
தொடர் – 3
செலின் ராய்,
உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர்.
நான் அலசி, ஆராய்ந்து தேடிப்பார்த்ததில் பதின் வயது இளைஞர்களுக்குப் பாலியல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தரும் ஒரு திரைப்படத்தைக் கண்டுபிடித்தேன்.2014 ஆம் வருடம் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த ‘The secret of sex’ என்ற திரைப்படம்தான் அது. இந்தத் திரைப்படம் குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய பாலியல் கல்வியையும், அவர்கள் இந்த விஷயத்தில் கவனமில்லாமல், விழிப்புணர்வில்லாமலிருந்தால் என்னவிதமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைக் குறித்தும் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறது.
தன்னுடன் பள்ளியில், ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் சக மாணவனால், ஒரு மாணவி கர்ப்பமாகி விடுவதன் பின் விளைவுகள் மிகவும் விளக்கமாக அந்தத் திரைப்படத்தில் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கும். இருவருக்குமே அவர்களது குடும்பத்தில் சரியான பாலியல் கல்வியைப் புகட்டாததால் ஏற்பட்டுள்ள விளைவுகளைப் பற்றியும், அதனால் அவர்கள் சந்திக்க நேரிடும் நிதர்சனப் பிரச்னைகளைப் பற்றியும் இத்திரைப்படத்தில் விலாவாரியாகக் காட்டப்பட்டிருக்கும்.
அத்துடன் அறிவியல் மற்றும் உடல்சார்ந்த ஆண்,பெண் இருவரது இனப்பெருக்க உறுப்புக்கள், ஹார்மோன்கள் எனப் பலவிஷயங்களைத் தகுந்த வரைப்படங்களின் மூலம் விளக்கியிருப்பார்கள். ஆனாலும், இவையெல்லாம் அந்தத் திரைப்படத்தில் வரும் ஒரு பாகம்தான்.முழுப் படத்தையும் குழந்தைகளோ அல்லது பதின் பருவத்தினரோ பார்க்கப் பரிந்துரை செய்ய முடியாது.
வேண்டுமானால், பெற்றோர் அந்தத் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு,அதில் சில காட்சிகளை மட்டும் அவர்களது பிள்ளைகள் பார்க்கும்படி ‘எடிட்’ செய்து காட்டலாம்.
பதின் பருவத்திலிருக்கும் ஆண் குழந்தைகளுக்கு, எப்படி அவர்கள் வயதிற்கு வருவதைப் பற்றி எதுவுமே சொல்லித்தரப்படவில்லையோ,அதே போல்தான் திருமணமாகி குழந்தைகளையும், பேரன் பேத்திகளையுமே கூடப் பெற்றெடுத்து விட்ட நாற்பது, ஐம்பது, அறுபது வயதைக்கடந்து வந்து விட்டப் பல ஆண்களுக்கும் கூட, “ஆண் மெனோபாஸ்” என்ற ஒரு விஷயமிருப்பதே தெரியவில்லை.
இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள்தான். பெரும்பாலான பெண்களுக்கு “மெனோபாஸ்” என்ற வார்த்தை தெரியாவிட்டாலும் கூட, “ஒரு குறிப்பிட்ட
வயதில் தனக்கு வந்துகொண்டிருக்கும் மாதவிடாய் நின்று போய்விடும்.அதன் பிறகு, உடலுறவில் ஈடுபட்டாலும் தனக்குக் குழந்தை பிறக்காது” என்ற அளவிலாவது இதைபற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

மெனோபாஸ் அடையும் நிலையில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களைப் பற்றி அறிவியல் ரீதியாகத் தெரியாவிட்டாலும், அவளுக்கு அப்போது தனது உணர்ச்சிகளில் ஒரு அசாதாரணமான ஏற்ற இறக்கமும்,சீரற்றத் தன்மையுமிருக்கும், தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் கடும் கோபம் இருக்கும், எப்போதும் “சிடு சிடு” வென இருப்பாள். அதனால், அவளைப்புரிந்து கொண்டு, அவளுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்ற அளவிற்காவது தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
பெண்கள் மீதுள்ள அக்கறையில் இல்லாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் அவர்களை மட்டம் தட்டுவதற்காவது இந்த வார்த்தையை அவளது குடும்பத்தினர்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படியாவது “மெனோபாஸ்” என்ற அந்த வார்த்தை நம் சமூகத்தில் புழக்கத்திலாவது இருக்கிறது.தன் குழந்தைகளையோ, தன் கணவனையோ அந்தப் பெண், மிக மிக நியாயமான காரணங்களுக்காகக் கோபித்துக்கொண்டாலும் கூட,திட்டினாலும் கூட, “உனக்கு மெனோபாஸ் வந்திருச்சில்ல.அதான் சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும், இப்படிக் காரணமில்லாம கத்திட்டிருக்க. கத்தாதம்மா” என்று அந்த “மெனோபாஸ்” என்ற ஒரே ஒரு காரணத்தைச் சொல்லி, வார்த்தையைச் சொல்லி அவளை அடக்கி விடுகிறார்கள்.அவளது வாயை மூடச் செய்து விடுகிறார்கள்.
