாக 90 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது. இதைத் தொடர்ந்து, காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்கமுடியாது. ரேபீஸ் நோய் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள்.
காரணம், தண்ணீரைக் கண்டதும் தொண்டையில் உள்ள விழுங்கு தசைகள் இறுக்கமடைந்து, சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படுவதால், ‘எங்கே உயிர் போய்விடுமோ என்று பயந்து, இவர்கள் தண்ணீரைக் குடிக்கமாட்டார்கள். இதற்கு ‘ஹைட்ரோபோபியா’ என்று பெயர். இவர்கள் உடலில் அதிக வெளிச்சம் பட்டால் அல்லது முகத்தில் காற்று பட்டால் உடல் நடுங்கும். எந்நேரமும் அமைதியின்றிக் காணப்படுவார்கள்.
எதையாவது பார்த்து ஓடப் பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்து வதும் கடிக்க வருவதுமாக இருப்பார்கள். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பார்கள்.
முதலுதவி?
காயத்தைக் குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்புத் தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும். வேகமாக விழுகின்ற குழாய் தண்ணீரில் கழுவுவது மிகவும் நல்லது. காயத்தின் மீது ஏதாவது ஒரு ஆன்டிசெப்டிக் மருந்தைத் தடவலாம் (எடு: பொவிடன் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான்). மாறாக, காயத்தின் மீது சுண்ணாம்பு தடவுவது, எருக்கம்பால் விடுவது, காபித்தூள் அல்லது சாணம் வைப்பது, மண்ணைத் தூவுவது, சுடுகாட்டில் மந்திரிப்பது போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
முடிந்த வரை காயத்துக்குக் கட்டுப் போடுவதையும் தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடும் அளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருக்குமானால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் ரேபீஸ் தடுப்புப் புரதம் (Rabies immunoglobulin) ஊசியைப்
போட்ட பிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ரேபீஸ் தடுப்பூசியைப் போடுவது மிகமிக முக்கியம்.
உயிர் காக்கும் தடுப்பூசி!
நடைமுறையில், வெறிநாய் கடித்தவருக்கு தொப்புளைச் சுற்றி 14ஊசிகள் போடுவார்கள் என்று பயந்தே பலரும் சிகிச்சைக்கு வருவதில்லை. அது அந்தக் காலம்.
இப்போது நவீன தடுப்பூசிகள் வந்து விட்டன. ஐந்தே ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவிகிதம் வரவிடாமல் தடுத்துவிடலாம். இந்த ஊசிகள் தொப்புனில் போடப்படுவதில்லை. புஜத்திலேயே போட்டுக்கொள்ளலாம். நாய் கடித்த அன்றே இந்த சிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். நாய் கடித்த நாள், 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என 5 தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருந்தால், 6வது ஊசியை 90வது நாளில் போட்டுக்கொள்ளலாம். இதற்கு அதிக செலவாகும் என்று நினைக்க வேண்டாம். இத்தடுப்பூசி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.
வீட்டு நாய் கடித்துவிட்டால்?
வீட்டுநாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கூட, அந்த நாயால் கடிபட்டவர் ரேபீஸ் தடுப்பூசியைப் போடத் தொடங்கிவிட வேண்டும். அதே நேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எவ்வித மாறுதலும் தெரியவில்லை என்றால், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் (0.3,7) நிறுத்திக்கொள்ளலாம், நாயிடம் வெறிநாய்க்குரிய மாறுதல்கள் தெரிந்தால், மீதமுள்ள தடுப்பூசிகளையும் (14,28) போட்டுக்கொள்ள வேண்டும்.
வெறிநாய்க் கடிக்கு சிகிச்சை இல்லை,தடுப்பூசி மட்டுமே உயிர் காக்கும்.

