
ஆண்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரன். பெண்களுக்கு நெற்றியில் வலது புறத்தில் மச்சம் இருந்தால் துணிச்சலான பெண்ணாக இருப்பாள்.நெஞ்சில், கையில்,இடுப்பில் மச்சம் இருந்தால் சாமுத்திரிகா லட்சணம் சொல்லும் ரகசியங்கள் என்று பெரிய பட்டியல் போட்டு சொல்வார்கள்.சில பேர் இதை நம்பி, இந்த இடத்தில் மச்சம் இருந்தால் இப்படிப்பட்ட வராகத்தான் இருப்பார் என்று தவறாக கணிப்பதும் உண்டு.ஏமாந்து நொந்து போவதும் உண்டு.
மருத்துவ அறிவியல் உலகம் இந்த நம்பிக்கைகளை ஏற்கவில்லை.
நாம் பிறக்கும்போது நம்முடன் சேர்ந்து பிறக்கிறது மச்சம்.இதை கடைசிவரை அழிக்க முடியாது.இதனால்தான் மச்சத்தை நம் உடலின் அங்க அடையாளமாக வைத்திருக்கிறார்கள். தோலின் டெர்மிஸ் பகுதியில் மொத்தமாக குவிக்கப்பட்ட மெலனின் நிறமிகள்தான் மச்சம் என்று அழைக்கப்படுகிறது.
இதில் மொத்தம் 36 வகைகள் உள்ளன.ஒரு புள்ளி அளவிலும் மச்சம் இருக்கும்.உள்ளங்கை அகலத்துக்கும் மச்சம் இருக்கும்.பொதுவாக மச்சத்துக்குப் பயப்பட வேண்டியதில்லை. ஆனால்,சாதாரணமாக இருந்த மச்சமானது திடீரென்று அளவில் பெரிதானால், அரிப்பு ஏற்பட்டால்,அதிலிருந்து ரத்தம் வடிந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.காரணம், அது புற்றுநோயாக இருக்க வாய்ப்பு உண்டு. மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது முக்கியம்.