அந்தப் பெண்ணணுக்கு அவள் பேசியது, தான் கோபப்பட்டது அல்லது திட்டியதெல்லாம் மிகச்
சரிதான் என்று தெரிந்தாலும் கூட,ஒரு காலகட்டத்தில் அவளே குழம்பிப் போய் நிற்கிறாள்.ஒருவேளை “தன் குடும்பத்தினர் சொல்வது சரிதானோ? ஒருவேளை,தான் அவர்களைக் கடிந்து கொண்டதற்கு, தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த “மெனோபாஸ்தான் காரணமோ?” என்றெல்லாம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டு மிகுந்த மனக்குழப்பத்திற்குள்ளாகி விடுகிறாள்.
ஆனால், ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் என் அன்பு நெஞ்சங்களே…. என் அன்புத் தோழிகளே… ஒரு பெண்ணிற்கு அவளது “மெனோபாஸ்” நிலையில் ஏற்படும் உணர்வுரீதியிலான தடுமாற்றங்களுக்கும், எரிச்சலுக்கும், கோபத்திற்கும் அவளது உடல் நிலையிலும், ஹார்மோனிலும் ஏற்படும் மாற்றங்களை விட, “ஆண் மெனோபாஸ் நிலையிலிருக்கும் அவளது கணவனின் முரண்பாடான மனநிலையாலும், செயல்களாலும் ஏற்படும் பாதிப்புக்களும்
வெளிப்பாடுகளும்தான் அதிகம்.” அதனால் ஏற்படும் உணர்வுநிலை, உடல்நிலை மாற்றங்களும்தான் பெண்களை எதிர்வினை புரியவைக்கிறது. ஆனால்,அந்தக் குடும்பத் தலைவியின் பதில்வினைக்கு அடிப்படைக் காரணமான “ஆண் மெனோபாஸ்” நிலையிலுள்ள அவள் கணவனின் செயல்களை இந்தச் சமூகம் ஒப்புக்கொள்வதில்லை அல்லது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, அதைக் கண்டுகொள்வதில்லை. மாறாக அந்தக் குடும்பத்தலைவியின், “அவள் கணவனின் செயல்களுக்கு எதிராகப் புரிந்த பதில்வினைகள்” மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டு மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. பகிரங்கப்படுத்தப் படுகின்றன. “மெனோபாஸ்” என்பதே ஒரு “நோய்” போலவும், பெண்களை அந்த “உடல் – மன நோய்க்கு’ உள்ளாகியிருக்கும் நோயாளிகளைப் போலவும் சித்தரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
ஆணாதிக்க மனோபாவமுள்ள இந்தச் சமூகம்,ஒரு பெண் “மெனோபாஸ் நிலையை அடைவதுதான்” ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, குடும்பங்களில் நிகழும் எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்று தொடர்ந்து பறைசாற்றிக்கொண்டே வருகிறது.அப்படி ஒரு பிரமையை காலங்காலமாக ஏற்படுத்திக்கொண்டே வருகிறது.மிகத் தவறான, உண்மைக்குப் புறம்பான இப்படியொரு பிரச்சாரத்தை இந்தச் சமூகம் தொடர்ந்து செய்துகொண்டே வருகிறது.(False propaganda)
இப்படி வரிந்துகட்டிக்கொண்டு, “பெண் மெனோபாஸைப் பற்றி” மாங்கு மாங்கென்று அவள் தும்மின்னலும், இருமினாலும் பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சமூகம், ” முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து வைப்பதைப் போல”, “ஆண் மெனோபாஸ்” என்ற வார்த்தையையே சாமான்ய மக்களுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கு ஏற்படுவதைப் போல, மாதா மாதம் இரத்தப்போக்கு ஏற்படுவதும்,பிறகு அது நின்று போவதும் பகிரங்கமாக, வெளிப்படையாக நிகழாமலிருப்பதால், “ஆண்களுக்கு மெனோபாஸ் என்றே ஒன்றில்லை…” என்று ஆணாதிக்க மனப்போக்குள்ளவர்கள் அடித்துப் பேசி வாதாடியிருக்கிறார்கள்.”
