
டாக்டர்.ஆர்.பரமேஸ்வரன்,
உளவியல் நிபுணர்.
தாழ்வு மனப்பான்மை என்பது என்ன…அதை எப்படி எதிர்கொள்வது? வெற்றியாளராக வாழ்வது எப்படி?
ஏதேனும் சில அனுபவங்களின் வாயிலாக நம்மைப் பற்றி நாமே தாழ்வாக நினைத்துக் கொள்ளும் மனநிலையே தாழ்வு மனப்பான்மை. பொதுவாகவே எல்லோருக்கும் சில நேரங்களில் இந்த மனப்பான்மை சில செயல்களைச் சார்ந்து வருவது உண்டு; அது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல.
தாழ்வு மனப்பான்மை என்பது சில சந்தர்ப்பங்களில், சில சூழ்நிலைகளில் வரும் வரையில் அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் பொதுவாகவே எப்போதும் எந்தச் செயல்களை செய்ய நினைக்கும்போதும் இந்த தாழ்வு மனப்பான்மை வந்துகொண்டே இருந்தால் அது நம்மை வெகுவாகப் பாதிக்கும்.அதை உடைத்து தகர்த்து மேலே வர திட்டமிட வேண்டும்.
ஒரு செயலில் இறங்குவதற்கு மிக முக்கியமான தேவை, அதன் நிமித்தம் நமக்கு இருக்க வேண்டிய ஆர்வமும், ஈடுபாடும்.ஒருமுறை ஒரு செயலைச் செய்யும்போது அதை நம்மால் சிறப்பாகச் செய்ய முடியவில்லை என்றால் அதை மீண்டும் மீண்டும் முயற்சிப்பது அவசியம். அந்த முயற்சிகளின் வழியாக நாம் அந்தச் செயலை இன்னும் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான பண்புகளைக் கற்றுக் கொள்கிறோம்.
ஒவ்வொரு முறை ஒரு தோல்வி நிகழும்போதும் அதன் காரணங்களை நாம் திறந்த மனதோடு பரிசீலிக்கும்போது அந்தக் காரணங்களை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்கிறோம். அதனால் மறுமுறை அதே செயலை முன்னைவிட சிறப்பாகச் செய்வதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஒரு கட்டத்தில் அந்தச் செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும்போது அது மிகப்பெரிய புத்துணர்ச்சியை நமக்குக் கொடுக்கும். நம்மீது புது நம்பிக்கைகளை ஏற்படுத்தும். நமக்கே தெரியாத நமது சிறப்பான பண்புகளை அதன் வழியே நாம் கண்டுகொள்ளலாம். ஒரு தொடர்ச்சியான தாழ்வு மனப்பான்மையிலிருந்து இப்படித்தான் நாம் வெளியேற முடியும். எதன் நிமித்தம் நமக்கு இந்த
மனப்பான்மை வருகிறது என்பதைக் கண்டறிந்து அந்தச் செயலை அதிக கவனத்தோடும், அதிக ஈடுபாடுடனும் செய்யும்போது மட்டும்தான் நாம் இந்த மனப்பான்மையில் இருந்து வெளிவர முடியும். அதேபோல நம்மை நம்மால் முழுமையாக உணர்வதற்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை எடுப்பது அவசியம்.
உதாரணத்திற்கு உங்களைப் பற்றி, உங்களது பலம், உங்களது பலவீனம் போன்றவற்றைப் பற்றி முழுமையாக உணர்ந்து இருந்தால், அதற்கு ஏற்றவாறு நாம் செய்ய வேண்டிய செயல்களை நாம் திட்டமிட முடியும். நமது பலவீனங்களை நாம் ஏற்றுக்கொள்ளாமல் நம்மால் எதையும் திட்டமிட முடியாது.
நம்முடைய பலம் பலவீனம், போன்றவற்றைப் பொறுத்து நம் செயல்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதை நம்மால் முழுமையாக செய்து முடிக்க முடியும்; அப்படி செய்து முடிக்கும்போதே நம்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கைகள் அதிகமாகும். அதன் வழியாக அந்தச் செயலின்மீது ஆர்வமும், ஈடுபாடும் இயல்பாகவே ஏற்படும். அதன் பிறகு எப்போது அந்தச் செயலை செய்யக் கொடுத்தாலும் நம்மால் அதை வெற்றிகரமாகச் செய்து விட முடியும்.
ஒருவேளை நம்மை நாம் முழுமையாக அறிந்து கொள்ளாவிட்டால் அல்லது நமது பலவீனங்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளாமல் ஒரு செயலை திட்டமிடும் போது, நமது பலவீனங்களே அந்த செயலை செய்து முடிப்பதில் மிகப்பெரிய தடங்கலாக வந்து நிற்கும்; அதனால் அந்தச் செயலை நம்மால் முழுமையாக செய்து முடிக்க முடியாது. அது நம் மீதான நம்பிக்கையின்மையை மற்றவர்களுக்கும் ஏற்படுத்தும், நமக்கும் ஏற்படுத்தும்.
திரும்ப இந்தச் செயலை செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் அந்த சூழ்நிலை நமக்கு மிகப் பெரிய மன உளைச்சலைக் கொடுக்கும். நம்மீதான தன்னம்பிக்கையைக் குறைக்கும். அதனால்
நாம் அதில் பெரிய முனைப்பு காட்டத் தயங்குவோம். அந்தச் செயலின் மீதான ஈடுபாடு ஆர்வம் போன்றவை குறைந்து போய் அது பயத்தையும், பதட்டத்தையும் நமக்குக் கொடுக்கும். இந்த பயமும், பதட்டமும்தான் தாழ்வு மனப்பான்மையை நமக்குள் ஏற்படுத்தும்.
எப்போதும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் ஒருவர் அதிலிருந்து வெளியேறச் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், நம்மைப் புரிந்து கொள்வது, நமது பலவீனங்களை ஏற்றுக்கொள்வது, அதற்கு ஏற்றாற்போல நாம் செய்ய வேண்டிய செயல்களைத் திட்டமிடுவது. தொடக்கத்தில் சுலபமான செயல்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நம்மால் அதை எளிமையாகக் செய்து முடிக்கமுடியும். அதன் விளைவாகக் கிடைக்கும் நம்பிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட செயல்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தாழ்வு மனப்பான்மையை எளிதாக கடக்க வேண்டும்… கடக்க முடியும்.திரும்பத் திரும்ப பயிற்சியும் முயற்சியும் எடுத்தால் சாதனையாளராக சாதிக்க முடியும்.

