
டாக்டர்.வி.எஸ்.நடராஜன், மூத்த முதியோர் நல மருத்துவர்.
கொரோனா தாக்குதலுக்குப் பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது.ஆரோக்கியமாக,எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுவது மிகப் பெரிய துயரம்.மாரடைப்பை நம்மால் தடுக்க முடியும்.
பொதுவாக கொலஸ்ட்ரால் ஆபத்தானது என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.கொழுப்பில் இரண்டு வகை உள்ளன. ரத்தக் குழாயில் அடைப்பை உருவாக்கி ஆபத்தை ஏற்படுத்துவது கெட்ட கொழுப்பு.
நல்லது செய்யும் கொலஸ்ட்ராலை எச்டிஎல் (HDL) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.இது உடலில் அதிகமாக உள்ள கொழுப்பை உறிஞ்சுகிறது. இவ்வாறு ரத்தக் குழாய்களின் கொழுப்பை சுத்தப்படுத்தி, மாரடைப்பு ஏற்படாமல் தடுத்து, இதயத்தின் நண்பனாக எச்டிஎல் (HDL) திகழ்கிறது.
எச்டிஎல் 40 மில்லிகிராமிற்கு கீழ் குறையும்போது, இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து, அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. எச்டிஎல் அளவு அதிகரிக்க அதிகரிக்க, இதயத்திற்கு ஏற்படும் நன்மைகளும் அதிகரிக்கிறது.
நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்க சில வழிமுறைகள் உள்ளன.
* தினமும் 30 நிமிடங்கள் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
*ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகள் செய்யும்போது எச்டிஎல் அளவு கூடுகிறது. கடினமான உடற்பயிற்சியை விட, நீண்ட நேரம் மற்றும் தினமும் நாள்
தவறாது உடற்பயிற்சி செய்வதே முக்கியம்.
* உடல் எடையை குறைத்தல்.
* புகை பிடிக்காமல் இருத்தல்.
* கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்தல்.
* சிவப்பு ஒயின் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் சக்தி உள்ளது. இதை தினமும் சிறிது அருந்தலாம்.
* பாதாம் போன்றவை நல்ல கொலஸ்ட்ராலை ரத்தத்தில் உயர்த்தும் திறன் கொண்டவை.
*ஆலிவ் எண்ணெய், ஓட்ஸ், பழவகைகள் மற்றும் பச்சைப்பட்டாணி போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
* ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்த மீன்களை எடுத்துக் கொள்ளலாம்.
*பெரும்பாலும் மாத்திரைகளினால் எச்டிஎல் அளவை அதிகரிக்க முடியாது.
எச்சரிக்கையாக நடந்து கொண்டால் மாரடைப்பை தடுக்க முடியும்.தேவைப்பட்டால் தயங்காமல், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