இந்த விஷயத்தைப் பற்றி ஏன் இதுவரை யாரும் அறிவுப்பூர்வமாக விவாதிக்கவில்லை, கேள்வியெழுப்பவில்லை என்று நினைத்துப் பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவுமிருக்கிறது.
சரி, இப்போது நான் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன்.ஒரு ஆண் வயதிற்கு வருவது அல்லது பெரியவனாவது என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? அவனுக்கு ஆரோகியமான விந்தணுக்கள் உருவாவதையும், அதை ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துமளவிற்கு
அவனுக்கு அவனது ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை ஏற்படுவதையும்தானே..?
இவற்றை அடிப்படையாக வைத்துத்தானே ஒரு ஆண் வயதிற்கு வந்து விட்டான்,அல்லது பெரியவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறீர்கள்.
அப்படியென்றால்,ஒரு பெண்ணிற்கு அவளது பிறப்புறுப்பிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுவதையும்,ஒரு ஆணிற்கு அவன் உடலில் விந்தணுக்கள் உற்பத்தியாவதையும்,அவனது ஆணுறுப்பு விறைப்பாவதையும் அடிப்படையாக வைத்து, இருபாலருக்கும் பொதுவாக”வயதிற்கு வருதல்”என்று குறிப்பிடுகிறார்கள். சரிதானே?
40 இலிருந்து 45 வயதிற்குள் ஒரு ஆணின் உடலில் உருவாகக்கூடிய விந்தணுக்களின் எண்ணிக்கையும்,அதன் வீரியத்தன்மையும் அவனது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையும் குறைந்துவிடத் தொடங்கி விடுகிறது.இதனால்
அவனுக்கு ஒரு பெண்ணைக் கருவுறச் செய்தலில் சிக்கல் ஏற்படுத் தொடங்குகிறது என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. (Ref:betterhealth.vic.gov.au)
ஆண், பெண் இருவருக்குமே அவர்கள் வயதிற்கு வந்த உடனேயே,அல்லது அதற்குக் கொஞ்சம் முன்போ அல்லது கொஞ்சம் பின்போ எதிர்பாலினத்தவரின் மீது ஈர்ப்பு வருதல்,காதல், கத்தரிக்காய் எல்லாமே பொதுவாகத்தானே ஏற்படுகிறது. இருபாலினத்தினருக்குமே ஏற்படும் காமம் குறித்த ஆசைகளும், தேவைகளும், உணர்வுகளும் ஒரே சமயத்தில், ஒரே வயதில்தானே ஏற்படுகின்றன…? குழந்தைப் பிறப்பிற்கான உடல் தகுதியும் இருவருக்குமே ஒரே வயதில்தானே ஏற்படுகிறது…? இந்த வயதிற்கு வரும் நிகழ்விற்குப் பிறகுதானே இருபாலருக்குமே ஒரேசமயத்தில்,ஒரே வயதில் ஒரு குழந்தையை உருவாக்கும் உடற்தகுதியும் ஏற்படுகிறது..?
இவையெல்லாமே… மேற்சொன்ன இந்த உடல் மாற்றங்கள், மனம் மற்றும் உணர்வுகள் சார்ந்த காதல் உணர்ச்சிகள் எல்லாமே… ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே வயதில் நிகழும்போது… முப்பத்தைந்து வயதிற்குமேல் என்று வரும்போது பெண்ணுக்கு மட்டும் அவள் உடலிலும், மனதிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டு, ஆண் அப்படியே புத்தம் புதிதாய், என்றும் பதினெட்டாய், அதே இளமைத் துள்ளலுடன் இருப்பானா …? இதை யோசித்துப் பார்க்கும்போதே மிக வேடிக்கையாகவும், இயல்பிற்கும், நிதர்சனத்திற்கும், இயற்கைக்கும் எதிரானதாகவும், உண்மைக்குப் புறம்பான ஒரு விஷயமாக அல்லது கருத்தாகத் தோன்றவில்லை…? எவ்வளவு ஒரு பித்தலாட்டமான, தில்லாலங்கடி வேலையை பெண்களுக்கெதிராக செய்து, ஒரு அறிவியல் உண்மையை, உடலியல் உண்மையை, உளவியல் உண்மையை அப்படியே பூசி, மெழுகி மழுங்கடித்திருக்கிறார்கள்..?
