
– டாக்டர் எம்.செந்தில்குமார்.
மனதுக்கும், மூளைக்கும் தான் இன்று அதிகப்படியான வேலை. காலை முதல் மாலை வரை அலுவலக சீட்டில் ஆணி அடித்தாற் போல் உட்காருவதன் விளைவு, உடல் உழைப்பு என்பதே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது.இதனால் போதிய உடற்பயிற்சி இல்லாமல்,பல்வேறு உடல் உபாதைகளுக்கு நாம் உள்ளாகி தவிக்க வேண்டிய நிலை.
உடற்பயிற்சிதான் நம் உடலைக் கட்டு கோப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.சரிவிகித உணவு மற்றும் முறையான உடற்பயிற்சிக்கு உடலைப் பழக்கப்படுத்திவிட்டால், மிடுக்கான தோற்றத்தையும், நோய் நொடி இல்லாத வாழ்வையும் பெறலாம். உயிரைக் குடிக்கும் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், புற்றுநோய் மற்றும் எலும்புகளின் உறுதியைக் கெடுக்கும் ஆஸ்டியோ போரோஸிஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களை குறைப்பதிலும், தடுப்பதிலும் உடற்பயிற்சியைத் தவிர வேறு சிறந்த வழிகள் இல்லை.
அவசர வாழ்வு வாழும் நமக்கு ஆரோக்கியம் அவசியம்.ஆனால் அலட்சியத்தால் நோய் வந்தபின் தான் உணர்கிறோம்.
உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சத்து தன்னிடம் இல்லை என்றும்,செய்தால் சக்தி விரயமாகி சோர்வடைவோம் என்றும் கூறுவர்.ஆனால் சிறு சிறு பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தால்,சில நாட்களிலேயே உடல் வலிமைப் பெறுவதை உணரலாம்.உடற்பயிற்சி செய்ய நினைப்பவர்கள் ஜிம் சென்று தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலிருந்தே எளிய முறையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே ஆரோக்யம் அருகில் தான்.உடலுக்கு உறுதி தருவதோடு மட்டுமல்ல மனதுக்கு உற்சாகத்தையும் பாய்ச்சும். உடற்பயிற்சியை ஆர்வத்துடன் செய்ய வேண்டும்.வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தை ஆர்வமாக செயல்படுத்த வேண்டும். முதலில் 10 நிமிடம் என தொடங்கி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை படிப்படியாக உயர்த்த வேண்டும்.
உடற்பயிற்சியின் பலன்கள்
* தினமும் உடற்பயிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மற்றவர்களிடமிருந்து இருமல்,சளி,தும்மலால் வெளியேறும் கிருமிகள் நம்மை அண்டவிடாமல் தடுக்கலாம்.
* வயதாக ஆக நம் எலும்பில் தேய்மானம் ஏற்படும். இதனால் எலும்பில் வலிமை குறைந்து போய்விடுகிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியின் மூலம் தான் எலும்பு தேய்மானம் அடையாமல் தவிர்க்கலாம்.
* உடற்பயிற்சி செய்வதால், எலும்பு மூட்டு மற்றும் தசைநார்கள் நன்றாக பலப்படுகிறது. தசைகளில் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் எந்த ஒரு பொருளையும் அசால்டாக தூக்கி கையாள முடியும்.
* கரடு முரடான பாதையில் நடந்து செல்லும் போது சட்டென கால் இடறினாலும் தசைபிடிப்பு போன்ற பிரச்சினைகள் பெரும்பாலும் வராமல் தடுக்கலாம்.
* அலுவலகத்தில் அதிக நேரம் தொடர்ந்து பணிபுரிந்தாலும் சோர்வு என்பதே தெரியாமல் உடலின் செயல் திறன் மேம்படும்.
* உடல் உறுப்பு சேதமானால் தான் ஊனம் என்பதில்லை.நடை, உடை பாவனையில் மாறுதல் ஏற்படுவதும் ஒருவித ஊனம் தான்.தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் உடல் ஊனமும் தடுக்கப்படும்.
* மூட்டுவலி பிரச்னையால் சிலர் அவதிப்படும் போது, ஒட்டு மொத்த உடலின் எடையும் ஒரே காலில் கொண்டு வந்து சாய்ந்தபடி, விந்தி விந்தி நடப்பார்கள். உடற்பயிற்சி செய்வதால் தசைநார்கள் வலிமை அடைந்து இது போன்ற பாதிப்பு வராமல் தடுக்கலாம்.
* உடம்பில் தேவையில்லாத கொழுப்பு வயிற்றுப் பகுதியில் தேங்கி, தொப்பை விழுந்து விடும்.தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே போதும். இதனால் வயிறும் குறைந்து அழகிய கம்பீர தோற்றத்தை பெற முடியும்.
* புற்று நோய் திசுக்களையும் உடற்பயிற்சி கட்டுப்படுத்துகிறது. முறையான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது புதிய திசுக்கள் உருவாகி வளர்ச்சி அடைவதால் புற்றுநோய் திசுக்கள் படிப்படியாக அழிந்து விடும்.
* இதமான உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் குறைந்து, எந்த வேலையையும் எளிதாக செய்யக்கூடிய அளவுக்கு, உடலில் தெம்பையும், புத்துணர்வையும் எப்போதும் தக்க வைக்கலாம்.
* உடற்பயிற்சி செய்வதால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.மனம் அமைதியாக இருக்கும்.இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும்.
* உடல் பருமனை குறைத்து உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்க உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவும் கூட.
* உடற்பயிற்சி செய்துவந்தால் பல விதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாக்கப்படும். பரம்பரையாக இதய நோய் இருந்தாலும் தொடர் பயிற்சியால், வரக்கூடிய பிரச்னைகளைத் தள்ளிப்போட்டு ஆரோக்யமான வாழ்வை வாழலாம்.
* சீரான முறையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் தசைகளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும் போது ரத்தக் குழாய்கள் விரிவதால் உயர் ரத்த அழுத்தம் வருவதை தடுக்கலாம்.
* சில வகை உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல் நலத்திற்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. உதாரணத்திற்கு விபத்துகளால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தருவதே இந்த உடற்பயிற்சிகள் தான்.
உடற்பயிற்சி செய்தால் கட்டுமஸ்தான உடலமைப்பு, உறுதியான தசைகள் மற்றும் ஆரோக்கியமான உடல் என பலவகையான பலன்கள் கிடைக்கும்.இது மட்டும் அல்ல.டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடந்த ஆய்வு ஒன்றில், “உயிரணுக்களின் சக்தியை முறைப்படுத்தும் மரபணுக்களை உடற்பயிற்சி தூண்டுகிறது” என்று கண்டறியப்பட்டிருக்கிறது.உடற்பயிற்சி செய்வதால் அப்பா ஆகும் தகுதியும் அதிகரிக்கிறது.எனவே நாளை நாளை என்று தள்ளிப் போடாமல் உடனே இன்றே தொடங்குங்கள் உங்கள் உடற்பயிற்சியை.இதனால் மருத்துவ செலவுகள் குறையும்.மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.ஆயுள் கூடும்.

