– டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS, MD (Psychiatry)

னம் ஒரு எளிமையான அமைப்பு‌.அது நமது உடலின் ஒரு அங்கம் என்று புரிந்து கொண்டால் மனதினைப் பற்றி நாம் எந்த குழப்பமும் கொண்டிருக்க தேவையில்லை.மனதிற்கு உருவம் இல்லை என்பது மட்டும்தான் கொஞ்சம் சிக்கலானது. உருவம் இருக்கும் அத்தனையையும் நாம் முழுக்க புரிந்து கொண்டு விட்டோமா என்ன?

உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நாம் அதை என்னவென்று சொல்கிறோம்?நோய் என்று சொல்கிறோம்.

சாதாரண தொற்றுநோய் முதல் சக்கரை நோய்,ரத்த அழுத்த நோய்,புற்று நோய் என இன்னும் பல நோய்கள்.

மனதில் ஏற்படும் பாதிப்பு, மனநோய் அவ்வளவுதான். மனநோய் என்ற பேரைக் கேட்டாலே நாம் ஓடி ஒளிந்து கொள்கிறோம். இது ஏன்?

இருபது வயதுப் பெண், தன் தாயிடம் சொல்கிறாள் “அம்மா, நிச்சயமாக என் மனதில் ஏதோ பாதிப்பு இருக்கிறது.என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.ஏதோ ஒரு பயம் என் மனம் முழுதும் வியாபித்திருக்கிறது. அதன் காரணம் தெரியவில்லை. எப்போதும் நான் ஏதோ ஒரு விஷயத்தை என்னையும் அறியாமல் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.என்னால் முன்பு போல இயல்பாகப் பேசவோ,பழகவோ அல்லது சிரிக்கவோ கூட முடியவில்லை.சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூடத் தோன்றுகிறது.என்னை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிப் போ,என்னால் முடியவில்லை” என்று கேட்கிறாள்.

அதற்கு அந்த அம்மாவின் பதில்: ” மகளே, நீ என்ன சொல்ல வருகிறாய் உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்கிறாயா? எனக்கு ஒன்றும் அப்படித் தெரியவில்லை. என்னைப் பொறுத்த வரை நீ நன்றாகத்தான் இருக்கிறாய்.வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதே. தைரியமாக இரு. வேண்டுமென்றால் யோகா வகுப்பு போ” என்கிறார். இது ஏன்?

ஒரு பெண் தனது இயலாமையை விவரிக்கிறாள். அதனால் அவள் படும் துயரத்தைச் சொல்கிறாள்.ஆனால் அவள் தாய் அவளது கோரிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறார்.

ஒரு வேளை அந்தப் பெண் “அம்மா, எனக்கு இந்த ஒரு கை வலித்துக் கொண்டே இருக்கிறது” என்று சொல்லியிருந்தால் அந்த தாய் என்ன செய்திருப்பார்? அப்படியே விட்டிருப்பாரா?

இல்லை உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று எக்ஸ்ரே, இ.சி.ஜி என அத்தனை டெஸ்டையும் எடுத்துப் பார்த்திருப்பார்?

உடலில் வரும் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு கூட அத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் நாம், ஏன் மனதில் மிகப் பெரிய பிரச்சினை வந்தால் கூட அதை சுலபமாக நிராகரித்து விட்டுச் செல்கிறோம்?

ஏனென்றால் மனநோய் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் தவறான புரிதல்கள்தான் காரணம்.

மனநோய் என்பது ஒரு நோய் என்பதைத் தாண்டி தனிப்பட்ட ஒருவரின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

அந்தப் பெண் மனரீதியாக தான் நிறைய கஷ்டப்படுவதாகச் சொன்ன பின்னரும் கூட அந்தத் தாய் என்ன சொல்கிறார்? மனசைப் போட்டு குழப்பிக் கொள்ளாதே.தைரியமாக இரு என்று சொல்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்?

“நீ தைரியமாக இல்லை. பலவீனமாக இருக்கிறாய். அதனால் தான் மனதில் பாதிப்பு வருகிறது” என்று அந்த தாய் நினைக்கிறார்.அவர் மட்டுமல்ல, மனநோய் பற்றி இங்கு பெரும்பாலானவர்களின் எண்ணமும் அதுதான்.

தான் ஒரு பலவீனமானவர் என்று யார் ஏற்றுக் கொள்வார்?
அதனால்தான் மனதில் ஏற்படும் பாதிப்புகளை வெளியில் சொல்வதில்
எல்லோருக்கும் அத்தனை தயக்கம்.

உண்மையில் மனநோய் என்பது ஒருவருடைய பலவீனமா? பலவீனமாக இருப்பதால்தான் மனநோய் வருகிறதா?