ஒரு பெண்ணும், ஆணும் தாங்கள் வயதிற்கு வரும்போது எவ்வாறு இருவருமே குழந்தைப் பெற்றெடுக்க உடல் ரீதியில் தயாரானவர்களாகிறார்களோ, அவர்கள் மனநிலையில் எத்தகைய மாற்றங்கள் பொதுவாக ஏற்படுகின்றனவோ,அதே போல் ஒரு பெண்ணுக்கு “மாதவிடாய்” நிற்கும் காலகட்டத்தில், அந்த வயதில் அவள் மனநிலையில் மாற்றங்களும், குழந்தை பெற்றெடுக்கத் தகுதியற்ற தன்மையும் ஏற்படுகிறதென்றால், அதே போன்ற நிலைதானே அந்த வயதில், அந்தக் காலகட்டத்தில் ஆணுக்கும் நிகழும்… ? அப்படியென்றால், ஒரு பெண்ணிற்கு அவள் பிறப்புறுப்பிலிருந்து வரும் உதிரப்போக்கு நின்று விட்டவுடன் அதை, “மெனோபாஸ்” என்று அழைக்கும் நீங்கள் அவனது உடலில் “விந்தணுக்களின் எண்ணிக்கையும் வீரியமும் குறையும் போது, பலருக்கு விந்தணுக்களின் உற்பத்தியே நின்றுவிடும் சமயத்தின் போது, பெண்ணைக் கருவுறச்செய்ய முடியாதவாறு அவனது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையே
ஒரு காலகட்டத்தில் குறைந்து போய், செயலற்று விடும்போது” அதை என்னவென்று பெயரிட்டு அழைப்பீர்கள்..? அந்த நிலைக்குப் பெயரேதும் கிடையாதா?
அந்த நிலைக்குத்தான்,”ஆண் மெனோபாஸ்” என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்த விஷயம், ” பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்” நிலையைப் போல் பகிரங்கப்படுத்தப்படாததால்., வெளிப்படையாகப் பேசப்படாததால், எப்படி ஒரு ஆண் தான் வயதிற்கு வரும்போது, அது தனக்கு மட்டுமே நிகழக்கூடிய ஒரு விஷயம் என்று நினைத்துப் பயப்படுகிறானோ அதேபோல் இந்த “ஆண் மெனோபாஸ்” நிலையை அடையும்போதும், அதைக் கண்டு பயந்துதான் போகிறான்.பலவிதமான குழப்பங்களிலும், தாழ்வுமனப்பான்மையிலும் சிக்கித் தவிக்கத் தொடங்கி விடுகிறான்.
