தூங்கும்‌ நேரம்‌ முழுவதும்‌ தலையை ஒரே நிலையில்‌ வைத்துக்கொள்வது முடியாத காரியம்‌. எப்படியும்‌ புரள வேண்டியது வரும்‌. அடிக்கடி புரண்டால்‌ கழுத்துத்‌ தசைகள்‌ சோர்வடையும்‌. அதைத்‌ தடுக்கத்‌ தலையணை உதவும்‌. ஆனால்‌, அதைத்‌ தவறாகப்‌ பயன்படுத்தும்போதுதான்‌ அது கழுத்துக்குக்‌ ’கத்தி’யாகி விடுகிறது. சிலர்‌ தலையணையை மடித்துக்‌ கொண்டு, அதில்‌ கழுத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு தூங்குகின்றனர்‌. இன்னும்‌ சிலர்‌ படுக்கையில்‌ தலையணைக்‌ கடையையே விரித்து விடுகின்றனர்‌. தலைக்கு, நெஞ்சுக்கு, முதுகுக்கு, இடுப்புக்கு, காலுக்கு எனத்‌ தனித்தனியாகத்‌ தங்கள்‌ இஷ்டத்துக்குத்‌ தலையணை வைத்துக்கொள்கின்றனர்‌. தவிர, தலையணையே இல்லாமல்‌ தரையில்‌ படுத்துக்‌ கொண்டால்‌ கழுத்துவலியே வராது என்றும்‌, கனமான தலையணைதான்‌ நல்லது என்றும்‌ இலவச ஆலோசனைகள்‌ கிடைப்பதுண்டு. பொதுவாக, காற்றுத்‌ தலையணை’ ஆகாது. மிருதுவான, அதிக உயரம்‌ இல்லாத, சிறிய அளவிலான பஞ்சுத்‌ தலையணைதான்‌ எல்லோருக்கும்‌ ஏற்றது. அதைக்‌ கழுத்தோடு சேர்த்துத்‌ தலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்‌. இங்கே கழுத்து மடங்கக்‌ கூடாது என்பது முக்கியம்‌.