நிச்சயமாக இல்லை. ஒருவேளை மனநோயை அலட்சியப்படுத்தினாலோ அல்லது அதை உரிய நேரத்தில் சரி செய்யாமல் விட்டாலோ ஒருவர் தனது அத்தனை பலங்களையும் இழந்து பலவீனமானவராக மாறுவதற்கு வாய்ப்புண்டு.

மனநோய்களைப் பற்றிய நமது அடுத்த மிக முக்கியமான தவறான நம்பிக்கை எல்லா மனநோய்களும் ஒன்றுதான் என நினைப்பதுதான்.

ஒரு இருபது வயதுப் பையன், தனது பெற்றோருடன் என்னைப் பார்க்க வந்தான். அவனுக்குத் தேர்வுக்குச் செல்ல வேண்டும் என்றாலே பயம்.அதுவும் இல்லாமல் மேடையில் ஏறிப் பேச வேண்டும் என்றாலும் பயம்.ஒரு மாதிரி நடுக்கம் வந்து மூர்ச்சையாகும் அளவுக்குப் பயம்.

நான் அவனிடம் பேசிவிட்டு அவனது பெற்றோரைக் கூப்பிட்டு “உங்கள் மகனுக்கு ஒரு சாதாரண மனநோய் பிரச்சினைதான்” என்றேன்.

அவ்வளவுதான் அவர்கள் அங்கேயே அழ ஆரம்பித்தார்கள். “என்ன டாக்டர், எங்க பையனுக்கு மனநோயா? அப்ப இனிமே எல்லாம் அவ்வளவுதானா? பைத்தியம் ஆகி விடுவானா?” என ஏகப்பட்ட புலம்பல்கள்.

நான் நிதானமாக அவர்களுக்கு விளக்க ஆரம்பித்தேன். “ஒரு வேளை உங்களுக்குக் காய்ச்சல் வருகிறது. நீங்கள் ஒரு மருத்துவரிடம்
செல்கிறீர்கள். அவர் உங்களைப் பரிசோதித்து விட்டு, உங்களுக்கு உடலில் ஒரு சாதரண தொற்று நோய் இருக்கிறது என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள்? உடனே அதைப் புற்றுநோய் என நினைத்துக் கொள்வீர்களா?” என்று கேட்டேன்.

உடலில் எப்படி சாதாரண சளி முதல் மிகத் தீவிரமான புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதோ, அதே போல்தான் மனதிலும் சாதாரண நோய் முதல் மிகத் தீவிரமான நோய்வரை வருவதற்கு வாய்ப்புண்டு.

உடலில் வரும் எல்லா நோய்களும் புற்றுநோய் அல்ல என்பது போலவே மனதில் வரும் எல்லா நோய்களும் தீவிர மனநோய் கிடையாது.

சில மனநோய்களைச் சாதாரண கவுன்சிலிங் மூலமாகவோ அல்லது மிகக் குறைவான மாத்திரைகள் மூலமாகவோ சில நாட்களிலேயே சரி செய்து விடலாம்.சில தீவிர மனநோய்க்கு நீண்ட நாட்கள் வைத்தியம் செய்ய வேண்டும். அவ்வளவு தான் வித்தியாசம்.

தீவிர மனநோய் என்பது வெகு அரிதாகவே ஏற்படக்கூடியது.ஆனால் சாதாரண மனநோய் பிரச்சினைகள், கிட்டத்தட்ட நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயமாக வரக்கூடியது.

அதே போல மனநோயாளிகள் எல்லோரும் எப்போதும் குழப்பமாகவும், தொடர்பில்லாமல் பேசிக் கொண்டும், எல்லோருக்கும் ஆபத்தானவர்களாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் தவறானது.

தீவிர மனநோய் உள்ள நோயாளிகளில் யாராவது ஒன்றிரண்டு பேர் அப்படி இருக்கலாம்.அதை நாம் பொதுமைப்படுத்த முடியாது.

என்னைப் பொறுத்தவரையில் சக மனித வெறுப்பும், வெறிச்செயல்களும், வன்முறைகளும் மனநல மருத்துவமனையின் வெளியேதான் நடக்கின்றன.

உண்மையில் மனநோயாளிகள் ஒரு நோயின் பேரால் புறக்கணிக்கப்பட்டவர்கள். சக மனித அன்பிற்காகவும், அவர்களின் நியாயமான புரிந்து கொள்ளுதலுக்காகவும் ஏங்கிக் கொண்டிருப்பவர்கள்.

நாம் உண்மையில் புறக்கணிக்க வேண்டியது மனநோய் பற்றி நாம் கொண்டிருக்கும் இந்தத் தவறான நம்பிக்கைகளைத் தானே தவிர மனநோயையோ அல்லது மனநோயாளிகளையோ அல்ல.

ஏனென்றால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம்கூட மன நோயாளியாக இருந்தவர்கள் அல்லது இருக்கப்போகும் வாய்ப்புள்ளவர்கள்தான்.