ஆம்பளைங்கள்லாம், சிங்கம் மாதிரிடா… புலி மாதிரிடா… ஜல்லிக்கட்டு காளை மாதிரிடா…எனச் சொல்லி சொல்லி வளர்த்து, அவன் மனிதன் என்பதையே முழுவதுமாக மறக்கடித்துவிடுகிறார்கள்.ஒரு மனித உடலில் ஒவ்வொரு வயதிலும் என்னென்ன மாற்றங்கள் வரும்,அதனால் அவன் மனநிலை ஒரு நிலையாகயில்லாமல் எப்படித் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும்,அதை அவன் தன் துணைவியின் தலையில் சதா கொட்டிக்கொண்டிருக்காமல், தானே எப்படி அவற்றைச் சமாளித்துக்கொண்டு அவளையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத்தராமலேயே வளர்த்துவிடுகிறார்கள். பிறகு,அவனுக்குத் திருமண வயது வந்ததும், “சிக்குச்சுடா பலியாடு…” என்று எவளோ ஒருத்தியின் தலையில் அவனை ஒரு மாடாகவோ, சிங்கமாகவோ, புலியாகவோ கட்டிவிடுகிறார்கள். இதனால்தான் பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கையை
ஒரு மனிதனோடு வாழாமல், காலம் முழுவதும் இந்த உயிரினங்களை மேய்த்துக்கொண்டேயிருந்துவிட்டு,நேரம் வரும்போது போய்ச்சேர வேண்டியதுதான் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
“நாங்கள்லாம் சாகற வரைக்கும் எத்தனைக் குழந்தைகளை வேணும்னாலும் அசால்ட்டாத் தந்துட்டே இருப்போம் தெரியுமா?” என வாய்ச்சவடால் பேசி, ஏதோ பெண்களுக்குக் தங்கள் கடைசி மூச்சு இருக்கும் வரை குழந்தை வரத்தைத் தந்து கொண்டேயிருக்கும் கடவுள்களைப் போன்ற ஒரு பிரமையை இளைஞர்களுக்குத் தொடர்ந்து கற்பித்துக்கொண்டேயிருக்கிறார்கள் வயதான பிற ஆண்கள்.இந்த இளைஞர்களும் அவற்றையெல்லாம் உண்மை என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதில், தாங்கள் தங்கள் உடலைப் பற்றிக் கேட்டு வளர்ந்த விஷயங்களுக்கும், இப்பொழுது உண்மையாக நடந்துகொண்டிருக்கிருப்பதற்கும் கொஞ்சம் கூட
தொடர்பேயில்லையே என்று இந்த இளைஞர்கள் குழம்பிப் போய்விடுகிறார்கள். அதேபோல்தான் பெரும்பாலான பெண்களின் நிலையும் இந்த விஷயத்தில் இப்படித்தானிருக்கிறது. “ஒரு ஆண் அவனது கடைசி மூச்சுவரை சகலவிதமான உடற்தகுதிகளுடனும், ஆரோக்கியமான மனநிலையுடனுமிருப்பான்…” என்று சொல்லிச்சொல்லியே ஒரு பெண் வளர்க்கப்படுகிறாள்… ஆனால், ஒரு காலகட்டத்தில், அவர்கள் சொன்னவற்றிற்கெல்லாம் நேர்மாறாக நடக்கும் போது, “தன் கணவனுக்கு மட்டும்தான் இப்படிபோல…” என்று நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறாள். என்னதான் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் கூட, “என் வீட்டிலும் இப்படித்தாண்டி…” என்று சக தோழிகள் இந்த விஷயத்தைப்பற்றிப் பகிரங்கமாகப் பேசிக்கொள்வதில்லை. அல்லது யாரவது தகுந்த நிபுணர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி ஆலோசனை கேட்பதையெல்லாம் ஒருபோதும்
செய்வதேயில்லை. மேற்கத்திய நாடுகளில் இந்த “ஆண் மெனோபாஸ்” நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நிறைய முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறார்கள். அதை எப்படி இருபாலரும் சமாளிப்பது என்பதைப் பற்றியும் நிறையப் பேசுகிறார்கள்.பலப் பயிலரங்குகளை நடத்துகிறார்கள்.ஆனால், நம் ஊரில் இந்த விஷயம் இன்னும் ஒரு மூடுமந்திரமாகவேதானிருக்கிறது.
இந்தத் தொடரைப் படித்துக்கொண்டிருக்கும் ஆண்களும், பெண்களும் இந்த “ஆண் மெனோபாஸ்” என்ற விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இந்தக் கட்டுரைகளைக் கொடுத்துப் படிக்கச் செய்யுங்கள் அல்லது பலருக்கும் நான் இந்தத் தொடரில் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயங்களைப் பேசி உணர்த்துங்கள். நிச்சயமாக, அடுத்த தலைமுறையாவது ஆரோக்கியமாக வளரும்!
இந்தத் தொடரைப்பற்றிய உங்களது கருத்துக்களையும், சந்தேகங்களையும்
celinroyslifestyle இன்ஸ்டாகிராம் ஐடியிலோ, celinroyslifestyle/ lifeskills என்ற யூடியூப் சேனலின் மூலமோ, feedbacktocelinroy என்ற இமெயில் வழியாகவோ என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றிற்கான பதில்களும், விளக்கங்களும் இந்தத் தொடரின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கண்டிப்பாக இணைக்கப்படும்.(தொடரும்)

